வெற்றி எதிர்பாராதது அல்ல!

பிகாரில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டதுடன், வரலாறு காணாத வெற்றியைப் பெற்றிருக்கிறது.
வெற்றி எதிர்பாராதது அல்ல!
Published on
Updated on
2 min read

பிகாரில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டதுடன், வரலாறு காணாத வெற்றியைப் பெற்றிருக்கிறது. மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பெரும்பான்மையுடன் அந்தக் கூட்டணி ஆட்சி தொடர இருப்பது, பிரதமர் நரேந்திர மோடி மீதும், முதல்வர் நிதீஷ் குமார் மீதும் பிகார் மக்கள் வைத்திருக்கும் அதீத நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது.

முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைமையில் அமைந்த 'இண்டி' கூட்டணி படுதோல்வி அடைந்திருப்பதுடன், அதன் தலைவர் தேஜஸ்வி யாதவ் எதிர்க்கட்சித் தலைவருக்கான அதிகாரத்தைக்கூட பெற முடியவில்லை. 143 தொகுதிகளில் போட்டியிட்ட ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.) 25 இடங்களிலும், 61 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் ஆறே ஆறு இடங்களிலும்தான் வெற்றிபெற முடிந்திருக்கிறது.

மொத்தம் 7.45 கோடி வாக்காளர்களைக் கொண்ட பிகாரில் வரலாறு காணாத வகையில் 67% வாக்குகள் பதிவானபோதே, முடிவுகள் எதிர்பாராதவாறு இருக்கும் என்பதை ஊகிக்க முடிந்தது. ஆண்களைவிட (62.8%) பெண்கள் (71.6%) அதிக அளவில் வாக்களித்ததன் அடிப்படையில்தான் வாக்குக் கணிப்புகள் நிதீஷ் குமாரின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியைக் கணித்தன.

நிதீஷ் குமாரை முதல்வராக முன்னிறுத்தாமல் இருந்திருந்தால் இத்தகைய வெற்றியை ஆளும் கூட்டணி அடைந்திருக்க முடியாது. தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்கு இருந்ததுபோல, 'நல்லவர், உண்மையானவர், திறமையானவர்' என்கிற மக்கள் நம்பிக்கை நிதீஷ் குமார் மீது பிகார் மக்கள் மத்தியில் பரவலாகவே இருந்துவந்தது. அதிலும் குடும்பத்துக்கு ரூ.10,000 வழங்கி மகளிர் சுயமாகத் தொழில் தொடங்க அவர் வழிகோலியபோது, அவர்கள் பெருமளவில் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

பெண்களின் வாக்குகளால் பிகார் தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கப்பட்டிருப்பதன் பின்னணியில் ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய சமூக மாற்றத்தை நாம் கவனிக்க வேண்டும். இதுவரையில் ஜாதி, மத வாக்கு வங்கிகளின் அடிப்படையில் மட்டுமே இருந்த பிகார் அரசியலின் போக்கையே இந்த முடிவுகள் மாற்றியிருக்கின்றன.

தேர்தல் முடிவுகள் வேறுமாதிரியாக அமைந்திருந்தால், அது முந்தைய ஜாதி அரசியலின் நீட்சிக்கு வழிகோலியிருக்கும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அடிப்படையிலேயே சில சாதகமான காரணிகள் இருந்தன. கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் விலகி விடாமல், அனைவரையும் ஒருங்கிணைத்து, அரவணைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுவாகக் கட்டமைத்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அரசியல் சாதுரியம்தான் மிக முக்கியமான காரணம்.

ஆர்.ஜே.டி. தலைமையில் காங்கிரஸ் கட்டமைத்த 'இண்டி' கூட்டணி யாதவர்கள், முஸ்லிம்கள் கூட்டணி என்கிற பிம்பத்தை மக்கள் மனதில் ஏற்படுத்திவிட்டது. அந்தக் கூட்டணியின் முகமாக யாதவ், முஸ்லிம் தலைவர்கள் முழுமூச்சில் களமிறங்கியபோது, ஏனைய சமுதாயப் பிரிவினர் மத்தியில் முந்தைய லாலுபிரசாத் யாதவின் 'காட்டாட்சி' அச்சம் ஏற்பட்டது எனலாம்.

