

சுதந்திர இந்திய குடியரசின் 15-ஆவது குடியரசு துணைத் தலைவராகத் தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஆர். வெங்கட்ராமனுக்குப் பிறகு அந்தப் பதவியை அலங்கரிக்க இருக்கும் தமிழர் என்கிற பெருமைக்குரியவராகிறார் அவர். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள எண்ணிக்கை பலத்தின் அடிப்படையில் அந்த அணியில் இல்லாத சிலரும் அவரது வெற்றிக்குப் பங்களிப்பு வழங்கி இருப்பதில் இருந்து, கட்சி அரசியலைக் கடந்த அவரது செல்வாக்கு வெளிப்படுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராகக் களமிறக்கப்பட்ட சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக 452 வாக்குகளும், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் "இண்டி' கூட்டணியின் சார்பாகப் போட்டியிட்ட உச்சநீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவாக 300 வாக்குகளும் பதிவாகின. நாடாளுமன்ற இரு அவைகளில் மொத்தம் உள்ள 788; எம்.பி.க்களின் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை 781; அவர்களில் 767 எம்.பி.க்கள் மட்டுமே வாக்கெடுப்பில் கலந்துகொண்டனர்.
அந்த 767 பேரிலும் 15 வாக்குகள் செல்லாதவை என்பது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இரண்டு அணிகளும் அத்தனை உறுப்பினர்களையும் உட்காரவைத்துப் பள்ளிக் குழந்தைகளுக்குப் பாடம் எடுப்பதுபோல எப்படி வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியும்கூட 15 உறுப்பினர்களின் வாக்குகள் செல்லாதவை என்றால், நம்மால் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் தகுதியும், திறனும் கேள்விக்குறியாகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 425. ஆந்திர மாநில ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் ஏழு மாநிலங்களவை உறுப்பினர்களும், நான்கு மக்களவை உறுப்பினர்களும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அப்படிப் பார்த்தாலும் மொத்தம் 436 வாக்குகள்தான் அவர் பெற்றிருக்க வேண்டும். ஆனால், சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக 452 வாக்குகள் பதிவாகி இருக்கின்றன என்பதும், 15 வாக்குகள் செல்லாதவை என்பதும் எந்த அளவுக்கு எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமையும் கட்டுப்பாடும் நிலவுகின்றன என்பதன் வெளிப்பாடு.
ஒடிஸாவின் பிஜு ஜனதாதளமும், தெலங்கானாவின் பாரத ராஷ்டிர சமிதியும் அறிவித்தபடியே குடியரசு துணைத் தலைவர் தேர்தலைப் புறக்கணித்தன. பஞ்சாபில் நிலவும் சூழல் காரணமாகத் தேர்தலில் பங்குபெறப் போவதில்லை என்று அகாலிதளம் அறிவித்திருந்தது. "இண்டி' கூட்டணியில் இருக்கும் கருப்பு ஆடுகள் அல்லது ஸ்லீப்பர் செல்கள் யார் என்கிற விவாதங்கள் இனிமேல் தொடங்கும். ரகசிய வாக்கெடுப்பு என்பதாலும், "கொறடா' இல்லை என்பதாலும் அணி மாறி வாக்களித்த "இண்டி' கூட்டணி எம்.பிக்களை அடையாளம் காண்பது எளிதாக இருக்காது.
இந்தியா குடியரசாக மாறியபோது, சுதந்திர இந்தியாவின் தலைவர்கள் ஒரு மரபை ஏற்படுத்தி இருந்தார்கள். குடியரசுத் தலைவராக பாபு ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, துணைத் தலைவராகத் தென்னிந்தியாவில் இருந்து ஒருவர் (டாக்டர் ராதாகிருஷ்ணன்) நியமிக்கப்பட வேண்டும் என்பதுதான் அப்போது உருவாக்கப்பட்ட மரபு. குடியரசுத் தலைவராக தென்னிந்தியர் தேர்ந்தெடுக்கப்படும்போது, துணைத் தலைவர் பதவியை வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்குவதன் மூலம் இந்தியாவின் ஒருமைப்பாடு காக்கப்படும் என்று கருதினார்கள் அப்போதைய தலைவர்கள்.
