

ஐனநாயகனநாயக அரசியலில் தொடர்ந்து 20 ஆண்டுகள் ஆட்சி அதிகா ரேத்தில் முதல்வராகத் தொடர்வது என்பது அவ்வளவு எளிதான சாதனையல்ல. இதுவரையில் 25 ஆண்டுகள் சிக்கிமில் முதல்வராக இருந்த பவன்குமார் சாம்லிங், ஒடிஸாவில் 24 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வராகத் தொடர்ந்த நவீன் பட்நாயக், மேற்கு வங்கத்தில் 23 ஆண்டுகள் தொடர்ந்து முதல்வராக இருந்த ஜோதி பாசு மூவர் மட்டுமே 20 ஆண்டுகளைக்
கடந்து மக்கள் செல்வாக்குடன் முதல்வராகத் தொடர்ந்தவர்கள். இப்போது அந்தப் பட்டியலில் பிகாரின் முதல்வராகப் பதவி ஏற்றிருக்கும் நிதீஷ் குமாரும் இணைகிறார். பாஜகவால் மீண்டும் முதல்வராக்கப்படமாட்டார் என்பது உள்ளிட்ட விமர்சனங்களை எதிர்கொண்ட முதல்வர் நிதீஷ் குமாருக்கு, அவரேகூட எதிர்பார்த்திருக்க முடியாத வெற்றியை பிகார் வாக்காளர்கள் அளித்திருக்கிறார்கள். அதுவும், பிகாரின் அத்தனை மாவட்டங்களிலும், பகுதிகளிலும் ஒரே போல நிதீஷ் ஆதரவு அலை வீசியிருக்கிறது என்பது, அந்த தனிமனிதர் மீது மக்கள் வைத்திருக்கும் அதீத நம்பிக்கையின் வெளிப்பாடு.
மொத்தமுள்ள 243 இடங்களில் 202 இடங்களை நிதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றியிருப்பது முதல் முறையல்ல. 2010-இல் நிதீஷ் தலைமையில் இதே கூட்டணி 206 இடங்களைப் பெற்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அப்போது, 22.58% வாக்குகளுடன் 115 இடங்களில் ஜே.டி.யு.வும், 16.49% வாக்குகளுடன் 91 இடங்களில் கூட்டணிக் கட்சியான பாஜகவும் வெற்றி பெற்றது.
பிப்ரவரி 2005 முதல், நிதீஷ் குமாரின் துணையோடு படிப்படியாக முன்னேறி இப்போது 20.8% வாக்குகளுடன் 89 இடங்களில் வென்று பிகாரில் தன்னை ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக பாஜக உயர்த்திக்கொண்டிருக்கிறது. அதற்கு 20 ஆண்டுகள் அந்தக் கட்சி பொறுமை காத்ததுடன், நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைமையையும் ஏற்றுக்கொண்டதுதான் காரணம். இப்போதைய வெற்றியை நிதீஷ் குமாரின் வெற்றி என்பதைவிட, நிதீஷ் குமார்-நரேந்திர மோடி கூட்டணியின் வெற்றி என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.
பிகாரில், மாற்றத்தை ஏற்படுத்த 'லோக்நாயக்' ஜெயபிரகாஷ் நாராயண் 1974-இல் தொடங்கிய போராட்டத்தின் மூலம் அரசியலுக்கு வந்த மாணவர் தலைவர்கள்தான் நிதீஷ் குமாரும், லாலு பிரசாத் யாதவும்; பாட்னா பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்த லாலு பிரசாத் யாதவும், பொறியியல் பட்டதாரியான நிதீஷ் குமாரும் அப்போதைய பாட்னா பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முக்கியமான இரண்டு தலைவர்கள். 1977 மக்களவைத் தேர்தலில் ஜனதா கட்சி வேட்பாளராக லாலு பிரசாத் யாதவ் சப்ரா தொகுதியில் போட்டியிட்டபோது, அவருக்கு பிரசாரம் செய்வதற்காகத் தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்தவர் அவரது நண்பராக இருந்த நிதீஷ் குமார். இருவருமே கல்லூரி நாள்களில் பிற்பட்ட வகுப்பினரின் அரசியல் அதிகாரத்துக்கான போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள்.
