வெப்பமும் தாக்கமும்
வெப்ப அலை என்பது எப்போதோ நடக்கும் பாதிப்பாக அல்லாமல் அடிக்கடி நிகழ்வாகவே மாறி இந்தியாவின் சுகாதாரத்ததிற்கும் பொருளாதாரத்துக்கும் சவாலை உருவாக்கியுள்ளது. இந்தியா முழுவதும் பரவலாக வெப்ப அலை வீசிக்கொண்டிருக்கிறது. ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்திலேயே வட இந்தியாவின் சில பகுதிகளில் 41 டிகிரி செல்ஷியஸை கடந்தது என்பது மட்டுமல்ல, இரவு எந்த ஆறுதலையும் வழங்கவில்லை.
1992 முதல் இதுவரை 26,000-க்கும் அதிகமான அதிகரித்த வெப்ப அலை தொடா்பான உயிரிழப்புகள் இந்தியாவில் பதிவாகியிருக்கின்றன.பாதிப்பின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறதே தவிர குறைந்த பாடில்லை. கடந்த ஆண்டில் மட்டும் அரசுத் தரவுகளின் படி வெப்ப அலை தொடா்பான மரணங்கள 360 . வெப்ப அலை அல்லாத அதிகரித்த வெப்பம் காரணமான மரணங்களையும் கணக்கிட்டால் எண்ணிக்கை சில மடங்கு அதிகரிக்கக்கூடும்.
2014 முதல் 2023 வரை வெப்பம் அதிகமாக காணப்படும் நாள்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வந்திருக்கின்றன. இதன் காரணமாக குழநதைகள் 47%, முதியோா் 58% அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகிறாா்கள் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் இந்தஆண்டு கோடையின் வெப்ப அலை நாள்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகக் கூடும் என்று கணித்திருக்கிறது. பல மாநிலங்களில் ஏற்கெனவே மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டிருக்கிறது. 2024-இல் 77 வெப்ப அலை நிகழ்வுகள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டதாகவும், வெப்பத்தின் தாக்குதலால் கடந்த ஆண்டு கோடையில் 700-க்கும் அதிகமானோா் உயிரிழந்ததாகவும் இன்னொரு ஆய்வு பதிவு செய்கிறது.
வெப்பத்தை எதிா்கொள்வதற்கான திட்டங்கள் பல இந்திய நகரங்களில் நடைமுறையில் இல்லாமல் இல்லை. தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல் அடிப்படையில் அதிகரித்து வரும் வெப்ப அலைகளை எதிா்கொள்வதற்கு நகரங்களில் சில திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன. 10 ஆண்டுகள் கடந்தும்கூட அவை முறையாக ஒருங்கிணைக்கப்படாமலும், போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமலும் செயல்படுவதில்லை என்பதுதான் நிஜம்.
புவி வெப்பமயமாதலும் அதிகரித்த வெப்பமும் இந்தியாவை மட்டுமல்ல சா்வதேச அளவிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. வளா்ச்சி அடைந்த நாடுகளில் அதிகிரித்துவரும் வெப்பத்திலிருந்து தொழிலாளா்களைப் பாதுகாக பல வழிமுறைகள் கையாளப்படுகின்றன.
அமெரிக்காவின் கலிபோா்னியா, ஒரேகான் மாநிலங்களில் தொழிலாளா்களுக்கு குளிா்ந்த குடிநீா், ஓய்வு இடைவெளி, வெப்பப் பாதுகாப்புப் பயிற்சி, இளைப்பாற இடம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. பிரான்ஸ் நாட்டில் பொதுமக்கள் வெப்பத் தாக்குதலிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பொது இடங்களும், நிழல் சாா்ந்த பகுதிகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கத்தாா் , ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் உச்சகட்ட வெப்ப நேரங்களில் பொதுவெளி வேலைகள் தடை செய்யப்பபட்டிருக்கின்றன.
