

நவி மும்பையில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 2) நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி முதல் முறையாக இந்திய அணி கோப்பையை வென்றது கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி உள்ளது. 1983-இல் கபில் தேவ் தலைமையிலான அணி முன்பு உலகக் கோப்பையை வென்றது எவ்வாறு திருப்புமுனையாக அமைந்ததோ, அதேபோன்று மகளிர் கிரிக்கெட்டுக்கு இந்த வெற்றி திருப்புமுனையாக அமைந்துள்ளது.
ஆசிய கோப்பை போட்டிகளில் 7 முறையும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒரு முறையும் சாம்பியனாகி இருக்கும் இந்திய மகளிர் அணிக்கு உலகக் கோப்பை மட்டும் கைக்கு எட்டாமலேயே இருந்தது. 2005, 2017 என இரு முறை ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளிலும் 2020-இல் டி20 உலகக் கோப்பை போட்டியிலும் இறுதி ஆட்டம் வரை வந்து கோப்பையை இந்திய மகளிர் அணி நழுவவிட்டது.
கடந்த 2017-ஆம் ஆண்டு அரை இறுதி ஆட்டத்தில், அதற்கு முன்னர் ஆறு முறை கோப்பையை வென்றிருந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்திய மகளிர் அணியின் தன்னம்பிக்கைக்கு அச்சாரமாக அமைந்தது. கடந்த எட்டு ஆண்டுகளில் இந்திய மகளிர் அணி சீராக வலுவடைந்து வந்தது. ஆடவருக்கு இணையாக ஆட்ட ஊதியம், அதிகமான ஆட்டங்களில் பங்கேற்க வாய்ப்பு, மகளிர் பிரீமியர் லீக் போன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மேற்கொண்ட முன்னெடுப்புகளால், ஏழு முறை கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலியாவையும், நான்கு முறை கோப்பையை வென்றுள்ள இங்கிலாந்தையும் நம்பிக்கையுடன் நமது மகளிர் எதிர்கொள்ளும் வாய்ப்பு உருவானது.
செப்டம்பர் 30-ஆம் தேதி தொடங்கி இந்தியாவிலும் இலங்கையிலும் நடைபெற்ற இந்தப் போட்டி இந்தியாவுக்கு சற்று சவாலாகவே விளங்கியது. தொடக்க ஆட்டங்களில் இலங்கை, பாகிஸ்தான் அணிகளை வென்றாலும் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய வலுவான அணிகளிடம் தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் தோற்றபோதும் மனந்தளராமல் விளையாடி அடுத்தடுத்த ஆட்டங்களில் வென்று கோப்பையைக் கைப்பற்றி உள்ளனர். மகளிர் உலகக் கோப்பை போட்டியில் மூன்று ஆட்டங்களில் தோற்ற பின்னர், கோப்பையை வென்ற முதல் அணி இந்திய அணி என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்க அணியும் சோடை போனதல்ல. 2023, 2024 என தொடர்ந்து இரண்டு டி20 உலகக் கோப்பை போட்டிகளின் இறுதி ஆட்டங்கள், இப்போதும் இறுதி ஆட்டத்துக்குத் தகுதி என அண்மைக்காலமாக சிறப்பாகவே விளையாடி வருகின்றனர். அந்த நாட்டு ஆடவர் அணி போலவே, சிறப்பான அணியாக இருந்தும் இறுதி ஆட்டத்தில் வெல்ல முடியாத துரதிருஷ்டம் தொடர்கிறது.
இந்திய அணியின் வெற்றி ஓரிரு வீராங்கனைகளால் அல்ல, பலரின் பங்களிப்பாலேயே சாத்தியமாகி உள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறப்பாக விளையாடி வரும் தொடக்க பேட்டர் ஸ்மிருதி மந்தனா இந்தப் போட்டியில் 9 ஆட்டங்களில் ஒரு சதம், இரண்டு அரை சதங்களுடன் 434 ரன்கள் குவித்து சிறந்த அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். அவருக்கு இணையாக மற்றொரு தொடக்க பேட்டரான பிரதிகா ராவல் 6 ஆட்டங்களில் ஒரு சதம், ஒரு அரை சதத்துடன் 308 ரன்கள் குவித்து ஸ்மிருதிக்கு பக்கபலமாக விளங்கினார்.
சிறப்பாக விளையாடினாலும், துரதிருஷ்டவசமாக காயம் காரணமாக பிரதிகா ராவல் அரை இறுதி, இறுதி ஆட்டங்களில் பங்கேற்க இயலவில்லை. எனினும், அவருக்குப் பதிலாக களம் இறங்கிய 21 வயதேயான ஷஃபாலி வர்மா இறுதி ஆட்டத்தில் 87 ரன்கள் எடுத்ததுடன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆட்டநாயகி விருது வென்ற இளம் வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதியில் ஸ்மிருதி மந்தனா ஆட்டமிழந்ததும் ரசிகர்களின் நம்பிக்கை குறைந்தது. எனினும், 25 வயதேயான இளம் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் (127 நாட் அவுட்), 36 வயதான மூத்த வீராங்கனையும் கேப்டனுமான ஹர்மன்பிரீத் கௌர் (89 ரன்கள்) ஆகியோர் நம்ப முடியாத வெற்றியைப் பெற்றுத் தந்தனர்.
14 விக்கெட்டுகள் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீசரணி, பாகிஸ்தானுடனான ஆட்டத்தில் ஆட்ட நாயகி விருது வென்ற கிராந்தி கௌட், விருப்பம்போல சிக்சர்கள் விளாசி தனது அதிரடி ஆட்டத்தால் மனம் கவர்ந்த 22 வயது வீராங்கனை ரிச்சா கோஷ், நெருக்கடி நேரங்களில் கைகொடுத்த தச்சுத் தொழிலாளியின் மகளான அமன்ஜோத் கெüர் போன்றோரின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல, போட்டி முழுவதுமே தீப்தி சர்மாவின் பங்களிப்பு இருந்தது. இறுதி ஆட்டத்தில் 58 ரன்கள் குவித்து, 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் ஒரு குறிப்பிட்ட உலகக் கோப்பை போட்டியில் 200-க்கும் மேற்பட்ட ரன்கள் (215), 20-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் (22) எடுத்த முதல் ஆல்ரவுண்டர் என்ற பெருமையைப் பெற்றார்.
நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் 339 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை நிர்ணயித்தது. இதற்கு முன்னர், ஒருநாள் ஆட்டங்களில் இதுபோன்ற இலக்கை எந்த அணியும் எட்டி வென்றதில்லை.
சர்வதேச அளவில் செஸ் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிக் கொடி, பஹ்ரைனில் அண்மையில் நடைபெற்ற ஆசிய இளையோர் போட்டியில் கபடியில் இந்திய ஆடவர், மகளிர் சாம்பியன், இப்போது கிரிக்கெட்டில் மகளிர் சாம்பியன் போன்றவை இந்திய அணிகளையும், விளையாட்டு வீரர்களையும் உலக அரங்கில் நிமிர்ந்து பார்க்க வைத்திருக்கின்றன. தொய்வு ஏற்பட்டு விடாமல் நமது சாதனைகள் தொடர வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.