

மத்திய அரசு வெள்ளிக்கிழமை முதல் அமல்படுத்தியுள்ள நான்கு தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களுக்கு தொழில் நிறுவனங்கள் வரவேற்பும், எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிலாளர் சங்கங்கள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளது எதிர்பாராதது அல்ல. மாறி வரும் சமூக, பொருளாதார சூழ்நிலையில் இந்த சட்ட சீர்திருத்தம் தவிர்க்க முடியாத ஒன்று என்பதை சம்பந்தப்பட்ட அனைவரும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பும், பிறகும் அதாவது 1930 முதல் 1950-கள் வரையில் தொழிலாளர் நலனுக்காக 44 சட்டங்கள் இயற்றப்பட்டன. அவற்றில் 15 சட்டங்களை ஒழித்துவிட்டு எஞ்சிய 29 சட்டங்களை ஒருங்கிணைத்து ஊதிய விதி-2019, தொழில் துறை தொடர்பு விதி-2020, சமூகப் பாதுகாப்பு விதி-2020 மற்றும் பணிப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிச்சூழல் விதி-2020 என 4 சட்டத் தொகுப்புகளாக இப்போது மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் 1,436 தொழிலாளர் சட்ட விதிகள் 351-ஆக சுருக்கப்பட்டுள்ளன.
நாட்டில் 1990-களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண பிரதமர் நரசிம்ம ராவ் தலைமையிலான அன்றைய மத்திய அரசு புதிய பொருளாதாரக் கொள்கையை அமல்படுத்தியது. அதற்கேற்ப தொழிலாளர் சட்டங்களையும் சீரமைக்க, தனிப்பெரும்பான்மை இல்லாத அவரது 5 ஆண்டுகால ஆட்சியில் சாத்தியப்படவில்லை. அதன் பிறகான ஆட்சியாளர்களாலும் அரசியல் காரணங்க ளால் சீர்திருத்தத்தைக் கொண்டுவர இயலவில்லை.
நரேந்திர மோடி அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 2015 முதல் 2019 வரையில் 4 ஆண்டுகள் தொழிலதிபர்கள்-தொழில்துறை பிரதிநிதிகள்-தொழிற்சங்கப் பிரதிநிதிகள் என முத்தரப்பு கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டு சட்டம் இயற்றப்பட்டது. அறிவிக்கை 2019 ஆகஸ்ட் முதல் 2020 செப்டம்பருக்குள் வெளியிடப்பட்டது.
மூன்று வேளாண்மைச் சட்டங்கள் இயற்றப்பட்ட 2020-இல் அதை எதிர்த்து விவசாயிகள் பெரும் போராட்டம் நடத்தினர். ஆதலால், அந்த 3 சட்டங்களும் 2021 டிசம்பரில் திரும்பப் பெறப்பட்டன. அந்த கொந்தளிப்பான சூழ்நிலையில் தொழிலாளர் சீர்திருத்த சட்டங்களையும் எதிர்த்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தின. வேளாண் சட்டங்களுக்கு ஏற்பட்ட நிலை தொழிலாளர் சட்டங்களுக்கும் ஏற்பட்டால், அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்பதால் அவை கிடப்பில் போடப்பட்டன. நாட்டின் நீடித்த-நிலைத்த வளர்ச்சியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள புதிய சட்டங்கள் மூலம் தொழிலாளர் நலனும், தொழில் நிறுவனங்களின் நலனும் சமன் செய்யப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது. ஆனால், அவை தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவான, தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்கள் என எதிர்க்கட்சிகளும், தொழிற்சங்கங்களும் எதிர்க்கின்றன.
தொழிலாளர்களுக்கு பணி நியமன ஆணை, குறைந்தபட்ச ஊதியம், ஊதிய விடுவிப்பு தேதி நிர்ணயம், தற்காலிக தொழிலாளர்களுக்கும் சலுகைகள், மருத்துவம் மற்றும் சமூகப் பாதுகாப்பு, இரவிலும் பெண்கள் பணி செய்ய அனுமதி, பாலினப் பாகுபாடின்றி ஊதியம் போன்றவற்றுக்கு உறுதி அளிக்கப்பட்டிருக்கின்றன.
புதிய சட்டத்தில் 8 மணிநேர வேலை எனக் கூறப்பட்டிருந்தாலும், தொழிலாளரின் சம்மதத்துடன் கூடிய கூடுதல் வேலை நேரத்துக்கு 2 மடங்கு ஊதியம் என்பது பணி நேரத்தை அதிகரிக்க மறைமுகமான தூண்டுதல் என்றும், காலப் போக்கில் அதுவே நிரந்தரமாகி விடும் என்றும் தொழிற்சங்கங்கள் அஞ்சுகின்றன.
அதுமட்டுமல்ல, இனிமேல் தொழில் நிறுவனங்களில் தங்களின் ஆதிக்கம் குறைந்துவிடும் என தொழிற்சங்கங்கள் அஞ்சுகின்றன. தொழிலாளர்களில் 51 சதவீதம் பேர் உறுப்பினர்களாக இருக்கும் தொழிற்சங்கங்கள் மட்டுமே கோரிக்கைகள் குறித்து நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும். தொழிற்சங்கங்கள் பெருகிவிட்ட நிலையில் அது நடைமுறைச் சாத்தியமல்ல என்பதும் அவர்களது அச்சத்துக்குக் காரணம்.
ஒருபுறம் இந்தியா பொருளாதார வளர்ச்சி அடைந்துவிட்டாலும்கூட, அந்த வளர்ச்சி அதிக அளவில் வேலைவாய்ப்பை வழங்கும் துறைகளால் ஏற்படவில்லை. சீனா, வியத்நாம் உள்ளிட்ட நாடுகளில் குறைந்த ஊதியமும், அதிக வேலை நேரமும் இருக்கும் நிலையில் வேலைவாய்ப்பை அதிகரிக்க அதேபோன்ற நடைமுறைகளைக் கையாள வேண்டிய நிர்ப்பந்தம் நமக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதன் பின்னணியில் புதிய மாற்றங்களை அணுக வேண்டும்.
முதல்முறையாக உணவு விநியோகம் உள்ளிட்ட துறைகளில் தற்காலிக பணிகளான 'கிக் தொழில்', 'பிளாட்பார்ம் தொழில்' மற்றும் 'அக்ரகேட்டார்' (இணையவழி விநியோக நிறுவனம்) தொழிலாளர்களும் சட்டத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால் அவர்கள் பயன் பெறலாம்.
சட்டத்தொகுப்பை எதிர்த்து 10 தொழிற்சங்கங்கள் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளன. திடீரென அறிவித்துள்ள சட்டத் தொகுப்பை அமல்படுத்த கால அவகாசம் அளிக்க வேண்டும் என தொழில் நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன.
இந்தியாவில் 15 முதல் 60 வயது பிரிவில் உள்ள 80 கோடி பேரில் 50 கோடி பேர் உழைக்கும் வர்க்கத்தினர். அவர்களில் 10% பேர் மட்டுமே நிரந்தர வேலைவாய்ப்பு பெறுபவர்கள். இந்த நிலையில், அனைவருக்குமான சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும். அதிக அளவில் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் தொழிலாளர் சட்டத்தின் திருத்தம் தவிர்க்க முடியாதது.
தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தையும், பாதுகாப்பையும், மருத்துவத் தேவைகளையும் உறுதிப்படுத்தும் விதத்திலான சட்டங்கள் இல்லையென்றால், பாதிப்பு பணியாளர்களுக்குத் தான். அந்த வகையில், இந்தச் சட்டங்கள் தவிர்க்க முடியாதவை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.