

மனித இனத்தின் வரலாற்றில் கிரிகர் மெண்டல், சார்லஸ் டார்வினுக்குப் பிறகு மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்திய கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரரான ஜேம்ஸ் வாட்சன் மறைந்திருக்கிறார். அன்றாட பரபரப்புச் செய்திக்கு இடையில், நோபல் விருது பெற்ற அந்த விஞ்ஞானியின் மறைவு பெரும்பாலான ஊடகங்களில் செய்தியாகக்கூட வெளிவரவில்லை என்பது குறித்து வருத்தப்படுவதா, இல்லை கடந்து போவதா எனத் தெரியவில்லை.
மரபியல் குறித்த அடிப்படை ஆய்வை மேற்கொண்டு நவீன மரபியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் 1884-இல் மறைந்த ஆஸ்திரிய விஞ்ஞானி கிரிகர் மெண்டல். உயிரினங்களின் தோற்றம், பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து 1882-இல் மறைந்தவர் இயற்கையியல் அறிஞர் சார்லஸ் டார்வின். மேலோட்டமாக அவர்கள் வெளிப்படுத்தியிருந்த கருத்துகளின் அடிப்படையில் உயிரணுக்களின் ஜீவ ரகசியத்தைக் கண்டறிய முற்பட்ட பெருமைக்குரியவர் விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன்.
உடலை இயக்கும் புரதங்களை உருவாக்கும் செயல்பாடுகளின் தொகுப்புதான் "டி.என். ஏ.' என்று அழைக்கப்படும் டீயாக்சி ரிபோ நியூக்ளிக் ஆசிட்என்பது. இரண்டு இழைகள் சேர்ந்து "டபுள் ஹெலிக்ஸ்' எனப்படும் இரட்டைச் சுருளை உருவாக்குகிறது.
ஒரு சுருள் படிக்கட்டு போல, அதாவது ஓர் ஏணி பின்னலாகச் சுருண்டு இருப்பது போன்ற இரட்டை சுருள் சர்க்கரை, பாஸ்பேட் இரண்டாலும் ஆனவை. இதில்தான் உயிர் ரகசியமான உடலின் குறியீடு (கோட்) அமைந்திருக்கிறது.
இதுதான் பிரபஞ்சத்தின் முக்கியமான மூலக்கூறு (மாலிக்யூல்) என்று டி.என்.ஏ.-வை உலகுக்கு தெரியப்படுத்திய பெருமைக்குரியவர் தனது 97-ஆவது வயதில் விடைபெற்றிருக்கும் மாலிக்குலர் பயாலஜியின் முன்னோடிகளில் ஒருவரான ஜேம்ஸ் வாட்சன்.
ரோசலின்ட் ஃபிராங்க்ளின் என்கிற மூலக்கூறு விஞ்ஞானியின் சில கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் பிரான்சிஸ் கிரிக், மோரிஸ் வில்கின்ஸுடன் இணைந்து டி.என்.ஏ. என்கிற மகத்தான கண்டுபிடிப்பை வெளிப்படுத்தினார் வாட்சன். அதற்காக அவர்களுக்கு 1962-இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
உயிர்களின் மூலக்கூறு டி.என்.ஏ. அது நுண்ணுயிரியானாலும், விலங்கினங்களானாலும், பறவையினங்களானாலும், மனிதனானாலும் பிறப்பின் ரகசியம் அனைத்தையும் சேகரித்துப் பாதுகாக்கும் மூலக்கூறுதான் டி.என்.ஏ. என்பது. நியூக்ளியஸின் குரோமோசோம்களில் டி.என்.ஏ. மூலக்கூறு அடங்கி இருக்கிறது.
இன்று டி.என்.ஏ. ஒருவருடைய வருங்காலம் குறித்தும், அவரைப் பாதிக்கக்கூடிய நோய்கள் குறித்தும் தெரிவிக்கும்; அவரைப் பற்றி மட்டுமல்ல, அவரது முன்னோர்களின் வரலாறு குறித்தும் தெரிவிக்கும்; ஆன்த்ராபாலஜி என்கிற அறிவியல் பிரிவு மனித இனம் மட்டுமல்ல ஒட்டுமொத்த உயிரினங்களின் வரலாறு குறித்தும் புதிய வெளிச்சம் பெற்றிருக்கிறது; குற்ற விசாரணைகளும் சரி, இன்னாருடைய குழந்தை என்பதை நிரூபிப்பதிலும் சரி டி.என்.ஏ. துல்லியமாகக் காண்பிக்கிறது.
