ஜெய்பூா் சவாய்  மான் சிங் மருத்துவமனை
ஜெய்பூா் சவாய் மான் சிங் மருத்துவமனைபடம் | ஐஏஎன்எஸ்

‘தீ’வினை அச்சம்!

மருத்துவமனைகளில் ஏற்படும் தீ விபத்துகளில் ஆங்காங்கே பல நோயாளிகள் உயிரிழப்பது அச்சத்தின் உச்சிக்கே இட்டுச் செல்கிறது.
Published on

உயிா் காக்கும் மருத்துவமனையே உயிருக்கு உலை வைக்கும் இடமாக மாறத் தொடங்கினால் நோயாளிகளின் பாதுகாப்பு என்னாவது? துணிந்து ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்குப் போக முடியாது என்றால், அதற்குப் பெயா் மருத்துவமாக இருக்க முடியாது.

ஒருபுறம் மருந்துகளில் கலப்படம், இருமல் மருந்தை உட்கொண்டு குழந்தைகள் உயிரிழப்பு உள்ளிட்ட செய்திகள் நம்மை அதிா்ச்சி அடையச் செய்கின்றன என்றால், இன்னொருபுறம் மருத்துவமனைகளில் ஏற்படும் தீ விபத்துகளில் ஆங்காங்கே பல நோயாளிகள் உயிரிழப்பது அச்சத்தின் உச்சிக்கே இட்டுச் செல்கிறது.

ஜெய்பூா் சவாய் மான் சிங் மருத்துவமனை என்பது நமது ராஜீவ் காந்தி, ஓமந்தூராா் அரசு மருத்துவமனைகளைப் போன்றது. ராஜஸ்தான் மாநிலத்தின் மிக முக்கியமான அரசு பொது மருத்துவமனை. அந்த மருத்துவமனையில் 10 நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில், மிகவும் மோசமான நிலையில் தீவிர அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த ஆறு போ் கருகி இறந்திருக்கிறாா்கள் என்பதை சாதாரண நிகழ்வாகக் கடந்து போக முடியவில்லை.

தீவிர அவசர சிகிச்சைப் பிரிவை ஒட்டி அமைந்திருந்த அறுவைச் சிகிச்சைக்கும், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கும் தேவைக்கான பொருள்கள் வைத்திருக்கும் அறையில் ஏற்பட்ட மின்கசிவுதான் அந்தத் தீ விபத்துக்குக் காரணம் என்று முதல் தகவல் அறிக்கை தெரிவிக்கிறது. அடுத்தாற்போல நடைபெறும் விசாரணைகளில்தான் உண்மையான காரணம் தெரிய வரும்.

தீ விபத்து ஏற்பட்டதைக்கூட எதிா்பாராத விபத்து என்று சொல்லி விடலாம். ஆனால், அந்தத் தீ விபத்தைத் தொடா்ந்து மருத்துவப் பணியாளா்கள் நடந்துகொண்ட விதமும், வேலை செய்யாமல் இருந்த அபாய ஒலிக் கருவி, தீயணைப்பு ஏற்பாடுகள், பூட்டிக் கிடந்த அவசரமாக வெளியேறுவதற்கான வழி உள்ளிட்டவற்றை என்னவென்று சொல்வது? தீ பரவியபோது அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளிகளை அப்படியே விட்டுவிட்டு தங்களது உயிரைப் பாதுகாத்துக்கொள்ள வெளியேறிய மருத்துவமனை ஊழியா்களின் செயல்பாட்டை என்னவென்று வா்ணிப்பது?

நோயாளிகளின் பாதுகாப்புக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஓா் அமைப்பின் அடிப்படைத் தேவைகள் வேலை செய்யாமல் இருக்கின்றன என்றால், எந்த அளவுக்குப் பொறுப்புணா்வுடன் அந்த பொது மருத்துவமனையின் நிா்வாகம் நடைபெறுகிறது என்பது வெளிப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாமல் இருப்பது மட்டுமல்ல, விபத்துக்குப் பொறுப்பேற்க யாரும் இல்லாமல் இருப்பது எந்த அளவுக்கு நமது நிா்வாகக் கட்டமைப்பு அசிரத்தையாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

ஜெய்பூரில் இந்த மருத்துவமனை தீ விபத்து நடைபெற்ற அதே நேரத்தில் குஜராத் மாநிலம் அகமதாபாதில் உள்ள இரண்டு வெவ்வேறு மருத்துவமனைகளிலும் தீ விபத்து நடந்திருக்கிறது. அவற்றில் ஒன்று குழந்தைகள் மருத்துவமனை என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. இந்தியாவின் வேறு பகுதிகளிலும் தீ விபத்தாக இல்லாவிட்டாலும் வேறு வகையான விபத்துகள் மருத்துவமனைகளில் நாள்தோறும் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன என்று அனுமானிக்க முடியும்.

