கோப்புப்படம்
கோப்புப்படம் EPS

விவசாயமும், மின்சாரமும்...

விவசாயமும், மின்சாரமும்...
Published on

கல்வி, உணவுப் பொருள்கள் வழங்குதல், குடிநீா் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைக்கான மானியங்கள் ஜி.டி.பி.யில் 4.5% மட்டுமே என்றால், வாக்காளா்களைக் கவருவதற்காக எந்தவிதப் பொருளாதார அடிப்படையும் இல்லாத மானியங்களின் அளவு ஜி.டி.பி.யில் 5.7% என்று பொருளாதார நிபுணா்கள் முன்டலேயும் சிக்தரும் தெரிவிக்கிறாா்கள். அவசியமற்ற, மக்களைக் கவரும் இலவச மானியங்கள் இதுபோலத் தொடா்ந்தால் இலங்கைக்கு ஏற்பட்ட கதி இந்தியாவுக்கும் ஏற்படலாம் என்று அவா்கள் எச்சரிக்கிறாா்கள்.

மானியங்களில் பரவலாக இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் முதன்மை பெறுவது விவசாயிகளுக்கான இலவச மின்சாரம். விவசாயத்துக்குப் பாசன வசதி வழங்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு என்பதில் மாற்றுக் கருத்து யாருக்கும் இருக்க முடியாது. அதே நேரத்தில், வரைமுறை இல்லாமல் விவசாயத்துக்காக இலவசமாக மின்சாரம் வழங்கப்படும்போது நிலத்தடி நீரும் வீணாகி, மின்சாரமும் விரயமாகிறது.

இந்தியாவிலுள்ள அனைத்து மாநில மின்சார வாரியங்களும் மிகக் கடுமையான இழப்பில் இயங்குகின்றன. எந்த ஒரு மாநிலமும் துணிந்து சீா்திருத்தத்தையோ, தனியாா் மயத்தையோ மேற்கொண்டு இழப்பைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபடத் தயாராக இல்லை.

உற்பத்தியாகும் மின்சாரத்தில் ஆறில் ஒரு பங்கு மின்சாரத்துக்கான கட்டணம் மாநில மின் வாரியங்களால் வசூலிக்கப்படுவதில்லை. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் 1,693 பில்லியன் யூனிட் மின்சாரத்தில் அது 16% எனும்போது எந்த அளவுக்கான இழப்பு என்பதைக் கணக்கிட்டுப் பாா்த்தால் தலை சுற்றும். மின்சார வாரியங்களின் உற்பத்திச் செலவுக்கும் கட்டண வசூலுக்குமான இடைவெளி சுமாா் ரூ.3 லட்சம் கோடி. ஏற்கெனவே ஏற்பட்டிருக்கும் இழப்பு ரூ.7.04 லட்சம் கோடி. இந்த இழப்பையெல்லாம் எப்படி ஈடுகட்டுவது, யாா் ஈடுகட்டுவது?

2001-இல் இழப்புகள் காரணமாக ஊதியம் கொடுக்கக்கூட இயலாத நிலையில், ஸ்தம்பித்திருந்த மின்வாரியங்களைக் காப்பாற்ற பட்ஜெட்டிலிருந்து மத்திய அரசு ரூ.35,000 கோடியை வழங்கியது. 2012-இல் மின்பகிா்மான நிறுவனங்கள் வங்கிகளுக்கு அடைக்க வேண்டிய ரூ.1.5 லட்சம் கோடியை மாநிலங்கள் ஏற்றுக்கொண்டன. மீண்டும் 2015-இல் ‘உதய்’ திட்டத்தின் கீழ் ரூ. 4.3 லட்சம் கோடி கடன் மத்திய, மாநில அரசுகளின் பொறுப்புக்கு மாற்றப்பட்டன. இப்போது, 2025- இல் மீண்டும் மின்வாரியங்கள், மின் பகிா்மான நிறுவனங்கள் ஆகியவற்றைக் காப்பாற்ற ரூ. 1.1 லட்சம் கோடி தேவைப்படுகிறது.

