முடி​வு‌க்கு வ‌ந்த சகா‌ப்​த‌ம்!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வுபெற்றது பற்றி...
முடி​வு‌க்கு வ‌ந்த சகா‌ப்​த‌ம்!
Published on
Updated on
2 min read

காவஸ்கர், கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, எம்.எஸ்.தோனி வரிசையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவராக விளங்கும் விராட் கோலி (36) டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக கடந்த திங்கள்கிழமை (மே 12) அறிவித்தார். இந்தியாவின் "பேகி ப்ளூ' தொப்பியுடன் 14 ஆண்டுகளுக்கு முன்பு டெஸ்ட் ஆட்டத்துக்காக மைதானத்தில் இறங்கிய விராட் கோலி விடைபெறும்போது விடுத்த செய்தி இது-

"14 ஆண்டு கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டத்துக்காக தொடர்பிலிருந்து விடைபெறுவது அவ்வளவு எளிதானதல்ல. என்னால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் மைதானத்தில் செய்து காட்டியிருக்கிறேன்.

எனது எதிர்பார்ப்பைவிட அதிகமாக கிரிக்கெட் எனக்குத் திருப்பித் தந்திருக்கிறது. கிரிக்கெட்டுக்கும், என்னுடன் விளையாடியவர்களுக்கும், அதைப் பார்த்து ரசித்த ரசிகர்களுக்கும் நன்றி சொல்லி நான் டெஸ்ட் ஆட்டத்திலிருந்து விடைபெறுகிறேன்' என்கிற பதிவு அவருடைய ஷாட்டுகளை போலவே துல்லியமாகவும், நளினமாகவும் அமைந்தது.

2014-2022 வரையில் இந்தியாவின் வெற்றிகரமான டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக 68 ஆட்டங்களில் 40 ஆட்டங்களை வென்றவர் என்கிற பெருமை விராட் கோலிக்கு உண்டு. இந்தியாவுக்கு வெளியே நடைபெற்ற 36 போட்டிகளில்16 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருக்கிறார்.

இந்தியாவின் கிரிக்கெட் வியூகத்துக்கு புதிய அணுகுமுறையை வகுத்தவர் என்கிற பெருமை அவருக்குத்தான் உண்டு. "முழுத் திறமையுடன், பெருமிதத்துடன், தளராத உறுதியுடன், வெற்றி மட்டுமே இலக்காக தனது அணியைக் கட்டமைத்த சூத்திரதாரி' என்று கிரிக்கெட் உலகம் விராட் கோலியைப் பதிவு செய்யும்.

123 டெஸ்ட் ஆட்டங்களில் 9,230 ரன்கள் எடுத்து இந்தியாவின் நான்காவது அதிகமான ரன் எடுத்த வீரர் என்கிற பெருமை கோலியைச் சாரும். சச்சின் டெண்டுல்கர் (15,921), ராகுல் டிராவிட் (13,265), சுனில் கவாஸ்கர் (10,122) ஆகிய மூவருக்கும் அடுத்தபடியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக அதிக ரன்கள் எடுத்த நான்காவது இந்திய வீரர் விராட் கோலி என்பதையும் குறிப்பிட வேண்டும்.

இந்தியாவுக்கு அதிக வெற்றிகளைத் தேடித்தந்த டெஸ்ட் கேப்டன் என்கிற பெயரும், உலகில் அதிக வெற்றியைத் தனது அணிக்குத் தேடித்தந்த நான்காவது கேப்டன் என்கிற பெருமையும் அவருக்கு உண்டு. 68 டெஸ்ட் ஆட்டங்களில் 40 வெற்றிகளையும், 17-இல் மட்டுமே தோல்வியையும் அவரது தலைமையில் இந்திய அணி சந்தித்தது.

2011 ஜூன் 20-ஆம் தேதி ஜமைக்காவிலுள்ள கிங்ஸ்டனில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் முதன்முதலாக இந்தியாவுக்காக விராட் கோலி விளையாடியபோது அவரது வயது 22. 2008-இல் ஒருநாள் கிரிக்கெட் பந்தயத்தில் முதன்முதலாக களமிறங்கியபோது அவரது வயது 19. அதற்கு முன்பே மலேசியாவில் நடைபெற்ற "யு 19' உலகக் கோப்பை பந்தயத்தில் கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றிருந்தார் விராட் கோலி என்பதையும் குறிப்பிட வேண்டும்.

உலக கிரிக்கெட்டில் மிக அதிகமான ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலி 123 டெஸ்ட் ஆட்டங்களில் 210 இன்னிங்ஸில் 9,230 ரன்கள் எடுத்திருக்கிறார். அதில் 30 சதங்கள், 31 அரை சதங்கள் அடக்கம். 7 முறை இரட்டைச் சதங்களும் எடுத்த பெருமை அவருக்கு உண்டு.

டெஸ்டுகளில் 51, ஒரு நாள் ஆட்டங்களில் 49 என்று 100 சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடிப்பார் என்று கருதப்பட்டது. ஒருநாள் ஆட்டத்தில் 51 சதங்கள் எடுத்திருக்கிறார் கோலி. டி20 போட்டியில் ஒரு சதம் உள்பட மொத்தம் 82 சதங்கள் எடுத்திருக்கிறார். இனிமேல் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடிப்பாரா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

இந்தியாவில் 2011-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை போட்டியை இந்திய அணி வென்றபோது, மைதானத்தைச் சுற்றி வலம் வருகையில் சச்சின் டெண்டுல்கரை தனது தோளில் சுமந்தார் இளம் வீரரான விராட் கோலி. டெண்டுல்கரின் இடத்தை நிரப்பியதுடன், அவருக்குப் பின் இந்திய பேட்டிங் வரிசையைத் தனது தோளில் சுமந்து அவரைப் போன்ற நேர்த்தியான ஆட்டம், சாதனை மேல் சாதனை என ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார்.

கோலியை சாதனை மன்னன் என்று சொன்னால் மிகையாகாது. 123 டெஸ்டுகளில் 30 சதங்களுடன் 9,230 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் ஆட்டங்களில் 7 இரட்டைச் சதங்கள் விளாசிய ஒரே கேப்டன் கோலிதான். சர்வதேச அளவில், 75-க்கும் அதிகமான சராசரி ரன்களுடன் 1,000 ரன்களுக்கும் மேல் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் (2016, 2017) எடுத்த ஒரே பேட்டர் கோலிதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் அவரது தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் முதல் இடத்தை தக்கவைத்தது இன்னொரு சாதனை.

20 ஓவர் போட்டிகளின் வரவால் டெஸ்ட் ஆட்டங்களில் சுவாரசியம் குறையத் தொடங்கியபோது களத்தில் தனது ஆக்ரோஷமான செயல்பாடுகளால் டெஸ்ட் ஆட்டங்களை உயிர்ப்புடன் இருக்குமாறு ஆக்கியவர் விராட் கோலி. எவ்வளவு பெரிய ஆட்டக்காரராக இருந்தாலும் ஒருநாள் ஓய்வுபெற்றாக வேண்டும் என்பது இயற்கை நியதி. கோலியும் ரோஹித் சர்மாவும் அடுத்தடுத்து ஓய்வுபெற்றுள்ளதால் மிகப் பெரிய வெற்றிடம் உருவாகி உள்ளது என்பதில் ஐயமில்லை. அதைக் களத்தில் இருக்கும் இளைஞர்கள் நிரப்புவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com