
அன்றாட வாழ்க்கையில் உடனடி பாதிப்பு தெரியாவிட்டாலும், இந்திய இறக்குமதிகள் மீது அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் விதித்திருக்கும் 50% வரியின் பாதிப்பு மெல்ல மெல்லத்தான் தெரியத் தொடங்கும். வளர்ச்சிப் பாதையில் மிக வேகமாக இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கும்போது அதன் வளர்ச்சியை தடம்புரளச் செய்யும் விதத்தில் அமைந்திருக்கிறது அந்த வரிவிதிப்பு.
டிரம்ப் வரிவிதிப்பால் உலகளாவிய அளவில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழலுக்கு இடையிலும், இந்தியப் பொருளாதாரம் அச்சம் ஏற்படுத்தும் வகையில் இல்லை என்பது ஓர் ஆறுதல். வேளாண் துறையானாலும், தகவல் தொழில்நுட்பத் துறையானாலும் இப்போதைய நிலையில் எந்தவிதப் பாதிப்பையும் இந்தியா எதிர்கொள்ளவில்லை. வளர்ச்சி என்று எடுத்துக் கொண்டாலும் ஆரோக்கியமான அறிகுறிகள்தான் காணப்படுகின்றன.
ஜூன் மாதம் முடிவடைந்த முதல் காலாண்டு, 7.8% ஜிடிபி வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. அதற்கு விலைவாசி குறைந்தது ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்றாலும், அதை ஆறுதல் அளிக்கும் போக்காகவே பார்க்க வேண்டும். 7.8% ஜிடிபி வளர்ச்சி என்பதால் சர்வதேசச் சூழலில் காணப்படும் மாற்றங்கள் காரணமாக நாம் மெத்தனமாக இருந்துவிட முடியாது. ஏற்படக்கூடும் பெரிய அளவிலான வேலைவாய்ப்பு இழப்பை எதிர்கொள்வதற்கான முன்னெடுப்புகளை இப்போதே முனைந்து மேற்கொள்வது அவசியம்.
வங்கிகளில் தொழில் நிறுவனங்கள் பெறும் கடன்களின் அளவு குறைந்துகொண்டு வருவது ஆரோக்கியமான போக்கு. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ஜூன் மாதம் வங்கிகள் வழங்கிய கடன் 9.5% குறைவு. பெரு நிறுவனங்களுக்கு வழங்கியிருக்கும் கடன் உதவிகள் 0.8% தான் அதிகரித்திருக்கிறது. இதற்குக் காரணம் பங்குச் சந்தையில் காணப்படும் உற்சாகமும், கடன் பத்திரங்களுக்கு ஏற்பட்டிருக்கும் வரவேற்பும் என்று கூறலாம்.
நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் பெரு நிறுவனங்களின் கடன் பத்திரங்களுக்கான வரவேற்பான ரூ.2.94 லட்சம் கோடி என்பது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 86% வளர்ச்சி. 2021}22}ஆம் நிதியாண்டில் இருந்து பெரு நிறுவனங்களின் கடன் பத்திரங்களுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நீண்ட காலமாகவே வங்கிகளில் அல்லாமல் கடன் பத்திரங்கள், பங்குச் சந்தை மூலம் பெரு நிறுவனங்கள் தங்களுக்கான நிதித் தேவையைப் பெறுவதை ரிசர்வ் வங்கி ஊக்குவித்து வருகிறது.
இந்தப் போக்குக்கு பல காரணங்களைச் சொல்ல முடியும். முதலாவதாக மியூச்சுவல் ஃபண்ட், காப்பீட்டு நிறுவனங்கள், மாற்று முதலீடுகள் காரணமாக பங்குப் பத்திரங்கள் உடனடியாக வாங்கப்படுகின்றன. இரண்டாவதாக, பெரு நிறுவனங்களின் கடன் பத்திரங்கள் இணையம் மூலம் விற்கப்படுவதால், சில்லறை முதலீட்டாளர்கள் அவற்றில் வர்த்தகம் செய்கிறார்கள். வங்கிகளில் இருந்து கடன் பெற முடியாத நிறுவனங்கள்கூட பங்குகள், கடன் பத்திரங்கள் மூலம் தங்களுக்கான முதலீடுகளை ஈர்த்துக் கொள்கின்றன.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், மத்திய அரசின் நிதி நிர்வாகத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. இதுவரையில் மிகவும் கவனத்துடன் தனது வருவாயை அதிகரிப்பதில் மட்டுமே நிதி அமைச்சகம் குறியாக இருந்தது.
வருவாய்ச் செலவினங்களில் நிதியமைச்சர் சிக்கனம் பிடிக்கிறார் என்கிற குற்றச்சாட்டு பலரால் முன்வைக்கப்பட்டது. இப்போது அதற்கு நேர் எதிரான போக்கைக் கையாள முற்பட்டிருக்கிறது மத்திய அரசு.
இந்திய இறக்குமதிகளுக்கு அமெரிக்கா 50% வரி விதித்திருக்கும் நிலையில், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. அதை எதிர்கொள்ளும் விதத்தில் அமைகிறது மத்திய நிதியமைச்சகத்தின் தாராளப் போக்கு. இது நுகர்வோரின் கேட்பை அதிகரித்து பொருளாதார இயக்கத்தைக் கட்டாயமாக ஊக்குவிக்கும்.
மத்திய அரசின் பட்ஜெட்டில் வழங்கப்பட்ட வருமான வரிச் சலுகைகள் மாத வருவாய்க்காரர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருப்பதில் வியப்பில்லை. செப்.22 முதல் அமலாக இருக்கும் ஜிஎஸ்டி சீர்திருத்தம் பொருளாதார இயக்கத்தை கணிசமாக ஊக்குவிக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை. இந்த இரண்டு முடிவுகளுமே இப்போதைய சூழ்நிலையில் அவசியம்தான் என்றாலும் இதற்காக சில விலையும் கொடுத்தாக வேண்டும். வருமான வரிக் குறைவும், ஜிஎஸ்டி வருவாய்க் குறைவும் ஒட்டுமொத்த வரி வருமானத்தைப் பாதித்து பற்றாக்குறையை அதிகரிக்கும்.
2024 ஏப்ரல் 1 முதல் ஆகஸ்ட் 11 வரையிலான வருமான வரி வசூல் ரூ.4.45 லட்சம் கோடி என்றால், இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் 7.5% குறைந்து ரூ.4.12 லட்சம் கோடியாகி இருக்கிறது. நேரடி வரி வருவாயில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் பகுதியாக வருமான வரி இருந்து வந்தது. இப்போது அதில் கணிசமான பின்னடைவு ஏற்பட இருக்கிறது.
அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் பல தொழில் நிறுவனங்கள் நேரடிப் பாதிப்புக்கு உள்ளாகி திணறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்த நிறுவனங்களின் வங்கிக் கடனுக்கான தவணைகள், வட்டி உள்ளிட்டவற்றில் அரசு உடனடிச் சலுகைகளை வழங்காமல் போனால் நிரந்தரமாக அவை மூடப்படும் சூழல் உருவாகும். புதிய சந்தையை தேடிப்பிடிக்க ஏற்றுமதியாளர்களுக்கு உதவுவது, ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வங்கித் தவணைக்கும், வட்டிக்கும் விலக்கு வழங்குவதும் அவசியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.