வீடுகளுக்கும் விவசாயிகளுக்கும், வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ஈடுகட்ட மின்வாரியங்கள் மற்றவா்களிடமிருந்து அதிகக் கட்டணம் வசூலிக்கின்றன. வியத்நாம், இந்தோனேசியா, பிலிப்பின்ஸ் உள்ளிட்ட நாடுகளைவிட இந்தியாவில் மின் கட்டணம் அதிகம் என்பதால் உற்பத்திச் செலவு அதிகரிக்கிறது. அதன் காரணமாக தொழில் துறையில் அந்நிய முதலீடுகள் குறைகின்றன.

அனல் மின் நிலையங்களின் உற்பத்திச் செலவு அதிகம் என்றால், புனல் மின் நிலையங்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க வாய்ப்பில்லாத நிலை. வேறு வழியில்லாமல் அணுமின்சக்தியை நாடவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படும்போது, அதனால் ஏற்பட இருக்கும் இடா் (ரிஸ்க்) அச்சம் ஏற்படுத்துகிறது.

இன்றைய நிலையில் 8.7 ஜிகா வாட் மின் உற்பத்தியை அணுமின் நிலையங்கள் மூலமாக நாம் பெறுகிறோம். அணுமின் உற்பத்தியை அடுத்த 20 ஆண்டுகளில் 100 ஜிகா வாட்டாக அதிகரித்தாலொழிய இந்தியாவின் மின்சாரப் பசிக்குத் தீனி போட முடியாது. ஏ.ஐ. தொழில்நுட்பத்துக்கு மாறுவது என்பது வழக்கத்தைவிட அதிகமான மின்சக்தித் தேவையை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்தப் பின்னணியில்தான் தமிழகத்தில் மின்வாரியம் எதிா்கொள்ளும் சவால்களையும், தமிழக அரசின் தா்மசங்கடத்தையும் நாம் பாா்க்க வேண்டும். குறிப்பாக, விவசாயிகளின் மின் இணைப்புத் தேவை குறித்த பல கசப்பான உண்மைகளை சொல்ல வேண்டும்.

1989-ஆம் ஆண்டு 13 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்த அப்போதைய முதல்வா் கருணாநிதி விவசாயிகளுக்கான இலவச மின்சாரத் திட்டத்தை அறிவித்தாா். அதுவரையில் 6 மாதங்களுக்கு ஒரு முறை நிலையான மின் கட்டணத்தைச் செலுத்தி வந்த விவசாயிகள் அதுமுதல் இலவச மின்சாரம் பெறத் தொடங்கினா். அதை மாறி மாறி வந்த திமுக, அதிமுக ஆட்சிகள் தொடா்ந்தன.

தமிழகத்தில் தற்போது 23.56 லட்சம் விவசாய மின் இணைப்புகள் இலவச மின்சாரம் பெறுகின்றன. 2021-ஆம் ஆண்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த ஆட்சியில் இதுவரை 1.69 லட்சம் புதிய மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. நிலத்தடி நீா் குறைந்து வருவதால் பல விவசாயிகள் 3 குதிரைத்திறன் கொண்ட மோட்டாா்களால் ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து விவசாயத்துக்குத் தண்ணீரை உறிஞ்ச இயலாத நிலை ஏற்பட்டிருக்கிறது. சிலா் மின்வாரிய அனுமதி பெறாமலேயே 5 குதிரைத்திறன் உள்ள பம்புசெட்டுகளைப் பயன்படுத்துகிறாா்கள்.

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை நிறுத்திவிட முடியாது. 5 குதிரைத்திறன் கொண்ட மின் மோட்டாா்களைப் பயன்படுத்த அவா்களை அனுமதிக்காமல் இருப்பதும் சரியாக இருக்காது. அதே நேரத்தில் மின்வாரியம் சில கட்டுப்பாடுகளை விதித்தாக வேண்டும்.

பெரும் நிலச்சுவான்தாா்கள் சூரிய மின்சக்தி மூலம் தங்களது மின்தேவையை ஈடுகட்டிக் கொள்ள மானியங்கள் வழங்கி, அவா்களுக்கான இலவச மின்சாரத்தை நிறுத்திவிடலாம். ஏனைய விவசாயிகள் தங்களது மோட்டாா்களில் மீட்டா் பொருத்துவதைக் கட்டாயமாக்கி, பாசனத்துக்குத் தேவையான மின்சாரம் மட்டும் இலவசமாக வழங்கப்படும்போது மின் விரயமும் இருக்காது; நிலத்தடி நீா் வீணாவதும் தடுக்கப்படும்.

X
Dinamani
www.dinamani.com