

பாகிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே அதிகார மோதல் ஏற்படுவது புதிதொன்றுமல்ல. பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றதிலிருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்துவிட்டு பலமுறை அங்கு ராணுவ ஆட்சி நடைபெற்றுள்ளது. ஆனால், இந்த முறை ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, ராணுவத்திடம் தனது அதிகாரத்தை "அதிகாரபூர்வமாக' இழந்திருக்கும் விநோதம் நிகழ்ந்திருப்பதுதான் சற்று வித்தியாசமானது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 27-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீருக்கு "சட்டத்துக்கும் மேலானவர்' என்கிற அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. ராணுவ தலைமைத் தளபதியாக இருந்துவந்த அவர் பாதுகாப்புப் படைகளின் தலைவர் என்கிற அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டிருக்கிறார். ராணுவம் மட்டுமன்றி, கடற்படை, விமானப் படையும் அவரது தலைமையின் கீழ் வந்திருக்கிறது.
பாகிஸ்தான் வரலாற்றில் இரண்டே பேருக்குத்தான் "ஃபைவ் ஸ்டார்' ஜெனரல் எனப்படும் ஃபீல்டு மார்ஷல் என்கிற உயரிய பதவி வழங்கப்பட்டிருக்கிறது. முதலில் இந்தப் பதவியை 1965-இல் அதிபராக இருந்த முகமது அயூப் கான் தனக்குத் தானே வழங்கிக் கொண்டார். இரண்டாவதாக, இப்போதைய ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீருக்கு கடந்த மே மாதம் அந்தப் பதவியை பாகிஸ்தான் அரசு வழங்கியது.
அதிபரையும், ஆளுநர்களையும் அவர்கள் பதவியில் இருக்கும்போது எந்தச் சட்ட நடவடிக்கைக்கும் உட்படுத்த முடியாது. ஆனால், ஃபீல்டு மார்ஷல் அந்தஸ்தை பெற்றவர்களை அவர்களின் ஆயுளுக்கும் எந்தச் சட்ட நடவடிக்கைக்கும் உட்படுத்த முடியாது என்பதை இப்போதைய அரசமைப்புச் சட்டத் திருத்தம் ஏற்படுத்தி இருக்கிறது. அதன்படி, அசீம் முனீரை பதவியிலிருந்து நீக்க வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும்.
அணுசக்தி மற்றும் நாட்டின் அதிமுக்கிய ராணுவத் தளவாடங்களை மேற்பார்வையிட தேசிய மூலோபாய சொத்துகளின் கமாண்டர் என்ற பதவியும் 27-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் கீழ் புதிதாக உருவாக்கப்படும். முப்படைகளின் தலைவரான அசீம் முனீர் பரிந்துரை செய்யும் நபரையே அந்தப் பதவிக்கு பிரதமர் நியமிக்க வேண்டும்.
பாதுகாப்புப் படைகளின் தலைமை மட்டுமன்றி உச்சநீதிமன்றத்தின் அதிகாரங்களைக் குறைத்து, புதிதாக ஓர் அரசியல் சாசன நீதிமன்றமும் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது; அரசமைப்புச் சட்டம் சார்ந்த விவகாரங்களை உச்சநீதிமன்றத்துக்குப் பதிலாக அரசியல் சாசன நீதிமன்றமே இனி கையாளும். சிவில், கிரிமினல் வழக்குகளை மட்டுமே உச்ச நீதிமன்றம் கையாளும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
புதிய அரசியல் சாசன நீதிமன்ற உருவாக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் அத்தார் மின்னல்லா, சையது மன்சூர் அலி ஷா ஆகியோர் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். அரசின் நடவடிக்கை, உச்சநீதிமன்றத்தின் அரசமைப்பு அதிகாரத்தைப் பறித்துவிட்டது என்பது அவர்களின் குற்றச்சாட்டு.
பாகிஸ்தானின் அரசியல் வரலாற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசானாலும், ராணுவ ஆட்சி என்றாலும் அவர்களுக்கு கடிவாளமாகச் செயல்பட்டு வந்தது உச்சநீதிமன்றம்தான். அதன் அதிகாரத்தையே இப்போது குறைத்திருப்பது அந்த நாட்டு மக்களைக் கவலையில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த நடவடிக்கைக்குப் பின்னாலும் ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீர்தான் இருந்திருக்கிறார் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பின்னர் அசீம் முனீருக்கு ஃபீல்டு மார்ஷல் பதவியை பாகிஸ்தான் அரசு வழங்கியது. சவூதி அரேபியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு கடந்த செப்டம்பரில் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃபுடன் அசீம் முனீரும் பயணம் மேற்கொண்டார். பிரதமரின் சர்வதேச பயணத்தில் ராணுவ தலைமைத் தளபதியும் செல்வது பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் இல்லாதது. அசீம் முனீருக்கு ஏன் இந்த அளவுக்கு முக்கியத்துவம்?
ஆபரேஷன் சிந்தூரில் இந்தியா கொடுத்த கடுமையான பதிலடியால் நாட்டில் எழுந்துள்ள எதிர்ப்புகளைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அரசு திணறி வருகிறது. பாகிஸ்தானை ஆட்சி செய்வது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசா, ராணுவமா என்கிற கேள்விகள் எழாமல் இல்லை.
பாகிஸ்தானின் ராணுவம் திறமையானதுதான் என்றாலும்கூட தனது வரம்பை மீறிய இஸ்லாமிய அடிப்படைவாத முனைப்பையும், அரசியல் அதிகாரத்தைக் கையில் எடுக்கும் ஆசையையும் கொண்டிருப்பதாக 1970-இல் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. வகைப்படுத்தியது நூற்றுக்கு நூறு உண்மை.
அயூப்கான், ஜியா உல் ஹக், முஷாரஃப் உள்ளிட்ட முந்தைய ராணுவ தலைமைத் தளபதிகள் ராணுவத்தையும் அரசியல் பேராசையையும் ஒருங்கே கையாளத் தெரிந்தவர்களாக இருந்தனர். ஆனால், தன்னை ஃபீல்டு மார்ஷலாகவும் சட்டத்துக்கு மேலானவராகவும் உயர்த்திக்கொண்டிருக்கும் அசீம் முனீர் பாகிஸ்தான் ராணுவத்தை இஸ்லாமிய அடிப்படைவாத ராணுவமாக மாற்றி இருப்பதுதான் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.
இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி அரசியலில் ராணுவம் தனது செல்வாக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தவிர்க்க முடியாத சூழ்நிலைக்கு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் தள்ளப்பட்டிருக்கிறார். அதற்கு ராணுவத்தைத் தனக்கு ஆதரவாக வைத்துக்கொண்டு அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியைத் தொடரலாம் என்கிற அவரது நைப்பாசை காரணமாக இருக்கலாம். புலி வாலைப் பிடித்திருக்கிறார் ஷாபாஸ் ஷெரீஃப்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.