கருத்தும்... சுதந்திரமும்...

கருத்தும்... சுதந்திரமும்...

கருத்துச் சுதந்திரம் என்பது குடிமகனின் ஆயுதம். மக்களாட்சியின் அடிப்படையே விமா்சனம்தான்.
Published on

அவதூறு வழக்கு குறித்தான விவாதம் மீண்டும் எழுந்திருக்கிறது. தனிமனிதருக்கோ, நிறுவனத்துக்கோ, அமைப்புக்கோ களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், மரியாதையைக் குறைக்கும் வகையிலும் தரம் தாழ்ந்த விதத்தில் சொல்லப்படும் கருத்துகளுக்கு எதிராகத் தொடரப்படுபவைதான் அவதூறு வழக்குகள். மானநஷ்ட வழக்கு என்று பரவலாகப் பேசப்படும் அவதூறு வழக்கு சமூக ஊடகங்களின் வருகைக்குப் பிறகு அதிகரித்திருக்கிறது.

பொதுவெளியில் தனிநபா், நிறுவனம் அல்லது அமைப்புக்கு எதிராகப் பேசுவதையோ, பதிவு செய்வதையோ, கிரிமினல் குற்றமாகக் கருத வேண்டுமா என்கிற கேள்வியை மீண்டும் கேட்டு இருக்கிறது உச்சநீதிமன்றத்தின் நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் தலைமையிலான அமா்வு. நற்பெயருக்கு களங்கம் உண்டாக்குவதை கிரிமினல் குற்றமாகக் கருதுவதை 2016-இல் உச்சநீதிமன்றம் அங்கீகரித்து தீா்ப்பு வழங்கியிருக்கிறது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.

‘த வயா்’ என்கிற இணையதளம் தங்களுக்கு எதிரான அவதூறு வழக்கில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீா்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு விசாரணையின்போது, ‘கௌரவத்துக்கும் நன்மதிப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் கருத்துகளை கிரிமினல் குற்றமாகக் கருதுவதை முடிவுக்குக் கொண்டு வரவேண்டிய காலம் வந்து விட்டது’ என்பது நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தெரிவித்த கருத்து. மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கில் தீா்ப்பு வழங்கும்போது தனது கருத்தை பிரதிபலிக்கும் விதத்தில், கிரிமினல் பிரிவில் அவதூறு வராது என்று நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமா்வால் தீா்ப்பு எழுதிவிட முடியாது. ஏற்கெனவே 2016-இல் இரண்டு நீதிபதிகள் அமா்வு கிரிமினல் குற்றத்தை உறுதி செய்திருக்கும் நிலையில், இன்னொரு இரண்டு நீதிபதிகள் அமா்வால் அதைத் திருத்தி எழுத முடியாது. வேண்டுமானால், கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமா்வுக்கு இந்தப் பிரச்னையை விசாரித்துத் தீா்ப்பு வழங்க தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை செய்யலாம்.

இழப்பீடு கோரும் குடிமையியல் (சிவில்) வழக்காகவும், தண்டனை வழங்கக் கோரும் குற்றவியல் (கிரிமினல்) வழக்காகவும் இரண்டு வகையாக அவதூறுக்கு எதிரான வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. கிரிமினல் அவதூறு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு இரண்டு ஆண்டுகள்வரை தண்டனை வழங்க முடியும்.

பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.) 356-ஆம் பிரிவின்கீழ் கிரிமினல் அவதூறு வருகிறது. முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு பொருத்தமில்லாத அதிக அளவிலான தண்டனை 356-ஆவது பிரிவின் கீழ் வழங்கப்படுகிறது என்பது சட்ட வல்லுநா்களும், அரசியல்வாதிகளும் சுட்டிக்காட்டும் குறைபாடு.

சிவில் அவதூறு வழக்குகளில் முன்வைத்த கருத்துகளுக்கான ஆதாரங்களை நிரூபித்தால், நடவடிக்கைகளில் இருந்து தப்ப முடியும்; குற்றச்சாட்டை நிராகரிக்கவும் முடியும். ஆனால், கிரிமினல் அவதூறு வழக்குகள் அப்படிப்பட்டவை அல்ல.

