மாற்றி யோசிப்போம்!

சமீபகாலமாக ஒரு சில மாநிலங்களில் யூரியாவுக்குத் தட்டுப்பாடு காணப்படுகிறது.
யூரியா
யூரியா
Published on
Updated on
2 min read

சமீபகாலமாக ஒரு சில மாநிலங்களில் யூரியாவுக்குத் தட்டுப்பாடு காணப்படுகிறது. நல்ல பருவமழையும், அதன் காரணமாக அதிகரித்திருக்கும் நெல் சாகுபடிப் பரப்பும் உரங்களுக்கான தேவையை அதிகரித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான உரத்தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதற்கு அதைக் காரணம் காட்டுகிறார்கள்.

தொடர்ந்து பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அரசுகள் கடைப்பிடித்த தவறான சாகுபடிக் கொள்கையும், கொள்முதல் விலையும்தான் உரத் தட்டுப்பாட்டுக்கு அடிப்படைக் காரணம். 1960-களில் அறிமுகப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சி காலத்துக்கு முன்னால் வரை, ரசாயன உரங்களின் பயன்பாடு ஹெக்டேருக்கு 2 கிலோ மட்டுமே. விவசாயிகள் பெரும்பாலும் இயற்கை உரங்களைத்தான் நம்பியிருந்தனர். அதிகமாக மகசூல் தரும் நெல், கோதுமை விதைகள் அறிமுகப்படுத்தப்பட்டதும், பாசன வசதிகள் ஏற்படுத்தப்பட்டதும், ரசாயன உரங்களுக்கான மானியம் வழங்கப்பட்டதும் யூரியா பயன்பாட்டை பல மடங்கு அதிகரிக்கச் செய்தன.

1970-களின் ஆரம்ப ஆண்டுகளில் யூரியா பயன்பாடு இந்தியாவில் 20 லட்சம் டன்னுக்கும் குறைவு. 2010-11-ஆம் ஆண்டுகளில் அதுவே 1.6 கோடி டன்னாக அதிகரித்தது. தற்போது இந்தியா ஏறத்தாழ 2.1 கோடி டன் யூரியாவைப் பயன்படுத்துகிறது. உலகிலேயே இரண்டாவது அதிகமாக யூரியா பயன்படுத்தும் நாடாக இந்தியா இருக்கிறது.

மாநில வாரியாகப் பார்க்கும்போது பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், ஆந்திரம், தமிழ்நாடு, சமீபத்தில் தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மிக அதிகமான யூரியா பயன்பாடு காணப்படுகிறது. இந்த மாநிலங்களில் நெல் சாகுபடி அதிகமாகவும் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், ஏனைய தானியங்கள் உள்ளிட்டவை குறைவாகவும் பயிரிடப்படுவது அதற்கு முக்கியக் காரணம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

நெல் சாகுபடி மிக அதிகமான உரம் தேவைப்படும் பயிர். சராசரியாக விவசாயிகள் ஹெக்டேர் ஒன்றுக்கு 150 முதல் 200 கிலோ வரை நெல் சாகுபடியில் யூரியா பயன்படுத்துகிறார்கள். கோதுமைக்கும் அதிகமான உரம் தேவை என்றாலும்கூட நெல் அளவுக்குத் தேவைப்படுவதில்லை. அதனால்தான் நெல் சாகுபடிப் பரப்பு அதிகரிக்கும் போது உரத்துக்கான தேவையும் அதிகரிக்கிறது.

பருப்பு வகைகளும், எண்ணெய் வித்துக்களும் மிகக் குறைவான அளவில் உரம் தேவைப்படும் பயிர்கள். ஹெக்டேருக்கு சுமார் 30 முதல் 40 கிலோ இருந்தாலே போதும். அதைவைத்துப் பார்க்கும்போது தற்போது காணப்படும் உரத் தட்டுப்பாட்டுக்கான அடிப்படைக் காரணம் அரசின் தவறான கொள்முதல் கொள்கை என்று தெரிகிறது.

