இதற்கொரு தீர்வு தேவை!

நிலங்களை அரசு கையகப்படுத்தும்போது எழுகின்ற எதிர்ப்பு என்பது அண்மைக் காலங்களில் அதிகரித்து வருகிறது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
2 min read

வளர்ச்சித் திட்டங்களுக்கு நிலங்களை கையகப்படுத்தும்போது உள்ளூர் மக்களின் எதிர்ப்பையும், அதிருப்தியையும் அரசு சம்பாதிப்பது மட்டுமல்லாது நிர்வாகத்துக்கு சவாலையும், பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தி வருவதால் அதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டியது அவசியம்.

சாலைகள், விமான நிலையங்கள், தொழிற்பேட்டைகள், அரசு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், இருக்கின்ற வசதிகளை விரிவாக்கம் செய்யவும் நிலங்களை அரசு கையகப்படுத்தும்போது எழுகின்ற எதிர்ப்பு என்பது அண்மைக் காலங்களில் அதிகரித்து வருகிறது.

கடந்த 2018-இல் அறிவிக்கப்பட்ட சென்னை}சேலம் எட்டுவழி பசுமைச் சாலை திட்டமானது, திட்டமிட்டபடி செயல்படுத்தப்பட்டிருந்தால் இந்த ஆண்டு பணி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்திருக்கும்.

காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 159 கிராமங்கள் வழியாக அமைக்க திட்டமிட்டிருந்த சாலையின் திட்ட மதிப்பீடு சுமார் ரூ. 10,000 கோடி ஆகும். விவசாய நிலங்கள் மற்றும் வனப் பகுதிகள் அடங்கிய 2,971 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த விவசாயிகள், கிராம மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பாலும், நீதிமன்ற வழக்குகளாலும் திட்டம் முடங்கிக் கிடக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில், சென்னைக்கான இரண்டாவது விமான நிலையம் அமைக்க 13 கிராமங்களில் 4,970 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தவும் கடும் எதிர்ப்பு. விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் போராட்டம் 1,000-நாள்களையும் தாண்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கோவை மாவட்டம் குரும்பபாளையம் முதல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வரை 96 கி.மீ. தொலைவுக்கு நான்குவழிச் சாலை அமைக்க சுமார் 650 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தவும் எதிர்ப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வீரம்பாக்கம் கிராமத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க 9 கிராமங்களில் 3,174 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்ப்பு. விளைநிலங்கள், பாசனக் கிணறுகள் பறிபோய்விடும் என அந்தக் கிராம மக்கள் ஆட்சேபிக்கின்றனர்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்க கள்ளப்புலியூர் கிராமத்தில் சுமார் 60 ஏக்கர் நெல் விளையும் நிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காவிரி வடிநிலப் பகுதியானது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் பல்கலைக்கழகம் அமைக்க நிலம் கையகப்படுத்துவது என்பது விதிமுறையை மீறும் செயல் என்பதுதான் எதிர்ப்புக்குக் காரணம்.

அரசின் திட்டங்களுக்கு நிலங்களைக் கையகப்படுத்த எதிர்ப்புத் தெரிவிக்கும் விவசாயிகளும், கிராம மக்களும் திட்டங்களை எதிர்க்கவில்லை என்பதைக் கருத்தில்கொள்ள வேண்டும். மாறாக, விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதும், நீராதாரங்கள் அழிக்கப்படுவதும், சுற்றுச்சூழலை பாதிக்கும் நடவடிக்கைகளையும்தான் எதிர்க்கின்றனர் என்பதை மறந்துவிடக் கூடாது.

புதிய வளர்ச்சித் திட்டங்கள் மூலம் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்; சமூக, பொருளாதார நிலை மேம்படும் என்பதையெல்லாம் அவர்கள் அறியாதவர்கள் அல்லர். ஆனாலும், வாழ்வாதாரமான விளை நிலங்களைப் பறிக்கும்போது அதை எதிர்த்துப் போராட வேண்டிய கட்டாயத்துக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.

பொருளாதாரத்தின் முதுகெலும்பு விவசாயம் என்றார் மகாத்மா காந்தி. விவசாய நாடான இந்தியாவில் சுமார் 60 சதவீத மக்கள் வேளாண் தொழிலை நம்பியுள்ளனர். பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப வேளாண் உற்பத்தியை அதிகரிக்க விளைநிலம் தேவை. எனவேதான் வேளாண்மையை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

அதேவேளையில், வளர்ச்சித் திட்டங்களுக்கு நிலங்களைக் கையகப்படுத்தும்போது அது எந்த வகையான நிலம் என்பதை முன்னறிந்து அரசு செயல்பட வேண்டியது அவசியம். பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அரசு புறம்போக்கு மற்றும் தரிசு நிலங்களைக் கையகப்படுத்தினால் யாரும் எதிர்க்கப் போவதில்லை.

ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வைத்திருப்பவர்கள் (அரசியல்வாதிகள்?), அவர்களது நிலங்களுக்கு அருகில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவதும், அதற்கேற்ற வகையில் அருகில் இருப்பது விவசாய நிலமாக இருந்தாலும் அதைக் கையகப்படுத்த துணிவதும்தான் சிக்கலை ஏற்படுத்துகின்றன.

நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திய நிலம் கையகப்படுத்துதல் சட்டம்-1894 முதல் அண்மையில் இயற்றப்பட்ட தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டம்-2023 வரை பல்வேறு சட்டங்கள் உள்ளன. அவை அனைத்தும் நிலங்களை அரசு கையகப்படுத்த ஏகபோக உரிமையை வழங்குகிறதே தவிர பாதிக்கப்படுவோருக்கு சாதகமானதாக இல்லை.

பாதிக்கப்படுவோர் நீதிமன்றங்களை நாடி உரிய இழப்பீடுகளைப் பெற தீர்ப்பை பெற்றாலும் அரசு அதைச் செயல்படுத்தாமல் மேல்முறையீடு செய்வதில் தீவிரம் காட்டுகிறது. ஆதலால் கடைசி வரை இழப்பீடு கிடைக்காமலேயே வாழ்நாளை முடித்துக் கொண்டவர்களும் உண்டு.

விவசாய நிலங்களை அரசு திட்டங்களுக்கு கையகப்படுத்தக் கூடாது என்ற திட்டவட்டமான தடை எதுவும் இல்லை. இதையே சாதகமாகக் கொண்டு விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே, இதில் தெளிவானதொரு அணுகுமுறையை அரசு மேற்கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com