அதற்கு மாற்றாக முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் உயர் ஜாதியினர், ஏனைய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிராக் பாஸ்வான், மாஞ்சி உள்ளிட்டவர்களின் தலைமையிலான அடித்தட்டுப் பட்டியலினத்தவர்கள், உபேந்திர குஷ்வாகாவின் ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா அடங்கிய வலிமையான கூட்டணியாக அமைந்தது; அதை தேஜஸ்வி யாதவ் உணரத் தவறிவிட்டார் என்றுதான் தோன்றுகிறது.

லாலு பிரசாத் யாதவ் காலக் 'காட்டாட்சி' அவப்பெயரில் இருந்து தன்னையும், ஆர்.ஜே.டி.யையும் ஓரளவுக்கு அகற்றி நிறுத்தும் முயற்சியில் தேஜஸ்வி யாதவ் வெற்றி அடைந்திருந்தார். அவர் துணை முதல்வராக இருந்தபோது வேலைவாய்ப்புகளை உருவாக்கி இருந்ததும், தனது பிரசாரங்களில் வேலைவாய்ப்புகளுக்கு முன்னுரிமை வழங்கியதும் இளைஞர்கள் மத்தியில் அவரது செல்வாக்கை அதிகரித்தது. ராகுல் காந்தியின் 'வாக்குத் திருட்டு' பரப்புரை, தேஜஸ்வி யாதவின் ஆக்கபூர்வ அரசியலைத் தடம்புரள வைத்து, மிகப் பெரிய தோல்விக்கு வழிகோலியிருக்கிறது.

'இண்டி' கூட்டணியின் படுதோல்விக்கு காங்கிரஸும், ராகுல் காந்தியும்தான் மிகப்பெரிய காரணம் என்று சொன்னால் அதில் தவறே இல்லை. தனக்கென்று ஒரு முதல்வர் வேட்பாளர் இல்லை என்று தெரிந்தும், தனித்துப் போட்டியிட்டால் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியாது என்று அறிந்திருந்தும் கடைசிவரை 'இண்டி' கூட்டணியில் தொகுதி உடன்பாடு ஏற்படாமல் காங்கிரஸ் இழுத்தடித்தது. அது மக்கள் மத்தியில் அந்தக் கூட்டணியின் நம்பகத்தன்மையைக் குலைத்துவிட்டது. தொகுதி உடன்பாடு ஏற்படாமல் தோழமைக் கட்சியினர் தங்களுக்குள் போட்டியிட்ட 'இண்டி' கூட்டணியின் கேலிக்கூத்தை, பாஜக கூட்டணி தனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டது.

'இண்டி' கூட்டணியின் தோல்விக்கு ராகுல் காந்தி எந்த அளவுக்குக் காரணமோ, அதேபோல தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி முக்கியமான

காரணம். அவரால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் கடைசி நேரத்தில் 'இண்டி' கூட்டணியைத் தோற்கடிக்கும் நோக்கத்தில் தங்கள் வாக்குகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு மடைமாற்றம் செய்திருக்கக்கூடும் என்று தெரிகிறது.

'வாக்குத் திருட்டு', தேர்தல் முறைகேடுகள் என்றெல்லாம் தோல்விக்குக் காரணம் கற்பித்துத் தனது பலவீனங்களை நியாயப்படுத்தாமல், ஆக்கபூர்வ அரசியல் மூலம், இழந்துவிட்ட மக்கள் செல்வாக்கை மீட்டெடுக்கும் வழிகளைக் காங்கிரஸ் யோசிக்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதுபோல, மாநிலக் கட்சிகளின் வெற்றி வாய்ப்பைக் கெடுக்கும் ஒட்டுண்ணியாக காங்கிரஸ் நீண்டகாலம் தொடர முடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com