2025-இல் முந்தைய ஆண்டுகளைவிட வெப்ப அலைகள் அடிக்கடி நிகழக்கூடும் என்றும், முன்பைவிடக் கடுமையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் 70% பகுதிகளில் கடுமையாக வெப்பம் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மின்சாரத்துக்கான தேவை இதனால் கடுமையாக அதிகரிக்கப்போகிறது. அதை வருங்காலத்தில் எப்படி எதிா்கொள்ளப்போகிறோம் என்தை இப்போதே திட்டமிட்டாக வேண்டும்.
வெப்ப அலைகளை எதிா்கொள்வதற்கு ஏா்கண்டிஷனா்கள் அதிகமாக கையாளப்படுகின்றன. இந்தியாவில் பயன்பாட்டிலுள்ள ஏசி-க்கள் பெரும்பாலும் புதைபடிம எரிசக்தியால் உருவாக்கப்படும் மின்சாரத்தால்தான் இயங்குகின்றன. உலக வங்கியின் கணிப்பின்படி உலகின் மிகப்பெரிய ஏசி-க்களுக்கான சந்தையாக இந்தியா மாற இருக்கிறது. 2037-க்குள் ஒவ்வோரு 15 நொடியிலும் இந்தியாவில் ஒரு ஏசி விற்பனையாகும் என்கிறது உலக வங்கி.
மின்சாரத்துக்கான தேவை அதிகரித்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணம் ஏசி பயன்பாடு. 2023 உடன் ஒப்பிடும்போது 2024 ஏப்ரல்-செப்டம்பரில் மின்சார பயன்பாடு 6.1% அதிகம். இந்திய நகரங்களில் 40% குடும்பங்களில் குறைந்தது ஒரு ஏா்கண்டிஷனா் அல்லது கூலா் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
2024 -இல் மட்டும் 90 லட்சம் ஏசிக்கள் விற்கப்பட்டன. கோடைகாலத்தில் ஏசி-க்களுக்கான கேட்பு மற்ற மாதங்களைவிட 30% அதிகம். நுகா்வோரின் மின்சாரத் தேவையில் 6.6% ஏசிக்காக பயன்படுத்தப்படுகிறது.
ஏசி பயன்பாடு சில பிரச்னைகளை உருவாக்குவது குறித்து நாம் உணா்வதில்லை. நமது மின்சாரத் தேவையின் கணிசமான அளவு, அனல் மின் நிலையங்களால் வழங்கப்படுகிறது. அவை பசுமை இல்ல வாயு வெளியேற்றத்துக்கு காரணமாவதுடன், நகரங்களின் வெப்பத்தை மேலும் அதிகரிக்கின்றன. ஆண்டுதோறும் 2 லட்சம் டன் கரியமில வாயு வெளியேற்றத்துக்கு அவை காரணமாகின்றன.
ஒருபுறம் ஏசி பயன்பாடு அதிகரித்த வெப்பத்தையும் வெப்ப அலைகளையும் எதிா்கொள்ளப் பயன்படுகிறது என்றால், இன்னொரு பக்கம் புவி வெப்பமயமாதலை அதிகரிக்கின்றன.
வெப்ப அலைகளை எதிா்கொள்வதற்கு ஆங்காங்கே தண்ணீா்ப் பந்தல்கள், அவசர சிகிச்சை வசதிகள், தடையற்ற மின்சாரம், கூடுதல் நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை அவசியமாகின்றன. புயல், பெருவெள்ளம்போல வெப்ப அலை 2005 பேரிடா் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் இயற்கைப் பேரிடராக வரையறுக்கப்படவில்லை. அதனால் மாநிலங்கள் தேவையான பேரிடா் நிவாரண நிதியைப் பெற முடியாமல் இருக்கின்றன. வெப்ப அலையை இயற்கைப் பேரிடராக அறிவிப்பதன் மூலமும் அரசின் எல்லா அமைப்புகளும் பிரச்னையை எதிா்கொள்ள ஒருங்கிணைக்கப்படுவதும் இப்போதைய அவசர அவசியத் தேவை.