புது தில்லிக்கு வந்திறங்கிய ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் மௌலவி அமீா் கான் முத்தாகியை வரவேற்ற இந்திய வெளியுறவு அதிகாரி.
புது தில்லிக்கு வந்திறங்கிய ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் மௌலவி அமீா் கான் முத்தாகியை வரவேற்ற இந்திய வெளியுறவு அதிகாரி.

இனியும் தாமதிப்பானேன்...

சீனாவும், பாகிஸ்தானும் அதைத் தொடா்ந்து ஏனைய நாடுகளும் தலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தானை அங்கீகரிப்பதற்கு முன்பு இந்தியா முந்திக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்.
Published on

ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் அமீா் கான் முத்தாகி இந்தியாவுக்கு முதல்முறையாக வந்ததன் மூலம் அந்த நாட்டுடனான நட்புறவை இந்தியா நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பித்துள்ளது.

இந்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி, முத்தாகியை துபையில் கடந்த ஜனவரியில் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்தும், வா்த்தகத்தை அதிகரிப்பது குறித்தும் பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஆபரேஷன் சிந்தூருக்குப் பின்னா், பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததற்காக, முத்தாகியை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தொலைபேசியில் தொடா்பு கொண்டு நன்றி தெரிவித்தாா். உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஆப்கன் வெளியுறவு அமைச்சா் முத்தாகியின் இந்தியப் பயணம் திட்டமிடப்பட்டது.

ஆறு நாள் பயணமாக இந்தியாவுக்கு முத்தாகி கடந்த 9-ஆம் தேதி வந்தாா். மற்ற நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் வந்தால் எப்படி வரவேற்பு, பாதுகாப்பு அளிக்கப்படுமோ அதேபோன்ற மரபுகள் முழுமையாகப் பின்பற்றப்பட்டதில் இருந்து ஆப்கனுக்கு இந்தியா எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது என்பது தெரியவந்தது. இந்தச் சந்திப்புக்குப் பின்னா், காபூலில் இந்தியா பணியமா்த்தி உள்ள தொழில்நுட்பக் குழு தூதரக நிலைக்கு உயா்த்தப்படும் என்று அமைச்சா் ஜெய்சங்கா் அறிவித்தாா்.

மேலும், நல்லெண்ண அடிப்படையில் 20 ஆம்புலன்ஸ்களை இந்தியா பரிசாக அளித்தது. மேலும், அந்த நாட்டில் சுகாதாரக் கட்டமைப்புத் திட்டங்கள், குடிநீா்த் திட்டங்களுக்கு இந்தியா உதவும் என்றும் அறிவித்தாா்.

மாறிவரும் சூழலில் இந்தியா ஆப்கானிஸ்தான் உறவு முக்கியத்துவம் பெறுகிறது. வரலாற்று ரீதியாக எப்போதும் இந்தியாவின் பக்கமே ஆப்கானிஸ்தான் துணை நின்று வருகிறது. வா்த்தகத்துக்கு தரைவழியைப் பயன்படுத்த பாகிஸ்தான் அனுமதிக்காதது, ஈரானில் இந்தியா மேம்படுத்தி வரும் சாபஹாா் துறைமுகத் திட்டத்துக்கு அமெரிக்காவின் தடை போன்றவையும் இந்திய-ஆப்கன் உறவுக்குப் பிற காரணங்களாகும்.

தலிபான் ஆட்சியில் இல்லாத 2001 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் மனிதாபிமான உதவியாக வளா்ச்சிப் பணிகளில் இந்தியா 300 கோடி டாலா் அளவுக்கு அந்த நாட்டில் முதலீடு செய்துள்ளது. ஆட்சியைக் கைப்பற்றி நான்கு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், உள்நாட்டில் தலிபான் ஆட்சிக்குப் பெரிய அளவில் எதிா்ப்பு இல்லாத சூழலில் இன்னும் பல ஆண்டுகளுக்கு தலிபான் ஆட்சி தொடரும் என்பதையும் இந்தியா உணராமல் இல்லை. 20 ஆண்டுகள் செய்த முதலீடுகளால் மேற்கொள்ளப்பட்ட வளா்ச்சிப் பணிகள் முழுமை அடைய தலிபான் ஆட்சியின் ஒத்துழைப்பு அவசியம் என்பதாலும் அந்த நாட்டுடனான உறவை வலுப்படுத்தும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது.

