
உயிரினங்கள் வாழ்வதற்கு நீரும் காற்றும் எந்த அளவுக்கு இன்றியமையாததோ, அதைப் போலவே மண்ணும் அத்தியாவசியமானது. உணவுப் பொருள்களின் உற்பத்தி என்பதும், உயிரினங்கள் வாழ்வதும் மண் சார்ந்தது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. மண் எந்த அளவுக்கு இன்றியமையாததோ, அதைப் போலவே மணலும் தவிர்க்க முடியாத மனித இனத்தின் அவசியம் என்பதை மறுப்பவர் யார்?
21-ஆம் நூற்றாண்டில் சமூகத்தின் அடிப்படைத் தேவைகளான கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றில் நடத்தப்படும் கொள்ளை சட்ட அங்கீகாரத்துடன் மரியாதை பெறுவதுதான் வேதனை. அதைவிட
முக்கியமானது காடுகளும் மணலும் சட்டவிரோதமாகவும், அளவுக்கு அதிகமாகவும் கொள்ளையடிக்கப்படுவதும், அதை ஆட்சியாளர்களே தங்களது சுயலாபத்துக்காக அனுமதிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
வானளாவிய அடுக்குமாடி கட்டடங்களிலிருந்து மைக்ரோ சிப்ஸ் வரையில் மணல் தேவை. நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 50 பில்லியன் டன் மணல் உலகளாவிய அளவில் மனித இனத்துக்குத் தேவைப்படுகிறது. தண்ணீருக்கு அடுத்தபடியாக மிக அதிகமாக மனித இனத்தால் பயன்படுத்தப்படும் இயற்கை வளம் மணலாகத்தான் இருக்கும். விலை மலிவாக இருப்பதாலும், தாராளமாகக் கிடைப்பதாலும் மணல் கொள்ளை பெரும்பாலும் பொதுவெளியில் கவனம் பெறுவதில்லை.
பூமிப்பந்தில் உள்ள நிலப்பரப்பில் பெரிதும் சிறிதுமாக நதிகளும் ஆறுகளும் பல்லாயிரக்கணக்கான மைல் தொலைவு ஓடி கடலில் கலக்கின்றன. ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமல்லாமல்
பரவலாக நடைபெறுவதால் மணல் என்கிற இயற்கை வளம் அடுத்த தலைமுறைக்குக் கிடைக்காமல் கொள்ளை போவது பார்வையில் படுவதில்லை.
கடந்த மாதம் உச்சநீதிமன்றம் வரவேற்புக்குரிய தீர்ப்பு ஒன்றை இது தொடர்பாக வழங்கியிருப்பது நாடு தழுவிய அளவில் நடைபெறும் ஆற்றுமணல் கொள்ளை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மணல் அள்ளுவதற்கு 2022-இல் அந்த மாநில அரசு அனுமதி வழங்கியது. அந்த ஆணையை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரத்து செய்து உத்தரவிட்டது. அந்த உத்தரவின் மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பை நதிகள் குறித்தும், ஆற்றுமணல் குறித்தும், வருங்காலச் சந்ததியினரின் நலன் குறித்தும் அக்கறை உள்ள அனைவரும் பாராட்டி மகிழ்வார்கள்.
ஆறுகளிலும், நதிப்படுகைகளிலும் முறையான, அறிவியல் ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமல் மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்பதுதான் உச்சநீதிமன்றத் தீர்ப்பு.
அள்ளப்படும் மணல் எந்த அளவுக்கு, எவ்வளவு நாள்களில் புதிதாக உருவாகும் என்பது குறித்த முறையான ஆய்வு கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுதான் உச்சநீதிமன்றத்தின் வரவேற்புக்குரிய தீர்ப்பு.
சட்டவிரோதமாகவும், அளவுக்கு அதிகமாகவும் மணல் அள்ளப்படுவது இந்தியாவில் மட்டுமே என்று நினைத்துவிட வேண்டாம். ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் பல வரைமுறையில்லாமல் சட்டவிரோதமாகவும், அனுமதி இல்லாமலும் மணல் அள்ளப்படுவதை அனுமதிக்கின்றன. ஒருசில ஆப்பிரிக்க நாடுகளிலும், மலேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் நதிகளில் அளவுக்கு அதிகமாக மணல் உற்பத்தியாகிறது என்பதும், அந்த நாடுகள் மணலை ஏற்றுமதி செய்கின்றன என்பதும் பரவலாகத் தெரியாத உண்மை.
கேரள மாநிலத்தில் ஆறுகளிலிருந்து மணல் அள்ளுவதற்கு கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்படுகின்றன. தமிழக ஆறுகளிலிருந்து அள்ளப்படும் மணல் கேரளத்துக்கு நூற்றுக்கணக்கான லாரிகளில் கடத்தப்படுவதும் கொள்ளை லாபத்துக்கு அங்கே விற்கப்படுவதும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்போல சட்டவிரோதமாக நடந்து கொண்டிருக்கிறது. இதுபோல ஒருசில மாநிலங்கள் அண்டை மாநில வளங்களைச் சுரண்டுவதும், வேறுசில மாநிலங்கள் மணல் கொள்ளையை ஆட்சியாளர்களின் சுயநலத்துக்காகப் பாராமுகமாக இருந்து அனுமதிப்பதும் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெறுகிறது.
நதிகளிலும் ஆறுகளிலும் இயற்கையாக உருவாகும் மணல் அந்தந்தப் பகுதியில் நிலத்தடி நீர் அதிகரிக்க உதவுகிறது. மணல் அள்ளப்படும்போது அதன் தொடர் விளைவாக மீன்கள் வாழ்வதற்கான சூழல் அகன்று, மீன்பிடித் தொழில் பாதிக்கப்படுகிறது. நிலத்தடி நீர் சேகரிப்பு குறையும்போது தண்ணீரில் உப்பு கலந்து குடிநீர்த் தட்டுப்பாட்டை உருவாக்குகிறது. சூழலியலுக்கும் அதனால் பாதிப்பு நேர்கிறது.
ஆறுகளில் மணல் படிவம் குறையும்போது அதைச் சுற்றியுள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளும் குறைகின்றன. அதன் காரணமாக அதிகரித்த பருவமழைக் காலத்தில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
ஏற்பட்டு, அவை பாயும் பகுதிகளில் பேரழிவுகள் ஏற்படுகின்றன. ஆற்றுப்படுகையில் உள்ள நிலங்கள், மரங்கள், கட்டடங்கள், தோட்டங்கள், சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவற்றுக்குப் பாதிப்பு ஏற்படுவதன் பின்னணியில் மணல் சுரண்டி எடுக்கப்படுவது இருப்பதை நாம் உணர வேண்டும்.
சட்டவிரோதமான மணல் அள்ளுதல் தடை செய்யப்பட்டாலும்கூட எந்தவித அச்சமோ, குற்ற உணர்வோ இல்லாமல் மணல் கொள்ளையர்கள் மண்ணுக்கும், மண்ணில் பாயும் நதிகளுக்கும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தத் தயங்குவதில்லை.
பாலைவனத்திலும், கடற்கரைகளிலும் காணப்படும் மணல் எதற்கும் பயன்படாது. ஆனால், ஆற்றுமணல் இல்லாமல் போனால் உலகில் மனித இனம் நீண்ட காலம் தொடர முடியாது. மனித இனத்தின் அடிப்படைத் தேவை பொன் அல்ல, மண்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.