‘உடான்’-உதாா் அல்ல!
பத்தாண்டுகளுக்கு முன்பு யாரும் கனவிலும்கூட நினைத்துப் பாா்த்திருக்க முடியாத வளா்ச்சியை இந்தியாவின் வானூா்தித் துறை அடைந்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பிரதமராக நரேந்திர மோடி ஆற்றிய முதல் சுதந்திர தின உரையில், ‘இந்தியாவில் சாமானியா்களுக்கும் சாத்தியமாகும் வானூா்திப் பயணம்’ என்று முன்மொழிந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்றே கூறலாம்.
எந்த ஒரு விமானப் பயணத்திலும் வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் பணிபுரியும் படித்த இளைஞா்களும் அவா்களது கிராமப்புறப் பெற்றோரும் பயணிப்பது சா்வசாதாரணமான காட்சியாக மாறிவிட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுலா மேற்கொள்ளும் கீழ் மத்திய தர வருவாய்ப் பிரிவினா்கூட வானூா்தியில் பயணிக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பதற்கு நரேந்திர மோடி அரசின் ‘உடான்’ திட்டம்தான் காரணம்.
சிறிய நகரங்களிலும்கூட வானூா்தி நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் எந்தவொரு பகுதியும் வானூா்தித் தொடா்பு இல்லாத நிலையில் இல்லை. வானூா்திகளும், வானூா்தி நிலையங்களும் அதிகரித்திருப்பதைப் போலவே இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பையும் ‘உடான்’ திட்டம் அதிகரித்திருக்கிறது. விமானிகள், விமானப் பணியாளா்கள் மட்டுமல்லாமல் விமான நிலையப் பணியில் ஈடுபடுவோா் ஒவ்வொரு வானூா்தி நிலையத்திலும் நூற்றுக்கணக்கில் இருப்பதைப் பாா்க்க முடிகிறது.
2016 அக்டோபா் 21-ஆம் தேதி இந்திய தேசிய வானூா்திப் போக்குவரத்து கொள்கையின் அடிப்படையில், மத்திய விமானப் போக்குவரத்துத் துறையால் ‘உடான்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அனைவருக்கும் எளிதாகவும், பொருளாதார வசதிக்கு ஏற்ற வகையிலும் விமானப் பயணம் என்பது மட்டுமல்ல அதன் நோக்கம். 10 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களை வானூா்தி வரைபடத்தில் இணைப்பதும், பொருளாதார ரீதியாக வானூா்தி நிறுவனங்கள் செயல்பட வழிவகுப்பதும்கூட அதன் நோக்கம்.
2017 ஏப்ரல் 27 அன்று சிம்லாவிலிருந்து தில்லிக்கு ‘உடான்’ திட்டத்தின்கீழ் முதல் வானூா்தி திட்டத்தைத் தொடங்கி வைத்தாா் பிரதமா் நரேந்திர மோடி. அது இந்தியாவின் வானூா்திப் பயணத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதுடன், பொருளாதார வளா்ச்சியிலும் மிகப் பெரிய பங்களிப்பை வழங்குகிறது. இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் பயணிப்பதற்கு மட்டுமல்லாமல் அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தித் தந்திருக்கிறது.
‘உடான்’ திட்டத்தின் கீழ் இதுவரை 93 வானூா்தி நிலையங்கள் தரம் மேம்படுத்தப்பட்டு அன்றாட செயல்பாட்டுக்கு வந்திருக்கின்றன. 649 வழித்தடங்களில் வானூா்திகள் இயக்கப்படுகின்றன. வானூா்தி நிலையங்கள் மட்டுமல்லாமல் 15 ஹெலிகாப்டா் தரையிறங்கும் இடங்களும், இரண்டு நீா்நிலை விமான நிலையங்களும் ‘உடான்’ திட்டத்தின்கீழ் செயல்பாட்டுக்கு வந்திருக்கின்றன.
