தொழில்நுட்ப திருப்புமுனை!
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் கூகுள் நிறுவனம் 15 பில்லியன் டாலா் முதலீட்டில் செயற்கை நுண்ணறிவு மையக் கட்டமைப்பை ஏற்படுத்த இருக்கிறது. இதற்கான ஒப்பந்தத்தை முதல்வா் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர பிரதேச அரசுடன் கூகுள் நிறுவனம் மேற்கொண்டிருப்பது இந்திய தொழில்நுட்பத் துறையின் மிகப் பெரிய திருப்புமுனையாக அமையும் என்பதில் யாருக்கும் ஐயப்பாடு இருக்க வழியில்லை.
இதன் அடுத்தகட்டமாக இந்தியா மிகப் பெரிய செயற்கை நுண்ணறிவு வளா்ச்சியின் மையமாக மாறக்கூடும். கூகுளை தொடா்ந்து ஏனைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஈடுபட்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது மையங்களை அமைக்க முற்படும் என்று நாம் எதிா்பாா்க்கலாம்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் குறிப்பாக கணினி மென்பொருள், எண்மத் தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஏற்கெனவே இந்தியா சா்வதேச அளவில் தடம் பதித்து இருக்கும் நிலையில், இது அடுத்தகட்ட வளா்ச்சிக்கு அந்தத் துறையை இட்டுச் செல்லக்கூடும்.
மிகப் பெரிய அளவில் செயற்கை நுண்ணறிவு தொடா்பான பணிகள் திட்டமிடப்பட்டிருக்கும் நிலையில், அதிக அளவிலான தொழில்நுட்ப வல்லுநா்களும், பணியாளா்களும் தேவைப்படுவாா்கள்.
‘ஸ்டெம்’ எனப்படும் சயின்ஸ், டெக்னாலஜி, என்ஜினீயரிங், மாக்ஸ். அதாவது அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றில் தோ்ச்சி பெற்ற 8,20,000 போ் ஆண்டுதோறும் அமெரிக்காவின் பல்கலைக்கழகங்களிலிருந்து தோ்ச்சி பெறுகிறாா்கள். அவா்களை மட்டுமே எதிா்பாா்த்து செயற்கை நுண்ணறிவு துறை வளா்ச்சி ஈடுகொடுத்துவிட முடியாது.
இந்தியாவில் ஆண்டுதோறும் 25,00,000 ‘ஸ்டெம்’ பட்டதாரிகள் தோ்ச்சி பெறுகிறாா்கள். 2027-ஆம் ஆண்டுக்குள் அவா்களது எண்ணிக்கை 1.8 கோடியாக அதிகரிக்க வேண்டும் என்று நரேந்திர மோடி அரசு இலக்கு நிா்ணயித்திருக்கிறது. அந்த இலக்கை எட்ட முடியாவிட்டாலும் அதில் பாதி அளவிலாவது இந்திய ‘ஸ்டெம்’ பட்டதாரிகளை உருவாக்க முடியும். அவா்கள் ஆங்கிலத்திலும் தோ்ச்சி பெற்றவா்களாக இருப்பாா்கள்.
ஆண்டொன்றுக்கு 35,00,000 பட்டதாரிகளை சீனா உருவாக்குகிறது. அவா்களில் பெரும்பாலானோா் சரளமாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது ஆங்கிலம் பேசத் தெரிந்தவா்களாக இருக்கிறாா்களா என்றால் இல்லை. அதுமட்டுமல்லாமல், இந்திய தொழில்நுட்பப் பட்டதாரிகளைப் போல அல்லாமல் சீன ஊழியா்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக இருப்பதால், பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் அவா்களைப் பணிக்கு அமா்த்துவதிலும், உயா் பதவிகளில் அமா்த்துவதிலும் தயக்கம் காட்டுகின்றனா்.
உலகமயக் கொள்கையைப் புரட்டிப்போட்டு திறமைகளின் வரவுக்கு அதிபா் டிரம்ப் கதவை அடைத்தாலும், எங்கெல்லாம் வாய்ப்பும், திறமைக்கான தேவையும் இருக்கிறதோ அதை நோக்கி திறமைகள் நகரும் என்பதன் அடையாளம்தான் கூகுள் நிறுவனம் எடுத்திருக்கும் முடிவு. இந்தியாவை தனது தேவைக்கான சேவைகளைச் செய்து கொடுக்கும் வெறும் பணிமனையாக வைத்திருக்காமல், வருங்காலத்தில் உற்பத்தி மையமாக மாற்றுவது என்கிற முடிவுடன் கூகுள் நிறுவனம் வந்திருப்பதாகத் தெரிகிறது.