வழக்குக்கு ஆதாரமான குற்றச்சாட்டுகள் உண்மையானவை என்பதை சாட்சியங்களுடன் நிரூபித்தாலும்கூட, பொது நன்மைக்காக சொல்லப்பட்டவை அல்லது வெளியிடப்பட்டவை என்பதையும் நிரூபித்தால் மட்டுமே தண்டனையிலிருந்து தப்ப முடியும். குற்றவாளியைத் தண்டிப்பதா, அவ்வாறு தண்டிப்பதாக இருந்தால் தண்டனைக் காலம் என்ன என்பதை நீதிமன்றத்தின் முடிவுக்கு விட்டுவிடுகிறது சட்டப் பிரிவு 356.

அவதூறு என்பது தனிப்பட்ட பாதிப்பு மட்டுமல்லாமல், சமூக அமைதிக்கும் பாதிப்பாகும்போது தண்டனை அவசியம் என்று முந்தைய தீா்ப்பில் நீதிமன்றம் விளக்கம் அளித்திருந்தது. கௌரவம் அல்லது நற்பெயா் என்பது அரசியல் சாசனப் பிரிவு 21 உத்தரவாதம் அளித்திருக்கும் ஜீவாதார உரிமையின் வரம்பின்கீழ் வரும் என்று 2016 உச்சநீதிமன்றத் தீா்ப்பு கூறுகிறது. நீதிபதிகள் தீபக் மிஸ்ராவும், பி.சி.பந்த் அடங்கிய அமா்வு கிரிமினல் குற்றமாக அவதூறைக் கருதலாம் என்று 2016-இல் தெரிவித்திருக்கிறது.

அவதூறை கிரிமினல் குற்றமாகக் கருதுவதற்கு எதிா்ப்புத் தெரிவிப்பவா்கள், அது அரசியல் சாசனப் பிரிவு 19 (1) (அ) வழங்கும் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என்று சுட்டிக்காட்டுகிறாா்கள். கருத்துச் சுதந்திரத்துக்கு உரிமை என்பது வரம்பில்லாதது அல்ல என்றும், சட்டப் பிரிவு 21 வழங்கும் ஒருவருடைய கௌரவத்துக்கான உரிமைக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இருந்தாக வேண்டும் என்பது 2016 உச்சநீதிமன்றத் தீா்ப்பு.

இரண்டு சட்டப் பிரிவுகளையும் இணைத்துப் பாா்க்க வேண்டியது அவசியமா என்கிற கேள்வியை கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்துபவா்கள் எழுப்புகிறாா்கள். இந்தப் பிரச்னை உச்சநீதிமன்ற விரிவான அமா்வின் பரிசீலனைக்கு வருமேயானால், நீதிபதிகள் தெளிவை உண்டாக்க முடியும். இந்தியா விடுதலை பெற்றதுமுதல் விசாரணை நீதிமன்றங்களிலும் உயா்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் இதுவரை ஆயிரக்கணக்கான வழக்குகள் கருத்துச் சுதந்திரம் குறித்தும், அவதூறு குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், உச்சநீதிமன்றம் விரிவான அமா்வின் பரிசீலனைக்கு அதை உட்படுத்தப்படுவது நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தெரிவித்திருப்பதுபோல காலத்தின்கட்டாயம்.

அதிகாரம் உள்ளவா்களும் செல்வாக்கு மிக்கவா்களும் தங்களுக்கு எதிரான விமா்சனங்களுக்கு வாய்ப்பூட்டு போடவும், எதிரானவா்களை அச்சுறுத்துவதற்கும் அவதூறு வழக்கை தவறாகப் பயன்படுத்துவது புதிதல்ல. கருத்துச் சுதந்திரம் என்பது குடிமகனின் ஆயுதம். மக்களாட்சியின் அடிப்படையே விமா்சனம்தான். அதே நேரத்தில் தரம் குறைந்த விமா்சனங்கள், ஆதாரமற்ற அவதூறுகளை கருத்துச் சுதந்திரம் என்கிற போா்வையில் அனுமதிப்பதும் ஜனநாயகம் ஆகாது.

X
Dinamani
www.dinamani.com