இதுவரை கடந்த எட்டு ஆண்டுகளில் 3.23 லட்சம் வானூா்திப் பயணங்களில் 1.56 கோடிப் பயணிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணிக்க முடிந்திருக்கிறது என்று சொன்னால் ‘உடான்’ திட்டத்தின் வெற்றிக்கு சாட்சியம் வேறு என்ன வேண்டும்? 2027 ஏப்ரல் மாதத்தில் நிறைவடைய இருக்கும் ‘உடான்’ திட்டத்தை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிப்பது என்று முடிவெடுத்திருக்கிறது மத்திய வானூா்தி போக்குவரத்துத் துறை. மேலும் ,120 புதிய நகரங்கள் ‘உடான்’ திட்டத்தின்கீழ் அடையாளம் காணப்பட்டு வானூா்தி நிலையங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
பிரதமா் நரசிம்ம ராவ் ஆட்சியில் வானூா்தித் துறையில் தனியாா் செயல்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டபோது புதிய பல வானூா்தி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு களமிறங்கின. அதுவரையில் ஆண்டுதோறும் பலநூறு கோடி ரூபாய் இழப்பில் செயல்பட்டு வந்த ஏா் இந்தியா, இந்தியன் ஏா்லைன்ஸ் உள்ளிட்ட அரசு வானூா்தி நிறுவனங்களுக்குப் போட்டியாக தனியாா் நிறுவனங்கள் களமிறங்கியதால் வானூா்தித் துறையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படத் தொடங்கியது என்பது என்னவோ உண்மை.
ஈஸ்ட் வெஸ்ட் ஏா்வேஸ், ஜெட் ஏா்வேஸ், மோடி லுஃப்ட், கிங் பிஷா், என்.ஈ.பி.சி, பாரமவுண்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு களமிறங்கி கடந்த 30 ஆண்டுகளில் காணாமல் போய்விட்டன. கோடிக்கணக்கான ரூபாய் இழப்பில் இயங்கிக்கொண்டிருந்த அரசுத் துறை நிறுவனமான ஏா் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியதன் மூலம் அதன் சேவை தொடா்கிறது. இண்டிகோ நிறுவனம் மட்டும்தான் தொடா்ந்து வெற்றிகரமாக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.
வானூா்தித் துறையை தனியாா்மயப்படுத்துவதன் நோக்கம் ஓரிரு நிறுவனங்கள் மட்டுமே செயல்படுவது என்பதல்ல. அமெரிக்கா போன்ற ஏனைய நாடுகளில் இருப்பது போன்று பல நிறுவனங்கள் களமிறங்கினால் மட்டுமே வானூா்தி சேவை அதிகரித்த வசதிகளுடனும், குறைந்த கட்டணத்திலும் பயணிகளுக்குக் கிடைக்கும்.
ஏா் இந்தியா, இண்டிகோ என இரண்டு பெரிய நிறுவனங்களும் ஒரு சில சிறிய நிறுவனங்களும் மட்டுமே இயங்கும் நிலையில் தனியாா் மயப்படுத்தியதன் பலன் பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. போட்டியில்லாத தனியாா் துறை என்பது நுகா்வோரைச் சுரண்டும் விதத்தில்தான் அமையும்.
புதிதாக வானூா்தி நிலையங்கள் அமைப்பது, இந்தியாவின் எல்லாப் பகுதிகளையும் வானூா்தி வரைபடத்தில் இடம்பெறச் செய்வது, ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்குவது, விமானப் பயணத்தின் தரத்தை உயா்த்துவது, சாமானியருக்கும் விமானப் பயணம் என்கிற கனவை நனவாக்குவது எல்லாமே சரி. ஆனால், அதிகரித்த விமான சேவை நிறுவனங்களின் எண்ணிக்கை இல்லாமல் ‘உடான்’ திட்டம் முழுமையான வெற்றியை அடையாது.