தன்னை பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பெரும்பான்மையினராக இருக்கும் யாதவர்களின் பிரதிநிதியாக முன்னிலைப்படுத்திக் கொள்வதில் முனைப்பாக இருப்பவர் லாலு பிரசாத் யாதவ் என்றால், தன் மீது ஜாதி முத்திரை விழுந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பவர் நிதீஷ் குமார். தன்னை ஒரு பிற்படுத்தப்பட்ட 'குர்மி' இனத் தலைவராக அவர் அடையாளம் காட்டிக் கொண்டதே இல்லை. அதற்குப் பதிலாக யாதவர் அல்லாத அனைத்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதார ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் பிரதிநிதியாக செயல்பட்டதுதான் நிதீஷின் வெற்றியின் ரகசியம்.
1980-இல் முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் ஆதரவுடன் லாலு பிரசாத் யாதவை பிகார் சட்டப்பேரவை ஜனதா கட்சியின் தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் தேர்ந்தெடுக்க வைத்தவர் நிதீஷ் குமார்தான். அதேபோல, 1990-இல் லாலு பிரசாத் யாதவ் பிகார் முதல்வரானதற்குப் பின்னாலும் நிதீஷ் குமாரின் காய் நகர்த்தல்கள் காரணமாக இருந்தன. தனக்கு ஆதரவாக பின்னணியில் செயல்பட்ட நிதீஷ் குமாரை, முதல்வராக உயர்ந்துவிட்ட லாலு பிரசாத் யாதவ் ஓரம்கட்ட நினைத்தபோதுதான் 1994-இல் ஜனதா தளத்தில் இருந்து வெளியேறி ஜார்ஜ் பெர்னாண்டஸ், சரத் யாதவ் ஆகியோருடன் சமதா கட்சியைத் தொடங்கினார் நிதீஷ் குமார்.
2005-இல் முதல்வரானது முதல் இன்றுவரையில், யாரையும் எதிரியாகப் பார்க்காமல் அரவணைத்துக் கொண்டு வெற்றிகரமாகக் கூட்டணியை வழிநடத்தும் திறமை அவரது வெற்றிக்கு முக்கியமான காரணம். ஆனால், வெளியில் சொல்லாமல், அவர் ஜாதி-மதங்களைக் கடந்து மகளிர் வாக்கு வங்கிக் கூட்டணியைக் கட்டமைத்து கொண்டார். 2015 -இல் மதுவிலக்கை அமல்படுத்துவதில் தொடங்கி, அவர் அமைத்திருக்கும் மக்கள் ஆதரவுக் கூட்டணிதான் இப்போது அவரை பத்தாவது முறையாக பிகார் அரியணையில் மீண்டும் அமர்த்தி இருக்கிறது.
நிதீஷ் குமார் ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்படுகின்றன; வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவில்லை; கல்வி, சுகாதாரம், இரண்டுமே புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன; தொழில்வளம் பெருகவில்லை என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. சற்று கூர்ந்து கவனித்தால், முந்தைய காட்டாட்சி காலத்தில் இருந்து எந்த அளவுக்கு பிகார் முன்னேறி இருக்கிறது என்பது தெரியும்.
இது நிதீஷ் குமாரின் கடைசி ஆட்சிக் காலமாகக்கூட இருக்கலாம். ஆனால், அடுத்த ஐந்தாண்டுகள்தான் பிகாரின் வளர்ச்சி விரைவடையக்கூடும். நிதீஷ் குமாரின் வெற்றிக்கு நல்லாட்சிதான் காரணமே தவிர, இலவசங்கள் அல்ல என்பதை வரலாறு பதிவுசெய்யும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.