அணு ஆயுத அச்சுறுத்தல்!

உலகை 150 முறை தகர்க்கும் அளவுக்குத் தங்களிடம் அணு ஆயுதங்கள் உள்ளன என்றும் கூறியிருக்கிறார் டிரம்ப்.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on
Updated on
2 min read

சுமார் 30 ஆண்டுகளாக நிறுத்திவைத்திருக்கும் அணு ஆயுத சோதனைகளை மீண்டும் நடத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டிருப்பதன்மூலம் அணு ஆயுதப் போட்டி மேலும் அதிகரிக்குமோ என்கிற அச்சம் எழுந்திருக்கிறது. உலகை 150 முறை தகர்க்கும் அளவுக்குத் தங்களிடம் அணு ஆயுதங்கள் உள்ளன என்றும் கூறியிருக்கிறார் டிரம்ப்.

உக்ரைன் மீதான போருக்கு மத்தியில், எந்த நாட்டிடமும் இல்லாத வகையில் அணுசக்தியில் இயங்கும் "புரேவெஸ்ட்னிக்' ஏவுகணையை அண்மையில் வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தது ரஷியா. அந்த ஏவுகணை எத்தனை ஆயிரம் கி.மீ. வரையும் சென்று இலக்குகளைத் தாக்கும் வரம்பற்ற திறனைக் கொண்டது. அணுசக்தியில் இயங்கக்கூடிய "பொசைடன்' நீர்மூழ்கி ட்ரோனையும் வெற்றிகரமாக சோதித்ததாக ரஷிய அதிபர் புதின் அறிவித்ததைத் தொடர்ந்து இப்போது டிரம்ப்பின் அணு ஆயுத சோதனை அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

உலகிலேயே அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய ஏழு நாடுகளிடம்தான் அணு ஆயுதங்கள் உள்ளன. இஸ்ரேலிடமும், வடகொரியாவிடமும் அணு ஆயுதங்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் அது உறுதிப்படுத்தப்படவில்லை.

சுமார் 6,000 அணு ஆயுதங்களுடன் ரஷியா முதலிடத்திலும், 5,400 அணு ஆயுதங்களுடன் அமெரிக்கா அடுத்த இடத்திலும், சீனா 410 அணு ஆயுதங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்தியாவிடம் 180 அணு ஆயுதங்களும், பாகிஸ்தானிடம் 170 அணு ஆயுதங்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது.உலகம் முழுவதும் மொத்தம் 13,000 அணு ஆயுதங்கள் இருக்கின்றன.

பனிப்போர் காலத்துடன் ஒப்பிடுகையில் இப்போதைய எண்ணிக்கை குறைவுதான் என்றாலும், அணு ஆயுதங்களால் மனிதகுலத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறையவில்லை. இப்போதைய அணு ஆயுதங்களின் சக்தி முன்பைவிட மிக அதிகம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மிகப் பெரிய அணுசக்தி நாடுகளான அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகியவை தங்களது அணு ஆயுதங்களின் அளவு, திறன் ஆகியவற்றை தொடர்ந்து அதிகரித்துவருவது மற்றொரு காரணம்.

அமெரிக்காவின் கடைசி முழு அணு ஆயுத சோதனை, "டிவைடர்' என்ற பெயரில் 1992 செப்டம்பர் 23-ஆம் தேதி நவாடா சோதனைத் தளத்தில் நடத்தப்பட்டது. அதற்குப் பிறகு நாட்டில் அணு ஆயுத சோதனைகளுக்குத் தடை விதிப்பதாக அப்போதைய அதிபர் ஜார்ஜ் ஹெச்டபிள்யு புஷ் அறிவித்தார். இப்போது பிற நாடுகளின் (ரஷியா, சீனா) மேம்பட்ட சோதனைத் திட்டங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அமெரிக்காவும் அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் பிறப்பித்திருக்கும் உத்தரவு, முழு அணு ஆயுத வெடிப்பு சோதனையா அல்லது அணு ஆயுதங்கள் தொடர்பான பிற சோதனைகளா என்பதைத் தெளிவுபடுத்தவில்லை.

1998-ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகில் வடகொரியா தவிர வேறு எந்த நாடும் அணு ஆயுத வெடிப்பு சோதனை நடத்தவில்லை. ஆனால், "பாகிஸ்தான், சீனா, ரஷியா, வடகொரியா உள்ளிட்ட பல நாடுகள் அணு ஆயுத சோதனைகளை ரகசியமாக பூமிக்கு அடியில் செய்து வருகின்றன. இது குறித்து அந்த நாடுகள் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. பிற நாடுகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதால் அமெரிக்காவும் அதே அடிப்படையில் சோதனையில் ஈடுபடுவதே பொருத்தமாக இருக்கும்' என அதிபர் டிரம்ப் தனது அணு ஆயுத சோதனை உத்தரவை நியாயப்படுத்துகிறார்.

விரிவான அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தம் (சிடிபிடி) ஐ.நா.வால் 1996-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. ராணுவம் மற்றும் சிவில் என எந்தத் தேவைக்காகவும் அணு ஆயுத சோதனை மேற்கொள்வதை இந்த ஒப்பந்தம் தடை செய்கிறது. 187 நாடுகள் அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.

ஆனால், அணு ஆயுதங்களை வைத்திருக்கும் அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் உள்பட 9 நாடுகள் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டும் அதை அங்கீகரிக்கவில்லை. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் வரை இந்த 9 நாடுகளும் அதை அங்கீகரிக்காது என்பது இதன் பொருள். அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தின் மிகப் பெரிய முரண் இது.

இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா உள்ளிட்ட 9 நாடுகள் அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தில் கையொப்பமிடவில்லை. அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகள் அவற்றை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஒழிப்பதற்கான உறுதிப்பாட்டை ஒப்பந்தத்தில் சேர்க்கத் தவறியது உள்ளிட்ட காரணங்களால் அந்த ஒப்பந்தத்தை ஏற்க முடியாது என இந்தியா தெரிவித்தது.

இந்தியா முதல்முறையாக 1974-ஆம் ஆண்டும், கடைசியாக 1998-ஆம் ஆண்டும் அணுகுண்டு வெடிப்பு சோதனையை நடத்தியது. அணு ஆயுதத்தை எந்த நாட்டின் மீதும் முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கையையும் இந்தியா கொண்டுள்ளது.

உக்ரைன் மீதான போரைத் தொடங்கியதிலிருந்தே ரஷியா தொடர்ந்து அணு ஆயுதப் போர் அச்சுறுத்தலை விடுத்து வருகிறது. வடகொரியாவும் அமெரிக்காவுக்கு எதிராக அவ்வப்போது அணு ஆயுதத் தாக்குதல் மிரட்டலை விடுத்து வருகிறது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானும் அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என பகிரங்கமாக மிரட்டியது.

குரைக்கும் நாய் கடிக்காது என்பார்கள். வல்லரசுகளின் அச்சுறுத்தல்கள் அந்த வகையைச் சார்ந்ததாக இருக்கலாம். ஆனால், குரங்கின் கையில் பூமாலைபோல சில நாடுகளிடமும் அணு ஆயுதங்கள் சிக்கி இருக்கின்றனவே. அதுதான் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com