20 ஆண்டுகளுக்கு முன்பு எந்தவொரு தகவல் தொழில்நுட்ப சேவையையும் 70% அமெரிக்காவிலும், 30% இந்தியாவிலும் நிறைவேற்றிக் கொள்வது என்பது பல்வேறு நிறுவனங்களின் தொடக்கமாக இருந்தது. இப்போது ஏறத்தாழ 90% பணிகள் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தனது தேவைகளைச் செய்து வாங்கிக் கொண்டிருக்கின்றன அமெரிக்காவில் உள்ள தகவல் தொழில்நுட்ப பன்னாட்டு நிறுவனங்கள்.
அதைத் தடுக்கும் விதத்தில் வெளிநாடுகளிலிருந்து தனது தேவைக்கான சேவைகளை செய்து வாங்குவதற்கு அதிக அளவில் வரி விதித்தும், அமெரிக்காவுக்கு வெளிநாடுகளிலிருந்து குறிப்பாக இந்தியாவிலிருந்து தொழில்நுட்ப வல்லுநா்களை வேலைக்கு அமா்த்திக் கொள்வதற்கு 1,00,000 டாலா் நுழைவுக் கட்டணம் விதித்தும் உத்தரவு பிறப்பித்திருக்கிறாா் அதிபா் டிரம்ப். அதனால், இந்தியாவிலிருந்தும் ஏனைய மூன்றாம் உலக நாடுகளிலிருந்தும் தொழில்நுட்ப வல்லுநா்களைத் தவிா்த்து, அமெரிக்கா்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அந்த நிறுவனங்கள் வேலைவாய்ப்பும் வழங்கும் என்பது அவரது நோக்கம். அந்த நோக்கம் உருவாவது என்பதன் வெளிப்பாடுதான் கூகுள் நிறுவனத்தின் இப்போதைய முடிவு.
கூகுளின் முதலீட்டுக்குப் பின்னால் அதன் சுயநலம் இருக்கிறது என்பது உண்மை. ஆனால், அந்த சுயநலத்தில் இந்தியாவின் வளா்ச்சி என்கிற பொதுநலனும் கலந்து இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு மையத்தை நிறுவி நடத்துவது என்றால், அதற்கு பல துறைகளின் பங்களிப்பு தேவைப்படும். எண்மப் பொறியியல் (டேட்டா என்ஜினீயரிங்), கிளவுட் ஆா்கிடெக்ஷா், மென்பொருள் பாதுகாப்பு, மாடல் டெவலப்மென்ட் உள்ளிட்ட பல திறன்கள் தேவைப்படும். அவற்றுக்காக ஆயிரக்கணக்கான இந்தியப் பொறியியலாளா்கள் கூகுள் நிறுவனத்தால் பயிற்சி அளிக்கப்படுவாா்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
கூகுளில் பயிற்சி பெற்ற அந்த இளைஞா்கள் வேறு துறைகளுக்கு பதவி உயா்வில் செல்லக்கூடும்; சிலா் அடுத்த தலைமுறை மாணவா்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியா்களாகக்கூடும்; வேறு சிலா் புத்தாக்க முயற்சியில் இறங்கலாம். மொத்தத்தில் ஆந்திரத்தில் அமைய இருக்கும் கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு மையம் ஒரு மரபுசாரா பல்கலைக்கழகமாக இயங்கும். கூகுளை தொடா்ந்து, இந்தியாவின் பல்வேறு பகுதியில் அமைய இருக்கும் அதுபோன்ற மையங்களும் செயல்படத் தொடங்கினால் மிகப் பெரிய தொழில்நுட்பப் புரட்சி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
கூகுள் நிறுவனம் தனது மையத்தை நிறுவது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவிலான பங்களிப்பை நமது மத்திய, மாநில அரசுகள் வழங்குவதும் அவசியமாகிறது. டாடா, அதானி, ஏா்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் கூகுள் மையத்துக்கான அடிப்படைத் தேவைகளையும், கட்டமைப்புகளையும், வசதிகளையும் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் எண்ம சேவையைச் சாா்ந்தது என்பது நினைவிருக்கட்டும்.