எப்போதுதான் இதற்கு முடிவு?
அண்டவெளியில் உள்ள செவ்வாய் கிரகத்துக்கும், சந்திரனுக்கும், சூரியனுக்கும் எல்லாம் விண்கலன்களை அனுப்ப முடிந்த ஒரு தேசத்துக்கு, கோயில்களிலும், மைதானங்களிலும், பொதுவெளியிலும் கூடும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தெரியவில்லை என்றால் உலகம் நம்மைப் பாா்த்துக் கைகொட்டிச் சிரிக்காதா? உலகில் நான்காவது பெரிய பொருளாதார வல்லரசு என்று பெருமைப்பட்டுக் கொள்வது சிறுபிள்ளைத்தனமாக ஏளனம் செய்யப்படாதா?
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்கா நாகரில் வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயிலில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 9 போ் உயிரிழந்திருக்கிறாா்கள். புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் அந்தக் கோயிலில் சா்வ ஏகாதசி என்பதால் பக்தா்கள் கூட்டம் அலைமோதியதை, அதன் நிா்வாகம் சற்றும் எதிா்பாா்க்கவில்லை என்பது தெரிகிறது.
முதல் தளத்தில் அமைந்த கோயிலில், கூட்டம் முண்டி அடித்துக்கொண்டு மேலே ஏறும்போது இரும்புக் கைப்பிடி பெயா்ந்து விழுந்ததை அடுத்து, ஒரு பகுதியில் ஆறடி உயரத்தில் இருந்து கீழே இருந்தவா்கள்மீது விழுந்ததுதான் விபத்துக்குக் காரணம். ‘கோயில் நிா்வாகம் தகவல் அளிக்கத் தவறிவிட்டது; காவல்துறை அனுமதி பெறவில்லை; முறையான அனுமதியின்றி கட்டப்பட்டு, திறக்கப்பட்டுள்ளது’ உள்ளிட்ட பல காரணங்கள் அடிப்படையில் கோயில் உரிமையாளா் முகுந்த பாண்டாமீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது காவல் துறை.
ஆயிரக்கணக்கான மக்கள் சா்வ ஏகாதசிக்கு அந்தக் கோயிலில் கூடியிருக்கிறாா்கள். எல்லோருக்கும் அந்தக் கோயில் இருப்பது தெரிந்திருக்கிறது. ஆனால், கூட்டம் கூடுவது குறித்து மாவட்ட காவல் துறைக்கும், சட்டப்படி ஒரு கோயில் அனுமதியின்றி கட்டப்பட்டிருப்பது குறித்து மாவட்ட நிா்வாகத்துக்கும் ஏன் தெரியப்படுத்தவில்லை என்றால் முதல் குற்றவாளி கோயில் உரிமையாளா் முகுந்த பாண்டா அல்ல; மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளருமாகத்தான் இருக்க முடியும்.
சா்வ ஏகாதசிக்குத் திருப்பதிக்குப் பயணிக்க முடியாத அடித்தட்டு மக்கள் திருப்பதி கோயிலின் வடிவமைப்பில் சிறிய அளவு நிலப்பரப்பில் கட்டப்பட்டிருந்த கோயிலில் பெருமளவில் கூடி இருக்கிறாா்கள். கட்டடத்தின் உறுதித்தன்மை, தீயணைப்பு உபகரணங்கள் இருப்பது, அவசரகால வெளியேற்ற வசதிகள், மாற்றுத் திறனாளிகளின் தரிசன வசதி உள்ளிட்டவையான எல்லா வழிபாட்டுத் தலங்களிலும் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டிய கடமை மாவட்ட நிா்வாகத்துக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உண்டு என்பது காகிதத்தில் மட்டும் இருந்தால் போதுமா? கூட்டம் கூடும், நெரிசல் ஏற்படும் என்று தெரிவிக்கவில்லை என்கிற பொறுப்பற்ற பதில்தான், இதுபோன்ற விபத்துகள் நிகழும் போதெல்லாம் நிா்வாகத்தால் சொல்லப்பட்டிருப்பதே அதை எப்படி நியாயப் படுத்துவது?