புற்றுநோய்க்கு தீர்வு காணும் முயற்சி வரை எட்டி இருக்கிறது.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1928-ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி பிறந்த ஜேம்ஸ் வாட்சன் சிகாகோ, இண்டியானா பல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டம் பெற்று பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கேவென்டிஷ் ஆய்வுக்கூடத்தில் ஆய்வுக்காக சேர்ந்தபோது அவருக்கு வயது 25. அப்போதுதான் அவரும், பிரான்சிஸ் கிரிக்கும் சந்தித்து நண்பர்கள் ஆனார்கள். அவர்களது ஆராய்ச்சி முடிவுதான் 1953-இல் வெளியிட்ட டி.என்.ஏ.வின் இரட்டைச் சுருள் மாடல்.
வாட்சன், கிரிக்கின் ஆய்வுகள்படி உயிரின் பாரம்பரிய விவரங்கள் அதாவது மரபணுவின் ரகசியங்கள் இரண்டு நீண்ட சுருள் இழைகளில் ஒன்றோடு ஒன்று பிணைந்தபடி நிலைத்திருக்கின்றன. அவற்றுக்குள் அடினின், தைமின், குவானின், சைட்டோஸின் எனப்படும் நான்கு ஹைட்ரஜன் அடிப்படைகள் ஜோடிகளாக இணைந்திருக்கின்றன. இதுதான் உயிர் குறியீடு!
தலைமுறைகளின் தொடர்புடன் கடந்து கொண்டிருக்கும் டி.என்.ஏ. என்கிற உயிர் குறியீட்டின் வழி நடத்தப்படும் ஆய்வுகள்தான் இன்றைய ஹெச்.ஜி.பி. எனப்படும் ஹியூமன் ஜினோம் ப்ராஜெக்ட்டின் அடிப்படை. 1990-இல் தொடங்கிய ஹியூமன் ஜினோம் திட்டத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து இரண்டே ஆண்டுகளில் அவர் விலகினார். ஆய்வு முடிவுகளுக்கு காப்புரிமை வாங்குவது என்று முடிவு எடுத்ததை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒட்டுமொத்த மனித இனத்தின் உரிமையைத் தனியாருக்குச் சொந்தமாக்குவதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று அவர் சொன்னதை ஏனைய விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.
அவருடைய தாயார் ஜீன் மிட்சேல் பரம்பரை குணாதிசயங்களில் நம்பிக்கை உடையவர். உழைப்பு, ஒழுக்கம் உள்ளிட்ட வாட்சன் குடும்பத்தின் அடிப்படை குணாதிசயங்களுக்குக் காரணம், அவர்களது ஸ்காட்லாந்து ரத்தம் என்பது அவரது நம்பிக்கை. மனிதனை உருவாக்குவது, சந்தர்ப்ப சூழல்களும், வளர்க்கப்படும் விதமும்தானே தவிர, பரம்பரை குணாதிசயங்கள் அல்ல என்று தனது தாயாருடன் வாதம் செய்வாராம் சிறுவன் வாட்சன். மரபணு குறித்த ஆய்வுகள் தனது தாயார் சொன்னதை உறுதிப்படுத்தியதாகவும் தனது கருத்து தவறானது என்றும் பின்னாளில் பதிவு செய்திருக்கிறார் வாட்சன்.
மரபணு ரகசியத்தை உலகத்துக்கு வெளிக்கொணர்ந்த விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன், அறிவியல் உலகில் ஒருநாளும் ஒளி மங்காத நட்சத்திரமாக ஜொலிப்பார். அவரது மறைவு குறித்து யாரும் ஏன் கவலைப்படவில்லை? மனிதர்களின் மரபணு (டி.என்.ஏ.) அப்படி... !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.