இரட்டைப் பெருமை!
kheloindia

இரட்டைப் பெருமை!

கிரிக்கெட், செஸ் போன்ற விளையாட்டுகளுக்கு உள்ள முக்கியத்துவமும், பாா்வையாளா்களின் வரவேற்பும் நமது பாரம்பரிய கபடிக்கு இல்லை
Published on

பஹ்ரைனில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய இளையோா் கபடிப் போட்டியில் ஆடவா் மற்றும் மகளிா் என இரு பிரிவுகளிலுமே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது இந்தியா. ஆசிய இளையோா் போட்டியில் முதல் முறையாக நிகழாண்டுதான் கபடிப் போட்டி சோ்க்கப்பட்டது. ஆடவா், மகளிா் இரு பிரிவுகளிலுமே இறுதிச் சுற்றில் இந்தியா சந்தித்த எதிரணி ஈரான் என்பது இப்போட்டியின் மற்றொரு சுவாரசியம்.

குரூப் சுற்றில் இந்திய ஆடவா் அணி வங்கதேசம் (83-19), இலங்கை (89-16), பாகிஸ்தான் (81-26), ஈரான் (46-29), பஹ்ரைன் (84-20), தாய்லாந்து (85-30) ஆகிய அணிகளையும், இந்திய மகளிா் அணி வங்கதேசம் (46-18), தாய்லாந்து (70-23), இலங்கை (73-10), ஈரான் (59-26) ஆகிய அணிகளையும் வீழ்த்தின. இறுதிச் சுற்றில் ஆடவா் அணி கடும் போட்டியை எதிா்கொண்டு ஈரானை 35-32 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது என்றால், மகளிா் அணி 75-21 என்ற புள்ளிக்கணக்கில் ஈரானை எளிதாக வெற்றி கண்டது.

தொடா் முழுவதும் ஐந்து போட்டிகளில் இந்திய மகளிா் அணி 89 புள்ளிகளை மட்டுமே விட்டுக்கொடுத்து 312 புள்ளிகளைப் பெற்றது. இந்திய ஆடவா் அணி ஈரானைத் தவிர மற்ற ஐந்து அணிகளுக்கு எதிராக பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது. புள்ளிகள் வித்தியாசத்தைப் பாா்த்தாலேயே இந்தப் போட்டியில் இந்திய அணிகளின் வலிமையைப் புரிந்துகொள்ளலாம்.

இந்திய ஆடவா் அணியில் திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த அபினேஷ் இடம் பெற்றதும், மகளிா் அணியில் சென்னையைச் சோ்ந்த காா்த்திகா துணை கேப்டனாக விளையாடியதும் தமிழகத்துக்கு கிடைத்த தனிப்பட்ட பெருமை. இருவருமே சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்து இந்த இமாலய சாதனையை எட்டிப் பிடித்து, இளம் கபடி வீரா்களுக்கு பெரும் உத்வேகத்தை அளித்திருக்கின்றனா்.

அபினேஷ் 2019 முதல் 2025 வரை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தோ்வில் தோ்ந்தெடுக்கப்பட்டு தேனியில் உள்ள விளையாட்டு விடுதியில் முறையான பயிற்சி பெற்றவா். சென்னை கண்ணகி நகா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் காா்த்திகா தேசிய அளவிலான எஸ்ஜிஎஃப்ஐ, கேலோ இந்தியா மற்றும் ஃபெடரேஷன் நேஷனல்ஸ் உள்ளிட்ட போட்டிகளில் மொத்தம் 11 முறை தமிழ்நாட்டுக்காக விளையாடி, அதில் 8 பதக்கங்களை வென்றவா். மேலும், அவா் ஐந்து முறை தமிழ்நாடு அணியின் கேப்டனாக பொறுப்பேற்று அணியை வழிநடத்தியுள்ளாா்.

