வன்முறை ஜனநாயகம்!

மேற்கு வங்க அரசியல் கட்சிகளின் வன்முறை பற்றி...
பாஜக மக்களவை உறுப்பினர் ககன் முர்முவை மருத்துவமனையில் சந்தித்த மாநில முதல்வர் மமதா பானர்ஜி
பாஜக மக்களவை உறுப்பினர் ககன் முர்முவை மருத்துவமனையில் சந்தித்த மாநில முதல்வர் மமதா பானர்ஜிANI
Published on
Updated on
2 min read

மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரி மாவட்டத்தில் அண்மையில் பெய்த பெருமழையால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. இதை ஆய்வு செய்வதற்காக மால்டா வடக்கு தொகுதி பாஜக மக்களவை உறுப்பினர் ககன் முர்மு, சிலிகுரி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் சங்கர் கோஷ் ஆகியோர் கடந்த திங்கள்கிழமை (அக். 6) சென்றனர்.

அவர்களை ஒரு கும்பல் சூழ்ந்து கொண்டு கல்வீச்சு நடத்தியது. இந்தத் தாக்குதல் தொடர்பான விடியோ பதிவுகள் செய்தி தொலைக் காட்சி சேனல்களில் வெளியாகின. அதில் தாக்குதல் நடத்திய கும்பல், முதல்வர் மம்தா பானர்ஜியை புகழ்ந்து முழக்கமிடுவது, கற்களை வீசுவது உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இதேபோன்று, அடுத்த நாளே (அக். 7) அலி பூர்துவார் என்ற இடத்தில் வெள்ள நிவாரணப் பொருள்களை விநியோகித்துக் கொண்டிருந்த பாஜக எம்எல்ஏ மனோஜ் ஓரான் தாக்கப்பட்டார். கடந்த ஜூன் 19-ஆம் தேதி டயமண்ட் ஹார்பர் தொகுதிக்கு மத்திய கல்வித் துறை இணையமைச்சர் சுகாந்த மஜும்தார் சென்றபோதும் கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.

மேற்கு வங்கத்தில் அரசியல் வன்முறை, உயிரிழப்பு என்பது இன்று நேற்று தொடங்கியதல்ல. கடந்த 55 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. மாநில அரசியலில் எதிர்ப்பே இல்லாமல் காங்கிரஸ் கோலோச்சி வந்த வரை பெரிய அளவிலான வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. காங்கிரஸுக்கு மாற்றாக கம்யூனிஸ்ட் கட்சி வளரத் தொடங்கியபோது வன்முறை கலாசாரம் தொடங்கியது.

பூர்வ வர்தமான் மாவட்டத்தில் காங்கிரஸ் ஊழியரான நப குமார் என்பவர் 1970 மார்ச் 17-ஆம் தேதி தாக்கப்பட்டார். அவரது குடும்பத்தினர் எதிரிலேயே அவரது கண்கள் தோண்டி எடுக்கப்பட்டன. அவரது சகோதரர்கள் மலாய், பிரணாப் ஆகியோர் கொல்லப்பட்டனர். பின்னர் நபவும் கொல்லப்பட்டார். வன்முறை கலாசாரம் அப்போது முதல் வலுப்பெறத் தொடங்கியது. கொல்கத்தாவில் 1971 பிப்ரவரியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் ஹேமந்த பாசு கொல்லப்பட்டது வருங்கால தொடர் மோதல்களுக்கு கட்டியம் கூறியது.

1977 முதல் 2011 வரை இடது முன்னணி ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் வன்முறையை அரசே கட்டவிழ்த்துவிட்டதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் இப்போதைய முதல்வருமான மம்தா பானர்ஜி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார். ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதுபோல மம்தா பானர்ஜி ஆட்சியிலும் அரசியல் படுகொலைகள் குறையாததுடன் தாக்குதல் சம்பவங்கள் தினசரி நிகழ்வுகளாகவே மாறிவிட்டன.