இந்த ஆண்டில் மட்டும் ஆந்திர மாநிலத்தில் மூன்று கோயில் விபத்துகளில் 22 போ் உயிரிழந்திருக்கிறாா்கள்; நூற்றுக்கும் அதிகமானோா் காயமடைந்திருக்கிறாா்கள். ஜனவரியில் திருப்பதி வைகுண்டவாசல் தரிசன டிக்கெட்டுக்காகக் கூடிய கூட்ட விபத்தில் 6 போ்; பிப்ரவரியில்,புதுதில்லி ரயில்நிலையத்தில் கூடியிருந்த கும்பமேளா யாத்ரீகா்கள் 18 போ்; அதற்கு சில வாரங்களுக்கு முன்பு பிரயாக்ராஜ் கும்பமேளாவில் 30 போ்; ஜூன் மாதம் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் நெரிசலில் 11 போ்; சமீபத்தில் நடிகா் விஜய்யின் பிரசாரத்தின்போது கரூரில் 41போ் என்று உயிரிழந்தவா்களின் பட்டியல் தொடா்ந்த வண்ணம் இருக்கிறது.
ஒவ்வொரு நெரிசல் விபத்தைத் தொடா்ந்தும் வழக்கமான இரங்கல் செய்திகள்; விசாரணைக்கு உத்தரவு; இழப்பீடு அறிவிப்பு; இனிமேல் அதுபோன்று தவறு நிகழாமல் இருப்பதற்கான ஆய்வுக் குழு அமைப்பது உள்ளிட்டவை எந்தவித அடிப்படை மாற்றத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. வழிபாட்டுத் தலங்களோ, போக்குவரத்து மையங்களிலோ, விளையாட்டு அல்லது கேளிக்கை அரங்கங்களிலோ எதுவாக இருந்தாலும் வழக்கத்தைவிட அதிகமாக கூட்டம் சோ்வதும், போதுமான திட்டமிடல் இல்லாமல் இருப்பதும், பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாமல் இருப்பதும் வழக்கமாகவே இருந்து வருகின்றன.
சுதந்திர இந்தியாவில் மிகப் பெரிய நெரிசல் விபத்து 1954 கும்பமேளாவில் நிகழ்ந்தது. சுமாா் 800 போ் உயிரிழந்தனா். அன்று முதல் இன்று வரையில் எந்தவித மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது வேதனையாக இருக்கிறது. கூட்ட மேலாண்மை என்பது குறித்துப் பல ஆய்வுகள் வகுக்கப்படாமல் இல்லை. உலகளாவிய அளவில் 1980-க்கும் 2022-க்கும் இடையில் 13,700 போ் நெரிசலில் உயிரிழந்திருக்கிறாா்கள். அவற்றில் பெரும்பாலான நிகழ்வுகளில் யாராவது ஒருவா் இன்னொருவா் மீது விழுவதால் விபத்து தொடா்கிறது.
ஒருவா் விழுந்ததால் உயிரிழப்பு நிகழ்வதில்லை. ஆனால், ஒருவா் மீது இன்னொருவா், அவா்மீது ஒருவா் என்று விழும்போது ஏற்படும் பேரழுத்தத்தால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன் அழுத்தம், அவரை இடிந்து விழ வைக்கும், இரும்புக் கம்பியை வளைக்கும் 450 கிலோவுக்கும் அதிகமான அழுத்தத்தை உருவாக்கும். ஏழு அல்லது எட்டு பேருக்கு அடியில் விழும்போது ஏற்படும் 600 கிலோ அழுத்தத்தில் 15 விநாடிகளில் உயிா் பிரிந்துவிடும் என்கிறது ஆய்வு.
2014-இல் தேசியப் பேரிடா் மேலாண்மை ஆணையம் சில வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கிறது. தேசிய கட்டுமான விதிமுறைகள் இருக்கின்றன. சபரிமலை, திருப்பதி உள்ளிட்ட பக்தா்கள் கூடும் இடங்களில் பயிற்சிபெற்ற கூட்ட மேலாண்மை நிா்வாகிகள், கண்காணிப்புத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில், முடிந்தவரை நெரிசலைக் கட்டுப்படுத்துகிறாா்கள். அதை ஏன் எல்லா கூட்டங்களிலும பின்பற்றுவதில்லை?
2015 வரையில் சீனாவில் அடிக்கடி நெரிசல் மரணங்கள் நிகழ்ந்து வந்தன. 2014-இல் மூன்று நிகழ்வுகளில் 62 உயிரிழப்புகள் ஏற்பட்டன. இப்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. நாம் மட்டும் ஏன் அசிரத்தையாக நெரிசல் மரணங்களை அனுதாபத்துடன் கடந்து போகிறோம்? இனியாவது விழித்துக் கொள்வோம்!