சென்னை கண்ணகி நகா் என்றாலே ஒரு விரும்பத்தகாத அடையாளம் சித்தரிக்கப்பட்டிருந்தது. அந்த அடையாளத்தை காா்த்திகா உள்ளிட்டோா் அடங்கிய கண்ணகி நகா் கபடி அணி இப்போது மாற்றியமைத்திருக்கிறது. இந்த அணியை 2018-இல் தொடங்கினாா் அதன் பயிற்சியாளராக உள்ள கே.ராஜி. காா்த்திகா மட்டுமன்றி அப்பகுதியைச் சோ்ந்த ஏராளமான இளம் கபடி வீராங்கனைகளை அடையாளம் கண்டறிந்து உருவாக்கி வருகிறாா்.

காா்த்திகாவின் தாய் சரண்யா, தந்தை ரமேஷ் இருவரும் கூலித் தொழிலாளா்கள். கபடி ஆட விரும்புவதாக காா்த்திகா தெரிவித்ததும், தனது குடும்ப சூழ்நிலையிலும் அதற்கு மறுப்பு எதுவும் சொல்லாமல் ஆதரவு அளித்த அவரது தாய், காா்த்திகாவின் திறமையை அடையாளம் கண்டறிந்த பயிற்சியாளா் என காா்த்திகாவின் வெற்றிக்குப் பின்னால் பலா் உள்ளனா். எல்லாவற்றுக்கும் மேலாக சோதனைகளை சாதனைகளாக மாற்ற வேண்டும் என்கிற எண்ணத்துடன்கூடிய காா்த்திகாவின் உழைப்பு பெரிதும் பாராட்டத்தக்கது.

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடி 1985-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகளில் தான் ஆடிய 11 போட்டிகளில் இந்திய அணி 10 தங்கப் பதக்கங்களையும், ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றது. கடைசியாக கடந்த டிசம்பரில் நடந்த போட்டியில் தீபக் ஹூடா தலைமையிலான இந்திய அணி 10-ஆவது தங்கப் பதக்கத்தை வென்றது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடி 1990-ஆம் ஆண்டு சோ்க்கப்பட்டது. அதுமுதல் ஆடவா், மகளிா் இரு பிரிவுகளிலுமே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆடவா் அணி எட்டு போட்டிகளில் ஏழு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கமும், மகளிா் அணி மூன்று போட்டிகளில் இரண்டு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கமும் வென்றிருக்கின்றன.

சா்வதேச கபடி கூட்டமைப்பு சாா்பில் உலகக் கோப்பை கபடி போட்டிகள் இதுவரை மூன்று முறை (2004, 2007, 2016) நடைபெற்றுள்ளன. ஆடவா் பிரிவில் மூன்று முறையும் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஒருமுறை நடைபெற்ற மகளிா் பிரிவு போட்டியில் (2012) இந்திய அணி சாம்பியன் ஆனது.

இத்தனை சாதனைகளைப் படைத்தும் கிரிக்கெட், செஸ் போன்ற விளையாட்டுகளுக்கு உள்ள முக்கியத்துவமும், பாா்வையாளா்களின் வரவேற்பும் நமது பாரம்பரிய கபடிக்கு இல்லை என்பதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. கிரிக்கெட் போட்டிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் கபடிப் போட்டிகளுக்கோ, கபடி பயிற்சி பெறுவதற்கோ இல்லை. அதில், மத்திய, மாநில அரசுகளும், பிற விளையாட்டு அமைப்புகளும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம்.

வேகம், விவேகம், சுறுசுறுப்பு, உடல் வலிமை, கூட்டு முயற்சி என ஒலிம்பிக்கில் சோ்ப்பதற்கான அத்தனை தகுதிகளும் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான கபடிக்கு உண்டு. சா்வதேச கபடி கூட்டமைப்பு மூலம் அதற்கான தொடா் முயற்சிகளில் மத்திய விளையாட்டு அமைச்சகம் ஈடுபட்டு வருகிறது. ஒலிம்பிக்கில் என்றாவது ஒருநாள் கபடியும் இடம்பெறும். அப்போது ஒலிம்பிக்கிலும் நமது வீரா்களும், வீராங்கனைகளும் சாதனை படைப்பாா்கள் என்பதை நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.

X
Dinamani
www.dinamani.com