ஆரம்பம் முதலே குறைந்தபட்ச ஆதரவு விலை ஏனைய பயிர்களைவிட நெல்லுக்குத்தான் அதிகமாக இருந்து வருகிறது. 23 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றாலும் நெல்லும், கோதுமையும்தான் மிகப் பெரிய அளவில் கொள்முதல் செய்யப்படுகின்றன. குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி என்பதால் நெல் சாகுபடி அதற்குப் பொருத்தமில்லாத பகுதிகளில் கூட முன்னெடுக்கப்படுகிறது.

1970 -க்கு முன்னால் பஞ்சாபில் நெல் சாகுபடி இருக்கவில்லை. இப்போது பஞ்சாபின் மிக அதிகமான சாகுபடி பயிராக நெல் மாறிவிட்டது. முன்பு பருத்தியும், தானியங்களும் விளைவித்துக் கொண்டிருந்த தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகளாக நெல் சாகுபடி ஐந்து மடங்கு அதிகரித்திருக்கிறது. நெல் சாகுபடி அதிகரிக்க, அதிகரிக்க யூரியாவுக்கான தேவையும் அதிகரிக்கிறது. அதனால்தான் இப்போது தெலங்கானாவில் விவசாயிகள் உரங்களுக்காக வரிசையில் காத்திருக்கிறார்கள்.

குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக நைட்ரஜனைப் பயன்படுத்துவதன்மூலம் அதிக மகசூல் பெறலாம் என்கிற தவறான கருத்து நிலவுகிறது. நெல் சாகுபடியில் விவசாயிகள் தேவைக்கு அதிகமாக யூரியாவை பயன்படுத்துகிறார்கள் என்பதை பல்வேறு ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன. அளவுக்கு அதிகமாக நைட்ரஜன் பயன்படுத்தும்போது அது ஆவி ஆகி சுற்றுச்சூழலைப் பாதிப்பதுடன் மண் வளத்தையும் பாதிக்கிறது. அளவுக்கு அதிகமான யூரியா பயன்பாட்டால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் வெளிவந்துவிட்டன.

போதுமான அளவில் பாஸ்பரஸ், பொட்டாஷ், இயற்கை உரங்கள் இல்லாமல் நைட்ரஜன் உரங்களைப் பயன்படுத்துவதால் மண்வளம் மலட்டுத்தன்மை அடைகிறது என்கின்றன ஆய்வுகள். நைட்ரஜன்- பாஸ்பரஸ் -பொட்டாஷ் ஆகியவற்றின் அளவு 4:2:1 என்பதாக இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் விவசாயிகள் 11:4:1 என்கிற அளவில் பயன்படுத்துகிறார்கள். அதுதான் நெல் சாகுபடிப் பகுதிகள் மலட்டுத்தன்மை அடைந்து மகசூல் குறைவதற்கான காரணம்.

அதிகரித்த நைட்ரஜன் பயன்பாடு விளைநிலத்தைப்பாதிப்பதுடன் நிலத்தடி நீரையும் பாதிக்கிறது. அதனால் ஏற்படும் சுகாதார பாதிப்புகள் ஏராளம். சுற்றிலும் உள்ள நீர்நிலைகளில் ஊடுருவி அவற்றின் நீர்வாழ் உயிரினங்களின் சூழலியலையும் நைட்ரஜன் பாதிக்கிறது. நைட்ரஜனில் இருந்து வெளிவரும் நைட்ரஸ் ஆக்சைடு கரியமில வாயுவைவிட 300 மடங்கு பசுமை இல்ல வாயுவை பாதிக்கும் தன்மையுடையது. அதிகரித்த உரப் பயன்பாடு நைட்ரஸ் ஆக்சைடு வெளியேற்றத்துக்கு காரணியாகிறது.

யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது நோயின் அறிகுறிதான். உண்மையான நோய், அதிகரித்துவரும் நெல், கோதுமை சாகுபடி பரப்பு. நமது வேளாண் பெருமக்களுக்கு பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், ஏனைய தானியங்கள் ஆகியவை பயிரிடுவதற்கு ஊக்கம் அளித்து கூடுதல் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கி, கொள்முதல் செய்வதை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com