அந்த மரபு 2007-இல் முகமது ஹமீத் அன்சாரி குடியரசு துணைத் தலைவராவது வரை தொடர்ந்தது. ஆ.ப.ஜெ. அப்துல்கலாமைத் தொடர்ந்து வட மாநிலத்தைச் சேர்ந்த பிரதிபா பாட்டீல் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, துணைத் தலைவர் பதவியில் தென்னிந்தியத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கருதவில்லை. வட இந்தியரான அன்சாரியைத் தேர்ந்தெடுத்தது. அடுத்தாற்போல பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவரானபோதும், அன்சாரியே குடியரசு துணைத் தலைவராகத் தொடர்ந்தார்.
2004-இல் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது பெரிய கட்சியான தமிழகத்தின் திமுகவைச் சார்ந்துதான் அப்போதைய டாக்டர் மன்மோகன் சிங் அரசு அமைந்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி, க.அன்பழகன் போன்ற திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவரை குடியரசு துணைத் தலைவராக்க அன்றைய திமுக தலைவர் கருணாநிதி அழுத்தம் கொடுத்திருந்தால் தென்னிந்தியாவுக்கு நியாயமாக கிடைத்திருக்க வேண்டிய வாய்ப்பு கைநழுவியிருக்காது, திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர் இந்தியாவின் உச்சகட்ட தலைமைப் பொறுப்பில் அமரும் வாய்ப்பும் கிடைத்திருக்கும்.
அதேபோல, கே.ஆர்.நாராயணனுக்குப் பிறகு, குடியரசு துணைத் தலைவர்கள் குடியரசுத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்படும் மரபும் பின்பற்றப்படுவதில்லை. காங்கிரஸ் மட்டுமல்ல, பாஜகவும் அந்த மரபைப் பின்பற்றவில்லை. இனிமேலாவது அந்த மரபு மீட்டெடுக்கப்பட வேண்டும்.
தொடர்ந்து இரண்டு முறை தமிழகத்திலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பாஜக தலைவர் என்கிற பெருமைக்குரிய 67 வயது சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன் தனது 16-ஆவது வயதிலிருந்து ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருப்பவர். பைரோன்சிங் ஷெகாவத்துக்குப் பிறகு குடியரசு துணைத் தலைவர் பதவி வகிக்க இருக்கும் இரண்டாவது ஆர்எஸ்எஸ்காரர் அவர். வேரோட்டம் இல்லாமல் இருந்த தமிழக பாஜகவுக்கு, அவர் 2004-இல் தலைவரானபோது நடத்திய 19,000 கி.மீ. தேரோட்டம்தான் (ரத யாத்திரை) அடித்தளமிட்டது என்பதை இன்றைய பாஜக தலைவர்கள் மறந்திருக்கக்கூடும்.
ஆர்எஸ்எஸ் தொண்டராக, எமர்ஜென்சி அடக்குமுறையை எதிர்த்துப் போராடியவராக, மக்களவை உறுப்பினராக, மாநில பாஜக தலைவராக, ஜார்க்கண்ட், மகாராஷ்டிர மாநிலங்களின் ஆளுநராக என்று தான் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளுக்கு எல்லாம் பெருமை சேர்த்த நமது தமிழகத்தின் சி.பி.ராதாகிருஷ்ணன், இப்போது குடியரசு துணைத் தலைவராக உயர்ந்திருப்பதன்மூலம் தவறு திருத்தப்பட்டிருக்கிறது; மரபு மீட்கப்பட்டிருக்கிறது.
தேவைப்படும் பெரும்பான்மைக்கு அதிகமாகவும், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பி.க்கள் எண்ணிக்கைக்கு அதிகமாகவும் வாக்குகள் பெற்று குடியரசு துணைத் தலைவராகியிருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கும் வாழ்த்தை, "தினமணி' நாளிதழ் வழிமொழிகிறது-
"தனது வாழ்வை சமூகத்துக்கு சேவையாற்றவும், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காகவும் அர்ப்பணித்தவர் சி.பி.ராதாகிருஷ்ணன். நமது அரசமைப்புச் சட்ட மதிப்பீடுகளை வலுப்படுத்தியும், விரிவான நாடாளுமன்ற விவாதங்களை உறுதிப்படுத்தியும் சிறந்த குடியரசு துணைத் தலைவராக அவர் திகழ்வார்'.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.