

சமூக ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் மத்தியில் பிகாரில் நிதீஷ் குமார் தலைமையிலான பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அடைந்திருக்கும் வரலாற்று வெற்றி பேசுபொருளாக மாறியிருக்கிறது. அதை அரசியல் ரீதியிலான வெற்றி என்பதைவிட அவர்கள் சமூக ரீதியிலான மாற்றமாகப் பார்க்கிறார்கள்.
243 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்றிருப்பது சாதாரணமான ஒன்றல்ல. மகதம்- சாகாபாத்; சாப்ரா-சிவான்-முசாஃபர்பூர்-தர்பங்கா; கோசி-சஹார்சா என்று நான்கு பாகங்களாக பிகார் மாநிலம் பிரிக்கப்படுகிறது. ஒவ்வொன்றும் தனித்தனியான உள்ளூர் மொழிகள், வரலாறு, புவியியல் என்று வேறுபட்டுக் கிடக்கிறது. ஒவ்வொன்றும் தனித்தனி ஜாதியப் பிரிவுகளின் கூட்டணியாகத் திகழ்கின்றன.
அப்படி இருந்தும் அனைத்துப் பகுதிகளிலும் நிதீஷ் குமார் அரசுக்கு ஒரே மாதிரியான சாதக அலை வீசியிருக்கிறது. மத ரீதியிலான, ஜாதி ரீதியிலான கூட்டணிகளைத் தகர்த்து எறிந்திருக்கிறது அந்த ஆதரவு அலை. அதற்கு ஒரே ஒரு காரணம்தான்; ஜாதி, மத வேறுபாடுகளை மீறி 2.78 கோடி மகளிர் ஆண்களைவிட அதிக அளவில், அனைத்துப் பகுதிகளிலும் ஒரேபோல வாக்களித்திருப்பதுதான் அந்த வெற்றியின் ரகசியம். முன்னெப்போதும் இல்லாத வகையில் 71.6% பெண்கள் வாக்குச்சாவடியில் திரண்டபோதே, காற்று பாஜக கூட்டணிக்கு சாதகமாகத் திரும்பி இருப்பது உறுதியாகி விட்டது.
இந்தியத் தேர்தல்களிலும், அன்றாட வாழ்க்கையிலும் மகளிரின் பங்களிப்பு என்பது கணிசமாகவே இருப்பதை யாரும் மறுத்துவிட முடியாது. ஆனால், அதற்கேற்ப அவர்களுக்கு நமது அரசியல் கட்சிகள் எந்த அளவுக்கு அதிகாரப் பகிர்வில் இடமளித்திருக்கின்றன என்கிற கேள்வி எழும்போது, வஞ்சியர் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பதை நாம் மறுக்கவும் முடியாது.
2027-இல் இந்திய நீதித் துறை வரலாற்றில் முதன்முறையாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி ஏற்க இருக்கும் பி.வி. நாகரத்னா கூறுவதுபோல, "இந்தியாவில் எண்ணிக்கை பெரும்பான்மை உள்ள சிறுபான்மையினர் பெண்கள்தான். மொத்த மக்கள்தொகையில் 48% இருக்கும் மகளிரில் மிக மிகக் குறைவானவர்கள் மட்டுமே எந்தவொரு உயர் பதவியிலோ, நிறுவனத் தலைமையிலோ ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். தனியார் துறையில் அவர்கள் தங்கள் திறமையால் உயர் பதவிகளை அடைவதுபோல, அரசியலிலும் ஆட்சியிலும் தங்களுக்குரியதான தகுதிக்கு உரிய இடத்தை அடைந்துவிட முடிவதில்லை' என்பதைத்தான் பல்வேறு புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன.
பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள் பலர் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிகளை அடைய முடிந்திருக்கிறது. உள்ளாட்சி, நகராட்சி அமைப்புகளில் பரவலாக 33% இடங்கள் மகளிருக்கு ஒதுக்கப்படுகின்றன. பிகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் 50% வரை அவர்களுக்கு உள்ளாட்சி, நகராட்சி அமைப்புகளில் ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் பல மாநகராட்சிகளில் மேயர் பதவிகள் மகளிருக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அதெல்லாம் இருந்தாலும், சட்டப்பேரவை, மக்களவை என்று வந்தால் பெண்களுக்கு அதேபோன்ற பிரதிநிதித்துவம் வழங்கப்படுகிறதா என்றால் இல்லை.
பெண்களுக்கு சட்டப்பேரவையிலும், மக்களவையிலும் 33% இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதற்கு எல்லா அரசியல் கட்சிகளும் உதட்டளவில் ஆதரவு தெரிவித்தன. சமாஜவாதி கட்சியும், ராஷ்ட்ரீய ஜனதா தளமும் அதில் இட ஒதுக்கீடு வேண்டும் என்கிற கோரிக்கையை எழுப்பி முடிந்தவரை ஒத்திப்போட்டன.
1996-இல் தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா 2010-இல் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. அதற்குப் பிறகு மக்களவையில் தாக்கல் செய்து, நிறைவேற்றப்படாமல் காலாவதியானது. 2023-இல் "நாரி சக்தி வந்தன் அதினியம் மசோதா' என்கிற பெயரில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் முதல் கூட்டத்தில் அதே மசோதா நிறைவேற்றப்பட்டும்கூட, இன்னும் நடைமுறைக்கு வராமல் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.
2021-இல் நடைபெற வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு இப்போதுதான் தொடங்கி இருக்கிறது. அதனடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடத்தப்பட்டு அதன் பிறகுதான் அந்தச் சட்டம் நடைமுறை சாத்தியமாகும். அதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகளாகுமோ தெரியவில்லை.
தேர்வுகள், நேர்காணல்கள் மூலம் விசாரணை நீதிமன்றங்களில் 35% அளவில் மகளிர் நீதிபதிகளாக இருக்கிறார்கள். ஆனால், உயர் நீதிமன்றங்களில் 14.27% மட்டும். உச்சநீதிமன்றத்தில் 2021-இல் நீதிபதி நாகரத்னா பதவி ஏற்றபிறகு ஒரு பெண் நீதிபதிகூடத் தேர்வு செய்யப்படவில்லை. இதற்கிடையில் நியமிக்கப்பட்ட 21 நீதிபதிகளும் ஆண்கள். இந்தியாவிலேயே மகளிரைப் புறக்கணிக்கும் ஒரு துறையாக உயர் நீதித் துறை இருக்கிறது.
2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 8,360 வேட்பாளர்களில் 799 பேர்தான் பெண்கள் (9.5%). அண்மையில் நடந்த பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வரலாறு காணாத அளவில் மகளிர் (71.6%) திரண்டு வந்து வாக்களித்து, நிதீஷ் குமார் அரசுக்கு ஆதரவளித்தனர் என்றால், ஐக்கிய ஜனதா தளத்தின் 101 வேட்பாளர்களில் 13 பேர்தான் பெண்கள்; அதாவது வெறும் 12.9%.
மகளிர் உரிமைத் தொகை வழங்குவது, இலவச பேருந்துப் பயணம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிதி ஒதுக்கீடு என்று அவ்வப்போது ஆசைகாட்டி, தேர்தலில் அவர்களது வாக்குகளைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் அரசியல் கட்சிகள், மகளிருக்கு வழங்கப்பட வேண்டிய சமமான ஆட்சி அதிகாரப் பகிர்வை எப்போது வழங்கப் போகின்றன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.