
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணியில் தொடர்வதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி அளித்திருக்கும் தீர்ப்பை வரவேற்காதவர்கள் இருக்க முடியாது. ஓய்வு பெறுவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் உள்ள ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயம் என்றும், அப்படி தகுதி பெற முடியாதவர்கள் பணியிலிருந்து விலகிக் கொள்ளலாம் அல்லது இறுதி சலுகைகளுடன் கட்டாயப் பணி ஓய்வு பெறலாம் என்கிற தெளிவான தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள் நீதிபதிகள்.
பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு ஆசிரியர்களின் நியமனம் தொடர்பாக ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் 2010-ஆம் ஆண்டு சில குறைந்தபட்ச தகுதிகளை விதித்தது. அப்போதுதான் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து சில மாநிலங்கள் தாக்கல் செய்த மனுக்களின் மீதான தீர்ப்புதான் உச்சநீதிமன்றத்தால் இப்போது வழங்கப்பட்டிருக்கிறது.
ஆசிரியர்களாக இருப்பவர்கள் அரசுப் பள்ளிகளாக இருந்தாலும், அரசு உதவி பெறும் பள்ளிகளாக இருந்தாலும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் எனும்போது, சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு அதிலிருந்து விதிவிலக்கு என்கிற கோரிக்கை வேடிக்கையாக இருக்கிறது. இதனால் சிறுபான்மையினர் உரிமை பாதிக்கப்படும் என்பது சிறுபிள்ளைத்தனமான வாதம்.
அந்தப் பிரச்னை குறித்த தங்களது கருத்தை தெளிவுபடுத்தாமல், கூடுதல் நீதிபதிகள் அமர்வு விசாரணை மேற்கொள்ளும் என்று நீதிபதிகள் தங்களது பொறுப்பைத் தட்டிக்கழித்திருக்கிறார்கள்.
உயர் கல்வியில் சர்வதேச தரத்தை எட்ட வேண்டும் என்கிற இலக்கை நிர்ணயித்து பயணிக்கும் இந்தியாவில், அடிப்படை பள்ளிக் கல்வி தரமானதாக இல்லை. தேசிய புள்ளிவிவரத் துறை வெளியிட்டிருக்கும் சில தரவுகளின்படி அரசுப் பள்ளிகள் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. ஆசிரியர்களின் தரமானாலும், கல்வியின் தரமானாலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இல்லாமல் இருக்கும் நிலையில், மாணவர்களின் தரம் மட்டும் உயர்ந்து காணப்படும் என்று எதிர்பார்க்க முடியாது.
தேசிய புள்ளிவிவரத் துறை ஆய்வின்படி, 2017-18 முதல் கிராமப்புறமானாலும், நகர்ப்புறமானாலும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும், மாணவர் வருகையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
கிராமப்புற இந்தியாவில் இந்தப் போக்கு அதிகமாகக் காணப்படுகிறது என்கிறது ஆய்வு. 2025-இல் கிராமப்புறங்களில் மேல்நிலைப் பள்ளி அளவில் மாணவர் சேர்க்கையும், மாணவர் வருகையும் 68%-இலிருந்து 58.9%-ஆக குறைந்திருக்கிறது. நகர்ப்புறங்களில் 38.9%-இலிருந்து 36.4%-ஆக சிறிய அளவில் குறைந்திருக்கிறது.
ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என்கிற வேறுபாடு இல்லாமல் அனைத்திலுமே புதிய மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கை குறைந்து வருவதைப் பார்க்க முடிகிறது. வேடிக்கை என்னவென்றால், அரசுப் பள்ளிகளைத் துறந்து மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்வது அதிகரிக்கிறது.
இத்தனைக்கும் தனியார் பள்ளிகளில் அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
எல்லா மாநிலங்களிலும் அரசுப் பள்ளிகளில் இலவச கல்வி மட்டுமல்ல, சீருடை, புத்தகங்கள், மதிய உணவு, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் உள்ளிட்டவை விலையில்லாப் பொருள்களாக வழங்கப்படுகின்றன. அப்படி இருந்தும்கூட பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளிலிருந்து கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள் என்றால், அதன் பின்னணி தீவிர ஆய்வுக்குரியது.
புற்றீசல்களாகக் கிளம்பியிருக்கும் பெரும்பாலான தனியார் பள்ளிகளின் கல்வித் தரம் அரசுப் பள்ளிகளைவிட மேலானதாக இல்லை. அப்படியிருந்தும் ஊரகப் பகுதிகளில் தனியார் பள்ளிகளுக்காக பெற்றோர்கள் பல மடங்கு அதிகமாக குழந்தைகளின் கல்விக்குச் செலவழிக்கிறார்கள். வகுப்புகள் முறையாக நடத்தப்படுகின்றன, ஆசிரியர்கள் அக்கறையுடன் கற்றுக்கொடுக்கின்றனர் என்கிற கருத்தாக்கம் தனியார் பள்ளிகள் குறித்து ஏற்பட்டிருப்பதன் விளைவுதான் இந்தப் போக்கு.
வெளியிடப்பட்டிருக்கும் ஆய்வின்படி நகர்ப்புறங்களில் 31% மாணவர்களும், கிராமப்புறங்களில் 25.5% மாணவர்களும் பள்ளிகளுக்கு வெளியே தனிப் பயிற்சி பெறுகிறார்கள். இது அரசுப் பள்ளிகளைவிட தனியார் பள்ளி மாணவர்கள் மத்தியில்தான் அதிகம் காணப்படுகிறது எனும்போது, அரசுப் பள்ளிகளின் புறக்கணிப்புக்கு ஆசிரியர்களின் பயிற்றுவிப்புத் திறன் குறைவு மட்டுமே காரணம் அல்ல என்று தெரிகிறது.
அரசுப் பள்ளிகளின் அடிப்படைக் குறைபாடுகள்தான் பெற்றோர் தனியார் பள்ளிகளை நாடுவதற்கான காரணம். மோசமான உள்கட்டமைப்பு, சீரான கற்பித்தல் திறன் இன்மை இரண்டும் முக்கியமான காரணங்கள். ஆறாவது, ஏழாவது ஊதிய ஆணையத்துக்குப் பிறகு வளர்ச்சியடையும் நாடுகளிலேயே அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அதிகமாக ஊதியம் பெறும் நாடாக இந்தியா திகழ்கிறது. ஆனால், தேசிய அளவிலான ஆய்வில் ஆசிரியர்களின் வருகையின்மை 25% அளவில் காணப்படுகிறது; இது பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் 46%.
போதாக்குறைக்கு அரசுப் பள்ளிகளில் நிரப்பப்படாத ஆசிரியர் பணியிடங்கள் அதிக அளவில் உள்ளன. தனியார் பள்ளிகளில் ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளோ, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஈடான ஊதியமோ இல்லையென்றாலும் ஆசிரியர்கள் வருகை உறுதிப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்காசிய நாடுகளும், சீனாவும் அடைந்திருக்கும் பொருளாதார வெற்றிக்கு அவர்களது அரசுப் பள்ளிகள்தான் காரணம். இந்தியாவில் அரசுப் பள்ளிகள் சமூக சமநிலையைச் சிதைத்து, சமுதாயத்தின் சமச்சீர் வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கின்றன; கடைநிலை மக்கள் அடித்தட்டு மக்களாகவே தொடர வழிகோலுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.