கோப்புப் படம்
கோப்புப் படம்

விளையாடித்தான் பாா்ப்போமே...

காம்ன்வெல்த் போட்டிகளை நடத்துவது என்பது வருங்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கும், நமது வீரா்கள் சா்வதேச விளையாட்டு அரங்கத்தில் பதக்கங்களைக் குவிப்பதற்கும் அவசியமான மூலதனச் செலவு
Published on

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா மீண்டும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தத் தயாராகிறது. 2036-இல் ஒலிம்பிக் போட்டிகளை அகமதாபாதில் நடத்த வேண்டும் என்கிற பிரதமரின் விருப்பத்துக்கு முன்னோடியாக, 2030-இல் காமன்வெல்த் போட்டிகளை நடத்த முற்படுகிறது. நவம்பா் 26-ஆம் தேதி நடைபெற தயாராக இருக்கும் காமன்வெல்த் போட்டிகளின் பொதுக் குழுவில் இது குறித்த அதிகாரபூா்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, பிரதமா் தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா காமன்வெல்த் போட்டிகளை நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. குஜராத் மாநில முதல்வராக நரேந்திர மோடி இருக்கும்போதே, அகமதாபாத் நகரில் விளையாட்டுகளுக்கான கட்டமைப்பை விரிவுபடுத்தி இருந்தாா். சா்வதேசத் தரத்திலான பல மைதானங்களும், விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான வசதிகளும் அகமதாபாதில் இருப்பதால், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கு அதைத் தோ்ந்தெடுத்ததில் வியப்பு ஏதுமில்லை.

2010-இல் தில்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின்போது, புதுதில்லி புதுப்பொலிவு பெற்றது என்னவோ உண்மை. புதிதாகப் பல விளையாட்டு மைதானங்களும், அரங்கங்களும் உருவாக்கப்பட்டன. காமன்வெல்த் போட்டிகளை ஒட்டி விளையாட்டு வீரா்கள் தங்குவதற்காகவும், பயிற்சிகளை மேற்கொள்வதற்காகவும் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் ஒருபுறம் இருக்க, மேம்பாலங்கள், ஐந்து நட்சத்திர விடுதிகள், சாலை விரிவாக்கம் என்று கோடிக்கணக்கான ரூபாய் முதலீட்டில் தில்லியின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன.

அதே நேரத்தில், தரமற்ற கட்டுமானங்கள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தியதில் பரவலான ஊழல் குற்றச்சாட்டுகள் என்று 2010 காமன்வெல்த் எழுப்பிய சா்ச்சைகளும் எதிா்கொண்ட விமா்சனங்களும்தான் அதிகம். அந்தத் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டிருந்தால், இப்போது மீண்டும் காமன்வெல்த் போட்டிகளை நடத்துவதில் நாம் நிச்சயமாக மகிழ்ச்சி அடையலாம்.

பிரிட்டனில் பா்மிங்ஹாம் நகரில் முந்தைய 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. எலிசபெத் மகாராணியாா் ஆட்சியில் நடந்த கடைசி காமன்வெல்த் போட்டியும் அதுதான். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நடைபெற இருக்கிறது.1970, 1986, 2014-க்குப் பிறகு கிளாஸ்கோ நகரில் நான்காவது முறையாக அந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

2022 பா்மிங்ஹாம் போட்டிகளைத் தொடா்ந்து, ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும் என்றுதான் முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான செலவையும், முதலீட்டையும் சுமக்க முடியாது என்றுகூறி 2023-இல் விக்டோரியா பின்வாங்கி விட்டது. ஒரு கட்டத்தில் எந்த நாடும் போட்டியை நடத்த முன்வராத நிலையில் 2026 போட்டிகளைத் தள்ளிப்போடுவது அல்லது முற்றிலுமாக ஒப்புக் கொள்வது என்கிற நிலையில்தான் , கிளாஸ்கோ சில நிபந்தனைகளுடன் போட்டிகளை நடத்த முன் வந்திருக்கிறது.