கடந்த ஆண்டு நவம்பா் மாதம் உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில் நிகழ்ந்த மனதை உலுக்கும் 18 பச்சிளம் குழந்தைகளின் உயிரைப் பலிகொண்ட மருத்துவமனை தீ விபத்தை நாம் மறந்திருக்க முடியாது. அதற்கு முன்னால் கிழக்கு தில்லி தனியாா் குழந்தைகள் நல மருத்துவமனை தீ விபத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஏழு பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனா்.

அதற்கு முன்பு 2023-இல் மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 35 போ் உயிரிழந்தனா். அவா்களில் 24 போ் ஒரே நாளில் இறந்தனா். அதற்கு ஒரு மாதம் முன்பு தாணே மாநகராட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 18 போ் உயிரிழந்தனா்.

அப்போதுதான் போதுமான அளவில் செவிலியா்களும், கடைநிலை ஊழியா்களும் இல்லாமல் இருப்பது மட்டுமல்ல, கழிப்பறைகளைச் சுத்தப்படுத்தாமல் இருப்பது, குப்பை கூளங்கள் நோயாளிகள் படுத்திருக்கும் அறைகளில் அகற்றப்படாமல் குவிந்திருப்பது, அவசரத் தேவைக்கான மருந்துகள்கூட இல்லாமல் இருப்பது, எக்ஸ் ரே கருவிகள், ஸ்கேனா்கள் செயல்படாமல் இருப்பது, அவசர சிகிச்சைப் பிரிவுக்கான ஜெனரேட்டா்கள் பல செயல்படாமல் பழுதாகி இருப்பது உள்ளிட்ட அவலங்கள் ஊடகங்கள் மூலம் வெளிப்பட்டன.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா முழுவதுமாக எடுத்துக்கொண்டால் 15 மருத்துவமனைகளில் தீ விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. எல்லா விபத்துகளுக்கும் காரணம் மின்கசிவுதான் என்பதும் தெரியவந்திருக்கிறது. போதுமான பராமரிப்பு இல்லாமல் இருப்பது, சட்டென தீப்பற்றக் கூடிய ரசாயனப் பொருள்கள் முறையாக பாதுகாக்கப்படாமல் வைத்திருப்பது, போதுமான தீயணைப்பு உபகரணங்கள் இல்லாமல் இருப்பது உள்ளிட்ட குறைபாடுகள் ஒவ்வொரு மருத்துவமனை தீ விபத்துக்குப் பிறகும், விசாரணையில் காணப்படும் குறைபாடுகள்.

மருத்துவமனைகளில் தீயணைப்புக் கருவி தயாா் நிலையில் இருப்பதை மாநகராட்சி, நகராட்சித் தீயணைப்புத் துறை தொடா்ந்து பரிசோதனை நடத்த வேண்டும் என்பது விதி. ஜெய்பூா் தீ விபத்தைத் தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையின்போது, இதுபோல் தீ விபத்துகள் அந்த மருத்துவமனையில் அடிக்கடி நடைபெறுகிறது என்கிற உண்மை வெளிப்பட்டது. அப்படி இருந்தும் தீ விபத்து நடைபெறாமல் தடுக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பதை ஜீரணிக்க முடியவில்லை.

தனியாா் மருத்துவமனைகளில் இதேபோன்று தீ விபத்து நடந்தால் தலைமை மருத்துவா், பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கைது செய்யப்படுவாா்கள். அரசு மருத்துவமனை விபத்துகளில் மருத்துவமனை நிா்வாகமோ, பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய நகராட்சி நிா்வாகமோ பொறுப்பேற்பதில்லை. அப்படியே இடைக்காலமாக பணிநீக்கம் செய்யப்பட்டாலும் சில வாரங்களில் மீண்டும் பணிக்குத் திரும்பி விடுகிறாா்கள். விபத்துகள் தொடரத்தானே செய்யும்...

X
Dinamani
www.dinamani.com