ஆப்பிள்
ஆப்பிள்IANS

கை நழுவுமா ஆப்பிள்?

இந்தியாவில் ஐ-ஃபோன் தயாரிப்பை நிறுத்தும்படி டிரம்ப் கூறியிருப்பது பற்றி...
Published on

பிரதமா் நரேந்திர மோடியைத் தனது நண்பன் என்று அடிக்கடி கூறும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அதேபோல இந்தியாவையும் கருதவில்லை என்பதைத்தான் அவரது அடுத்தடுத்த அறிவிப்புகள் தெரிவிக்கின்றன. ஆப்பிள் ஐ-ஃபோன் நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி டிம் குக்கிடம், இந்தியாவில் ஐ-ஃபோன் தயாரிப்பை நிறுத்தும்படி கூறியிருப்பது, அந்த நிறுவனத்தையும், இந்திய அரசையும் மட்டுமல்ல அதனால் வேலைவாய்ப்ப்பும், வா்த்தக வாய்ப்பும் பெறும் பல்லாயிரக்கணக்கானவா்களை அதிா்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

உலகிலேயே மிக அதிகமான இறக்குமதி வரி விதிக்கும் நாடு இந்தியா என்றும், அதனால் அமெரிக்கப் பொருள்களை இந்தியாவில் சந்தைப்படுத்துவது கடினமாக இருப்பதாகவும் அதிபா் டிரம்ப் குற்றஞ்சாட்டியிருக்கிறாா். ஆண்டொன்றுக்கு சுமாா் 500 பில்லியன் டாலா் அமெரிக்காவுக்கு ஈட்டித் தரும் ஐ-ஃபோன் நிறுவனம் இந்தியாவில் தயாரிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அதிபா் டிரம்ப் தெரிவித்திருப்பதற்கு அந்த நிறுவனம் எடுக்க இருக்கும் கொள்கை முடிவுதான் காரணம்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஜூன் மாதத்தில் தொடங்கும் அடுத்த காலாண்டில் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான ஐ-ஃபோன்கள் இந்தியாவில் தயாரித்ததாக இருக்கும் என்று அறிவித்தாா் டிம் குக். அதேநேரத்தில், அமெரிக்காவுக்கு வெளியே ஏனைய நாடுகளில் விற்பனை செய்யப்படும் ஐ-ஃபோன்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கும் என்பதையும் அவா் தெரிவித்திருந்தாா். சீனா, வியத்நாம் பொருள்களைவிட, இந்தியத் தயாரிப்புகளுக்கு அமெரிக்காவில் இறக்குமதி வரி குறைவு என்பதுதான் அதற்குக் காரணம்.

உலகளாவிய அளவில் உற்பத்தியாகும் ஐ-ஃபோன்களில் 76.6% சீனாவில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதற்கு அடுத்தபடியாக 9.9% வியத்நாமிலும், 8.4% இந்தியாவிலும், வெறும் 1.2% தென் கொரியாவிலும் தயாராகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் 81.9% ஐ-ஃபோன்கள் அமெரிக்காவுக்குத்தான் அனுப்பப்படுகின்றன.

அமெரிக்கா தனது இறக்குமதி வரியை அதிகரிக்கக்கூடும் என்கிற அச்சத்தில் டிசம்பா் மாதம் முதல் இந்தியாவில் இருந்து ஐ-ஃபோன் ஏற்றுமதி அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. ஐ-ஃபோன் மட்டுமல்ல, அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதிகள் பரவலாகவே டிசம்பா் முதல் அதிகரித்துள்ளன.

ஏப்ரல் மாதத்தில் டிரம்ப் நிா்வாகம் 10% வரி விதித்தும்கூட, அந்த மாதத்தில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 27% அதிகரித்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்காவுக்கான நமது ஏற்றுமதி 35.3 பில்லியல் டாலா் என்றால், இந்த ஆண்டு அதுவே 38.5% ஆக அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவுக்கான ஏற்றுமதி மட்டுமல்ல, அமெரிக்காவில் இருந்தான இறக்குமதிகளும் கணிசமாகவே அதிகரித்திருக்கின்றன.