1999 முதல் 2016 வரை ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 20 பேர் அரசியல் ரீதியான வன்முறையில் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கை தெரிவிக்கிறது. எதிர்க்கட்சிகளின் ஊழியர்கள், குடும்ப உறுப்பினர்கள் தாக்கப்படு வது, கொல்லப்படுவது, அவர்களது வீடுகள் சூறையாடப்படுவது போன்றவை வாடிக்கையாகிவிட்டன.

இந்தியாவின் மற்ற மாநிலங்களில் நடைபெறும் படுகொலை களுக்கும் மேற்கு வங்கத்தில் நடைபெறும் படுகொலைகளுக்கும் வேறுபாடு உள்ளது. கேரளத்தில் கொள்கை ரீதியாக பாஜக -மார்க்சிஸ்ட் மோதல் பல உயிரிழப்புகளுக்கு காரணமாகிறது. மற்ற சில மாநிலங்களில் ஜாதி, மத ரீதியான மோதல்களால் வன்முறை தலைவிரித்தாடுகிறது. ஆனால், மேற்கு வங்கத்திலோ ஊழல், அதிகாரம் ஆகியவையே அரசியல் கொலைகளுக்கு காரணமாகி இருக்கின்றன.

மேற்கு வங்கத்தில் ஜோதி பாசு ஆட்சியில் தொடங்கி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளும் கட்சியினர் பஞ்சாயத்து அளவில் தங்கள் செல்வாக்கை நிலைநாட்டிவருகின்றனர். வீடு கட்டுவது, மத விழாக்கள் உள்ளிட்ட பொதுமக்களின் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் ஆளும் கட்சியினர் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

ஆளும் கட்சியினர் மூலம்தான் அரசு நிதி பயனாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதனால் கடைநிலை வரை ஊழல் புரையோடி உள்ளது. 'கட் மணி' என்பது அங்கு மிகவும் பிரசித்தம். அரசு அளிக்கும் மானியங்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ஆளும் கட்சி நிர்வாகி கட்சி நிதி என்கிற பெயரில் கழித்துக் கொண்டு கொடுப்பதே 'கட் மணி' எனப்படுகிறது. 'கட் மணி'யை தனது கட்சியினர் பொதுமக்களிடம் திருப்பி அளிக்காவிட்டால் சிறை செல்ல நேரிடும் என முதல்வர் மம்தா பானர்ஜியே சில ஆண்டுகளுக்கு முன்னர் எச்சரிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி இருக்கிறது.

2016-ஆம் ஆண்டு 25,750 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். பணம் பெற்றுக் கொண்டு அவர்கள் நியமிக்கப்பட்டதாகக் கூறி உச்ச நீதிமன்றம் அந்த நியமனத்தை கடந்த ஏப்ரலில் ரத்து செய்தது. அந்த வழக்கில் திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ண சாஹா, மாணிக் பட்டாசார்ய ஆகியோர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் வெளியே வந்து வழக்கை எதிர்கொள்கின்றனர்.

தமிழ்நாட்டைப் போலவே, மேற்கு வங்கத்திலும் அடுத்த ஆண்டு (2026) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஊழல், அரசியல் வன்முறை போன்றவற்றைத் தாண்டி நான்காவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும் முயற்சியில் திரிணமூல் காங்கிரஸும், எப்படியாவது முதல்முறையாக ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற துடிப்பில் பாஜகவும் உள்ளன.

அடுத்து வரக்கூடிய ஏழு மாதங்களில் அரசியல் வன்முறையும் உயிரிழப்புகளும் மேற்கு வங்கத்தில் புதிய உச்சத்தைத் தொடக் கூடும் என்கிற அச்சம் பரவலாகக் காணப்படுகிறது. இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ் வரிசையில் ஆட்சியைக் கைப்பற்ற பாஜகவும் இணைந்திருப்பது வியப்பை ஏற்படுத்தவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com