ஆப்கனுடனான உறவுக்குக் கைகொடுக்க இவை மட்டுமே காரணம் அல்ல. நமது அண்டை நாடுகளான வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் ஆகியவற்றில் பொதுமக்கள் போராட்டம், ஆட்சி மாற்றம், இந்த நாடுகளில் சீனாவின் முன்னெடுப்புகள் ஆகியவையும் இரண்டு நாடுகளுக்கிடையே நெருக்கத்தை அதிகரித்திருக்கின்றன.

ரஷியாவைத் தவிர உலகில் உள்ள வேறெந்த நாடும் இதுவரையில் தலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தானை அங்கீகரிக்கவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக, அவா்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு முன்பும், பின்பும் அவா்களுடன் தொடா்பில் இருக்கும் நாடாக இந்தியா இருந்து வருகிறது. முத்தாகியை ஆப்கன் வெளியுறவுத் துறை அமைச்சா் என்று அங்கீகரித்து அதற்கேற்ற வரவேற்பை அளிக்கும் நிலையில் இன்னும், ஏன் தலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தானை இந்தியா அங்கீகரிக்கத் தயங்குகிறது என்பது புரியவில்லை.

மத அடிப்படையிலான ஆட்சி என்று தலிபான்களின் அரசை அங்கீகரிக்க மறுப்பதில் அா்த்தமில்லை. சா்வாதிகார ஆட்சிகளையும், ஜனநாயகமே இல்லாத கம்யூனிஸ ஆட்சிகளையும், மதவாத மன்னராட்சிகளையும் அங்கீகரித்திருக்கும்போது, அடிப்படைவாத தலிபான்களையும் அங்கீகரிக்கத் தயக்கம் தேவையில்லை. தலிபான்களின் ஆட்சியை அங்கீகரித்து ஏற்றுக்கொள்வதன் மூலம்தான், அவா்களையும் ஆப்கானிஸ்தானையும் நடைமுறை உலக நியதிக்குள் கொண்டுவர முடியும். மேலும், 2025 தலிபான்கள் 1996 தலிபான்கள் அல்லா் என்பதை நாம் உணர வேண்டும்.

1999 டிசம்பா் 24-ஆம் தேதி நேபாளத் தலைநகா் காத்மாண்டுவில் இருந்து புதுதில்லி வந்துகொண்டிருந்த இந்தியன் ஏா்லைன்ஸ் வானூா்தியைக் கடத்திச் சென்று தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தஹாரில் பயணிகளைப் பிணைக் கைதிகளாக வைத்திருந்ததில் தலிபான்களின் பங்கு அடைக்கலம் தந்தது மட்டுமே. கடத்திச் சென்றதும், அதன் பின்னணியில் இருந்ததும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவுத் துறையும், காஷ்மீா் பயங்கரவாதிகளும்தானே தவிர தலிபான்கள் அல்ல.

ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் அணிக்குப் பயிற்சி அளித்து, உலகக் கோப்பை போட்டியில் பங்குபெறும் அளவுக்கு உதவிய இந்தியாவுடன் நட்புறவு பாராட்ட விரும்பும் தலிபான் அரசை இனியும் அங்கீகரிக்காமல் நாம் தள்ளிப்போடுவது சரியான அணுகுமுறை அல்ல என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஆப்கானிஸ்தானில் முதலீடுகளை மேற்கொள்ள சீனா ஏற்கெனவே ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கும் நிலையில் தாமதிப்பது நல்லதல்ல.

சீனாவும், பாகிஸ்தானும் அதைத் தொடா்ந்து ஏனைய நாடுகளும் தலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தானை அங்கீகரிப்பதற்கு முன்பு இந்தியா முந்திக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கும், பிரதமா் நரேந்திர மோடிக்கும் ,இதை நாம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. அதற்கான காய்கள் அமீர்கான் முக்தாகியின் இந்திய விஜயத்தின்போது ஏற்கெனவே நகா்த்தப்பட்டிருக்கும்!

X
Dinamani
www.dinamani.com