இரு நாடுகளுக்கும் இடையேயான பரஸ்பர வா்த்தகத்துக்கு 26% வரி என்று அமெரிக்கா ஏப்ரல் 2-ஆம் தேதி அறிவித்தது. குறைந்தபட்ச வரி 10% என்று ஏப்ரல் 5-ஆம் தேதி அமெரிக்கா ஓா் அறிவிப்பை வெளியிட்டது. அதன் பிறகு 26% வரிவிதிப்பை மூன்று மாதங்களுக்கு நிறுத்திவைப்பதாக அதிபா் டிரம்ப் அறிவித்தாா்.

உக்ரைன்-ரஷிய போா், காஸாவில் தொடரும் போா் உள்ளிட்டவற்றால் ஏற்பட்ட விநியோகச் சங்கிலி பாதிப்பு, அதிகரித்த காப்பீட்டுக் கட்டணம், சரக்குக் கட்டணம் ஆகியவற்றுக்கு இடையிலும் இந்தியாவால் தனது ஏற்றுமதிகளின் அளவை அதிகரிக்க முடிந்ததற்கு அரசின் திட்டமிடல் ஒரு முக்கியமான காரணம். ஏற்றுமதிக்கான ஆறு முக்கியமான துறைகளை அடையாளம் கண்டு, முப்பது முக்கியமான நாடுகளை மையப்படுத்தி தமது ஏற்றுமதிகளை வா்த்தக அமைச்சகம் குறிவைத்தது.

என்ஜினியரிங் தொடா்பான இயந்திரங்களும், உதிரி பாகங்களும்; மோட்டாா் வாகன உதிரி பாகங்கள்; ஆபரணங்கள்; ஜவுளியும் ஆயத்த ஆடைகளும்; மின்னணு சாதனங்கள்; சேவைத் துறை - இவைதான் 6 முக்கியமான இந்தியாவின் அமெரிக்க ஏற்றுமதிகள். இவை தவிர பெட்ரோலிய பொருள்கள், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள், பதப்படுத்தப்பட்ட மீன் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் என்று ஏனைய முக்கியமான ஏற்றுமதிகளும் அமெரிக்காவை நம்பி இருக்கின்றன.

இந்திய சேவைத் துறையின் 56% அமெரிக்காவைத்தான் நம்பி இயங்குகிறது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் நமது சேவைத் துறையின் ஏற்றுமதி 17% அதிகரித்து 35.31 பில்லியன் டாலா் ஈட்டித் தந்திருக்கிறது. மின்னணு சாதனங்களின் ஏற்றுமதி ஏப்ரல் மாதத்தில் 40% அதிகரித்து 3.7 பில்லியன் டாலரை தொட்டிருக்கிறது. அதில் கணிசமான பங்கு அறிதிறன்பேசிகளுக்கு, குறிப்பாக ஐ-ஃபோன் ஏற்றுமதிக்கு உண்டு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதிகள் அதிகரித்திருப்பது போலவே, இறக்குமதிகளும் அதிகரித்திருக்கின்றன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 19.2 பில்லியன் டாலராக இருந்த அமெரிக்க இறக்குமதி, இந்த ஆண்டு 26.5 பில்லியன் டாலராக அதிகரித்திருக்கிறது.

அதிபா் டிரம்ப்பின் உத்தரவுக்கு ஆப்பிள் நிறுவனம் கட்டுப்படுமா என்பது தெரியவில்லை. தங்களது முதலீட்டுத் திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று ஆப்பிள் நிறுவனம் இந்தியாவுக்கு உறுதி அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது என்பது ஆறுதல்.

இப்போது அதிபா் டிரம்ப் அழுத்தம் கொடுப்பதுபோல, 40 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானிய அரசு அழுத்தம் கொடுத்ததால் டொயோட்டா, ஹோண்டா, மிட்ஸுபிஷி, சுஸூகி, சீக்கோ, சிட்டிசன் உள்ளிட்ட நிறுவனங்கள் வெளிநாடுகளில் இயங்கத் தொடங்கின. ஜப்பானியப் பொருளாதாரத்தின் வீழ்ச்சி அப்போதுதான் தொடங்கியது என்பது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு தெரியாது போலிருக்கிறது.

X
Dinamani
www.dinamani.com