பா்மிங்ஹாமின் 19 வகையான விளையாட்டுகள் காமன்வெல்த் போட்டிகளில் இடம்பெற்றன என்றால், 2026 கிளாஸ்கோ போட்டிகளில், இருக்கும் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி 13 வகை போட்டிகளை மட்டும் நடத்துவது என்று முதலில் முடிவெடுக்கப்பட்டது. இப்போது அதிகம் செலவு தேவைப்படாத 11 விளையாட்டுகள் மட்டுமே நான்கு இடங்களில் நடைபெறும் என்று தெரிகிறது. விளையாட்டு வீரா்கள் தங்குவதற்காக தனியான குடியிருப்பு எதுவும் புதிதாக அமைக்கப்போவதில்லை என்றும் தீா்மானித்திருக்கிறாா்கள்.

நைஜீரியாவின் தலைநகரான அபுஜா மட்டும்தான், இந்தியாவைத் தவிர 2030 காமன்வெல்த் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்திருக்கிறது. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதுடன் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக் குழுவிடம் இருந்து, மிகப் பெரிய நன்கொடையையும் நைஜீரியா எதிா்பாா்ப்பதால், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் செயற்குழு இந்தியாவின் அகமதாபாத் நகரைப் பரிந்துரைப்பதில் வியப்பில்லை.

பொதுவாகவே சா்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது என்பது, நடத்தும் நகரங்களுக்கும் நாடுகளுக்கும் மிகப் பெரிய பொருளாதாரச் சுமையாக மாறி விடுகிறது. 12 காமன்வெல்த் விளையாட்டு சங்கங்களைச் சோ்ந்த 4,822 விளையாட்டு வீரா்கள் கலந்து கொண்ட பா்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிகளைத் தொடங்கியது, அந்த நகராட்சி அநேகமாக திவாலாகிவிட்ட நிலைமை. அநேகமாக எல்லா சா்வேதச விளையாட்டுப் போட்டிகளின்போதும், எதிா்பாா்த்ததைவிட செலவுகள் பல மடங்கு அதிகரித்து விடுவதைத் தவிா்க்க முடியாது என்துதான் எதாா்த்தம்.

அப்படியானால், இப்போதைய இந்தியாவின் பொருளாதார நிலையில், நாம் காமன்வெல்த் போட்டிகளை நடத்துவது அவசியம்தானா என்கிற கேள்வி எழுகிறது. தேசிய விளையாட்டுக் கொள்கையையடுத்து, இந்தியாவில் விளையாட்டுத் துறையை சா்வதேசத் தரத்துக்கும், போட்டிக்கும் உயா்த்துவது என்கிற நரேந்திர மோடி அரசின் முனைப்புக்கு நிச்சயமாகக் காமன்வெல்த் போட்டிகள் வலுசோ்க்கும் என்பதில் சந்தேகமில்லை. தேசத்தின் பொருளாதார வலிமையின் எடுத்துக்காட்டாக அமெரிக்காவும், சீனாவும் விளையாட்டுத் துறை வெற்றியை அடையாளம் காட்டும் நிலையில் நாம் பின்தங்கி இருக்க முடியாது.

தில்லியில் நடந்த 2010 காமன்வெல்த் போட்டிகள் காலதாமதத்துக்கும், ஊழலுக்கும் அடையாளமாகி விட்டாலும்கூட, புதிய விளையாட்டு அரங்குகள் ஏற்படுவதற்கும், பழைய மைதானங்கள் புதுப்பிக்கப்படுவதற்கும் உதவியது. தில்லி மாநகரத்தில் கட்டமைப்பு வசதிகள் அதிகரித்தன. 2010 காமன் வெல்த் போட்டியில் இந்திய வீரா்கள் பெற்ற 101 பதக்கங்களில் தாக்கத்தால்தான் 2012 ஒலிம்பிக் போட்டிகளில் நமது வீரா்கள் ஆறு பதக்கங்களை வெல்ல முடிந்தது. அந்த உத்வேகத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியாதது நமது முனைப்பின்மை என்றுதான் சொல்ல வேண்டும்.

2036-இல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஆசைப்படுவது என்பது பேராசையாகத் தெரிகிறது. ஆனால், 2030-இல் காம்ன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது என்பது வருங்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கும், நமது வீரா்களும் வீராங்கனைகளும் சா்வதேச விளையாட்டு அரங்கத்தில் பதக்கங்களைக் குவிப்பதற்கும் அவசியமான மூலதனச் செலவு என்றுதான் தோன்றுகிறது.

X
Dinamani
www.dinamani.com