தீவு மீட்பல்ல தீர்வு!

இலங்கையின் வட பகுதியான யாழ்ப்பாணத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைக்கச் சென்ற இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக கடந்த வாரம் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் திடீரென கச்சத் தீவுக்கு சென்று ஆய்வு செய்தது மீண்டும் விவாதத்தை எழுப்பி இருக்கிறது.
தீவு மீட்பல்ல தீர்வு!
Published on
Updated on
2 min read

இலங்கையின் வட பகுதியான யாழ்ப்பாணத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைக்கச் சென்ற இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக கடந்த வாரம் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் திடீரென கச்சத் தீவுக்கு சென்று ஆய்வு செய்தது மீண்டும் விவாதத்தை எழுப்பி இருக்கிறது.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் விசைப் படகில் கச்சத் தீவுக்கு சென்றார் இலங்கை அதிபர். இந்தியா கச்சத் தீவை இலங்கைக்கு கொடுத்து அரை நூற்றாண்டு காலம் ஆகிவிட்ட நிலையில், அங்கு சென்றுள்ள முதல் இலங்கை அதிபர் திசாநாயகதான்.

குடியிருப்புகள் எதுவும் இல்லாத, புதர்கள் அடர்ந்த தரிசு நிலமான கச்சத் தீவில், புனித அந்தோணியார் ஆலயமும், கடற்படை அலுவலகமும் மட்டுமே உள்ளன. குடிக்க தண்ணீர்கூட கிடையாது. சுமார் 1.15 சதுர கி.மீ. பரப்பளவு உள்ள தீவின் மீதான இலங்கையின் உரிமை மற்றும் கட்டுப்பாட்டை உறுதி செய்வதுதான் அவரது பயணத்தின் நோக்கம்.

"அந்நிய ஆக்கிரமிப்புகளிலிருந்து நமது கடல் பகுதியைப் பாதுகாக்க வேண்டும். நமது மீனவர்களுக்கு கச்சத் தீவு மிகவும் முக்கியமான ஒரு பகுதி. கச்சத் தீவைப் பற்றிய விவாதம் (மீண்டும்) ஏற்பட்டுள்ளது. நமது நிலம், தீவு, கடல் பகுதி மற்றும் வான் பகுதியை எதிர்காலச் சந்ததியினருக்காக பாதுகாக்க வேண்டியது எனது கடமை'' என்று கச்சத் தீவில் அவருடன் ஆலோசனை நடத்திய அமைச்சர்கள் மற்றும் கடற்படை அதிகாரிகளிடம் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார் இலங்கை அதிபர்.

இலங்கையின் சுற்றுலா வழித்தடத்தில் இல்லாத நெடுந் தீவிலிருந்து சுமார் 14.5 கி.மீ. தொலைவில் உள்ள கச்சத் தீவை சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய உள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதற்கு யாழ் கத்தோலிக்க மறை மாவட்ட குருக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ராமேசுவரத்திலிருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ள கச்சத் தீவின் புனித அந்தோணியார் ஆலயத்துக்கு ஆண்டுதோறும் கிறிஸ்தவர்களின் தவக்காலமான பிப்ரவரி-மார்ச்சில் இரு நாட்டு மீனவர்களும் சென்று வழிபட்டுத் திரும்புவது வழக்கம்.

கச்சத் தீவை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தினால் ஆலயத்தின் புனிதத்தன்மை பாதிக்கும் என்பது கிறிஸ்தவ குருமார்களின் எதிர்ப்புக்குக் காரணம்.

எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத தீவை, சுற்றுலாத் தலமாக மாற்றுவது எளிதல்ல என்பது இலங்கைக்குத் தெரியும். ஆனால், கச்சத்தீவின் மீது இந்தியா உரிமை கோருவதை தடுப்பதற்கு தனது நேரடி ஆதிக்கம் தேவை என்று கருதியது இலங்கை.

அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முன்னோட்டப் பிரசாரம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமியும், மதுரையில் கடந்த மாதம் மாநாடு நடத்திய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய்யும் தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண கச்சத் தீவை மீட்க வேண்டும் என இந்திய அரசை வலியுறுத்தி இருக்கிறார்கள். கடந்த ஏப்ரலில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் திமுக அரசு இது குறித்த தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது. கச்சத் தீவு மீட்பை வலியுறுத்தி தமிழக முதல்வரும் பிரதமருக்குக் கடிதம் எழுதி வருகிறார்.

கச்சத் தீவு என்பது இந்தியா, இலங்கை ஆகிய இரண்டு நாடுகளுக்கும் வியூக முக்கியத்துவம் வாய்ந்த இடம். கச்சத் தீவை இலங்கை அரசுக்கு கொடுத்த பின்பு தமிழக மீனவர்கள் அந்தப் பகுதிக்கு சென்று மீன் பிடிக்க முடிவதில்லை. இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி இருக்கிறது. எனவேதான் கச்சத் தீவை இந்தியா மீட்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பி வருகின்றன.

இலங்கை அதிபராகப் பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக கடந்த ஆண்டு டிசம்பரில் திசாநாயக இந்தியா வந்தபோதும், இந்த ஆண்டு ஏப்ரலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை சென்றபோதும் தமிழக மீனவர்கள் பிரச்னை பற்றிப் பேசப்பட்டதே தவிர, கச்சத் தீவு குறித்துப் பேசவில்லை. கச்சத் தீவு மீட்பு என்பது இரு நாட்டு ராஜீய உறவு மற்றும் சட்டச் சிக்கல் நிறைந்தது என்பதை இந்தியப் பிரதமரும், இலங்கை அதிபரும் அறிவார்கள்.

தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு கச்சத் தீவு மீட்பு மட்டுமே தீர்வைத் தராது. இங்குள்ள மீனவர்கள் பயன்படுத்தி வரும் இழுவலையால் இந்திய கடல் பகுதியில் மீன்வளம் அறவே அற்றுப்போய் விட்டது. இலங்கையில் இழுவலை பயன்பாட்டுக்குத் தடை உள்ளதால் அந்நாட்டு கடல் பகுதியில் உள்ள மீன்வளத்தைக் குறிவைத்து தமிழக மீனவர்கள் அங்கு மீன் பிடிக்கச் செல்லும்போது பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இழுவலை பயன்பாட்டுக்குத் தீர்வு ஏற்பட்டால் மட்டுமே மீனவர்களின் பிரச்னை முடிவுக்கு வரும்.

அவ்வப்போது கச்சத் தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிரச்னைகள் ஏற்படாமல் இல்லை. இந்தியாவிலிருந்து இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் கைது செய்யப்படுவதும், சுடப்படுவதும், அவர்களது மீன்பிடிப் படகுகள் கைப்பற்றப்படுவதும் கச்சத் தீவு பகுதியில் அல்ல என்பதுதான் உண்மை.

கடல் அலையின் வண்ணமும், அளவும் அடிக்கடி மாறிக் கொண்டே இருப்பதுபோல கச்சத் தீவு பிரச்னை அடிக்கடி ஏதேனும் ஒரு வடிவத்தில் விவாதப் பொருளாகிக் கொண்டே இருப்பதற்கு விரைவில் நல்லதொரு தீர்வுகாண வேண்டியது இரு நாட்டு அரசுகளின் கடமை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com