கடல்வளம் குன்றுகிறது!

மீனவர்கள்.
மீனவர்கள்.
Published on
Updated on
2 min read

இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் மீன்பிடிப்பது தொடர்பாக அண்மைக் காலங்களில் மீனவர்களுக்கிடையே நிகழ்ந்துவரும் மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை கொள்ளச் செய்கிறது. ஒரே நாட்டின் அண்டை மாநில, மாவட்ட மீனவர்களுக்குள்ளேயே ஒற்றுமையோ, விட்டுக் கொடுத்தலோ இல்லாத நிலையில், அயல்நாட்டு மீனவர்கள் விட்டுக்கொடுத்து அவர்களது கடல் வளத்தை நம்மோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

அண்மையில் கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வெளிமாவட்ட மீனவர்கள் 26 பேரையும், அவர்களது 8 விசைப் படகுகளையும் வேதாரண்யம் மீனவர்கள் பிடித்து ஆறுகாட்டுத்துறை படகு துறையில் சிறை வைத்து விட்டனர்.

காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த 24 மீனவர்கள் 2 படகுகளில் ஆந்திர மாநில கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அம்மாநில மீனவர்கள் 50-க்கும் மேற்பட்டோரால் தாக்கப்பட்டுள்ளனர். படகுகளை நோக்கி நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன.

வாக்கிடாக்கி, கைப்பேசிகள் மற்றும் மீன்பிடி வலைகள் பறிக்கப்பட்டுள்ளன. மேலும், மீனவர்களை சிறை பிடித்துச் சென்றுவிட்டனர். சமாதான பேச்சுக்குப் பிறகு மீனவர்கள் மட்டும் சொந்த ஊருக்கு திரும்பி வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

தூத்துக்குடி கடல் பகுதியில் நாட்டுப் படகு மற்றும் விசைப் படகு மீனவர்களுக்கு இடையே அவ்வப்போது தொழில் போட்டியால் மோதல் சம்பவங்கள் நிகழ்வது வாடிக்கையாக மாறி இருக்கிறது. கடந்த 2024 மார்ச்சில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் கேரள மீனவர்கள் தூத்துக்குடி கடல் பகுதியில் மீன் பிடித்ததாகக் கூறி, அங்குள்ள மீனவர்களால் சிறை பிடிக்கப்பட்டனர்.

கிழக்குக் கடற்கரையில் மட்டும்தான் இந்த மோதல் என்றில்லை. மேற்குக் கடற்கரையில் கர்நாடக மீனவர்கள் கோவா கடல் பகுதியில் அத்துமீறி புகுந்து மீன் பிடித்து வருவதாகக் கூறி மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த 2022 முதல் 2024 வரையில் அவ்வாறான மோதல் சம்பவங்கள் தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் எல்லாவற்றுக்கும் கூறப்படும் ஒரே காரணம் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாகக் கூறுவதுதான் வேடிக்கை.

நாட்டைச் சுற்றியுள்ள வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல், அரபிக் கடல் ஆகிய மூன்று கடல் பகுதிகளிலும் சுமார் 12 கடல் மைல் பகுதிக்கு முழுமையான இறையாண்மை மத்திய அரசுக்குத்தான் உண்டு. சுமார் 200 கடல் மைல் பகுதி வரையில் உள்ள பொருளாதார வளங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மாநில அரசுகள் அருகில் உள்ள கடல் பகுதியில் சுற்றுச்சூழல் மற்றும் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு போன்றவற்றை மட்டுமே செய்துகொள்ள முடியும்.

ஒரு மாவட்ட, மாநில மீனவர்கள் கடலைச் சொந்தம் கொண்டாடிக் கொண்டு மற்ற மீனவர்களை தங்களது எல்லைகளுக்குள் வரக் கூடாது என சட்டபூர்வமாக தடுக்க முடியாது. ஆனால், மீனவர்கள் அவரவர் பயன்பாட்டின் அடிப்படையில் செயற்கையான எல்லை ஒன்றை வகுத்துக் கொண்டு மோதிக் கொள்வது வாடிக்கையாகி வருவது வருத்தமளிக்கிறது.

நாட்டின் கடல் பகுதியை எல்லையாகக் கொண்ட 9 மாநிலங்களிலும் மீனவர்கள் எதிர்கொள்ளும் இந்த மோதல்களுக்கு முக்கியக் காரணம், கடலில் மீன் வளம் குறைந்து வருவதும், மாறி வரும் நவீன மீன்பிடி தொழில்நுட்ப முறைகளும்தான். அதிவேக விசைப் படகுகள் மற்றும் இரட்டைமடி வலைதான் பிரச்னையின் மையப்புள்ளி.

ஆந்திர மீனவர்கள் 200 முதல் 300 குதிரைத் திறன் கொண்ட என்ஜின்களை மீன்பிடி படகுகளில் பயன்படுத்துகின்றனர். ஆனால், காரைக்கால் மீனவர்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 600 குதிரைத் திறன் கொண்ட என்ஜின்களை பயன்படுத்துகின்றனர். இதனால் வலைகள் மற்றும் மீன் வளம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் சிதைக்கப்படுவதாக ஆந்திர மீனவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலை பயன்பாடு நிலைமையை மேலும் மோசமாக்குகிறது.

இதே காரணங்களால் தமிழக கடல் பகுதியில் மீன் வளம் குறைந்துள்ளது. அதனால்தான், ராமேசுவரம் மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடிக்கச் செல்லும்போது இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இங்கு மீன் வளம் குறைந்துள்ள நிலையில், எஞ்சி இருக்கும் கொஞ்ச வளத்தையும் அபகரித்துச் செல்ல வரும் குளச்சல் மற்றும் கேரள மீனவர்களைச் சிறைபிடிக்க வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது.

ஆந்திர கடல் பகுதியிலும் மீன் வளம் குறைந்துவிட்டதாலும், அடிக்கடி புயல் தாக்குதல் இருப்பதாலும் அம்மாநில மீனவர்கள் கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். ஆதலால், அண்டை மாநில மீனவர்கள் அங்கு வந்து மீன் பிடிப்பது உள்ளூர் மீனவர்களின் கோபத்தை அதிகரிக்கச் செய்கிறது.

தடை செய்யப்பட்ட என்ஜின் மற்றும் வலைகளை மீனவர்கள் தொடர்ந்து பயன்படுத்துவதைத் தடுக்க மீன்வளத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாலும், அவற்றால் பயன் எதுவும் ஏற்படவில்லை என்பதைக் கள நிலவரங்கள் உணர்த்துகின்றன.

கடலோர காவல் படை மற்றும் கடலோர பாதுகாப்புக் குழுமம் கண்காணிப்புப் பணிகளை முறையாக மேற்கொண்டால் இந்த மோதல்களைத் தடுக்க முடியும்.

மோதல்களுக்கான காரணங்கள் கண்கூடு. அவற்றைச் சரி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com