தத்தளிப்பில் நேபாளம்!

நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடங்கிய போராட்டம், ஆட்சியாளர்களின் ஊழலுக்கு எதிரான வன்முறைப் போராட்டமாக மாறியதைப் பற்றி...
போராட்டக் களத்தில்..!
போராட்டக் களத்தில்..!(படம் | ஏபி)
Published on
Updated on
2 min read

நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மாணவர்கள், இளைஞர்கள் தொடங்கிய போராட்டம், பின்னர் ஆட்சியாளர்களின் ஊழலுக்கு எதிரான வன்முறைப் போராட்டமாக மாறியதையும், அரசுக் கட்டடங்கள், நாடாளுமன்றம் தீக்கிரையாக்கப்பட்டதையும், பிரதமரின் இல்லம், முன்னாள் பிரதமர்கள், அமைச்சர்களின் இல்லங்களும் சூறையாடப்பட்டதையும் உலக நாடுகள் அதிர்ச்சியுடன் பார்த்தன.

போராட்டக்காரர்களின் வன்முறையில் உச்சநீதிமன்றக் கட்டடமும் தப்பவில்லை. யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், எக்ஸ் உள்பட 26 சமூக வலைதள செயலிகளுக்கு கடந்த செப். 4-ஆம் தேதி நேபாள அரசு தடை விதித்தது. மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு மேற்கூறிய செயலிகள் பதிவு செய்யப்படாததால், அவற்றைத் தடை செய்வதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கி சமூக வலைதளங்களைத் தணிக்கைக்கு உள்படுத்தவே இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளதாக தகவல் பரவி அரசுக்கு எதிரான போராட்டமாக உருவெடுத்தது.

அரசின் தடைக்கு எதிராக ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சீருடையுடன் கடந்த 8 ஆம் தேதி வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். தலைநகர் காத்மாண்டு உள்பட பல்வேறு நகரங்களில் பெருந்திரளான இளைஞர்கள் அரசுக்கு எதிரான பதாகைகளை கைகளில் ஏந்தியும் முழக்கமிட்டும் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். போராட்டத்துக்கு 'ஜென் இஸட்' (1997 முதல் 2012 வரை பிறந்தவர்கள்) தலைமுறையினரின் போராட்டம் எனப் பெயர் சூட்டப்பட்டது.

போராட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 19 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது. சமூக ஊடகத் தடைக்கு எதிரான போராட்டம் ஆட்சியாளர்களின் ஊழலுக்கு எதிரானதாக வலுப்பெற்று நாடே கலவர பூமியானது. அண்மைக்காலங்களில் இலங்கையிலும், வங்கதேசத்திலும் நடைபெற்ற வன்முறைப் போராட்டத்தை நேபாள போராட்டமும் நினைவுபடுத்தியது.

உலகின் கடைசி ஹிந்து மன்னராட்சி நேபாளத்தில் நடைபெற்று வந்தது. 1996-இல் அரசுக்கு எதிராக பிரசண்டா, பாபுராம் பட்டாராய் ஆகியோர் தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) வன்முறைப் போராட்டத்தை தொடங்கியது.

'ஜன அந்தோலன்' (மக்கள் போராட்டம்) என அழைக்கப்பட்ட அந்தப் போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அரசு அடக்கியது. மாவோயிஸ்டுகளுக்கும், அரசுக்கும் இடையே நடைபெற்ற உள்நாட்டுப் போரில் 17,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

2006 ஏப்ரலில் மாவோயிஸ்டுகளும் அரசியல் கட்சிகளும் இணைந்து இரண்டாவது கட்ட ஜன அந்தோலன் போராட்டத்தை முன்னெடுத்தனர். லட்சக்கணக்கான மக்களை வீதியில் திரட்டி, தொடர்ச்சியாக நடத்தப்பட்ட போராட்டத்தின் முன் மன்னர் பணிய வேண்டிய நிலை ஏற்பட்டது. மன்னர் தலைமையிலான அரசுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே 2006, நவம்பரில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது.

2008-ஆம் ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு வந்தது. மன்னர் ஞானேந்திரா மாளிகையைவிட்டு வெளியேறினார். நேபாளத்தில் மக்களாட்சி தொடங்கியதிலிருந்தே ஒரு நிலையற்ற தன்மை தொடர்ந்து நிலவி வருகிறது.

நேபாளி காங்கிரஸ், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்), நேபாள கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) ஆகிய மூன்று கட்சிகள்தான் ஒவ்வொரு தேர்தலிலும் மாறி மாறி கூட்டணி வைத்துக்கொண்டு ஆட்சியில் இருந்து வந்தன. 17 ஆண்டுகளில் 14 பிரதமர்களை நேபாளம் சந்தித்திருக்கிறது. இப்போது பதவி விலகிய கே.பி.சர்மா ஓலி அதில் கடைசிப் பிரதமர்.

வேலைவாய்ப்பின்மை, ஊழல் என இந்த மூன்று கட்சிகளின் அரசுக்கு எதிராகவும் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவி வந்த நிலையில், இப்போது இளைஞர்களின் போராட்டமாக வெடித்திருக்கிறது. நேபாள போராட்டத்தை முன்னெடுத்த ஜென் இஸட் அமைப்பினர், வன்முறைக்கும் தங்கள் இயக்கத்தினருக்கும் தொடர்பு இல்லை என்று அறிவித்திருக்கிறார்கள். அண்மைக்காலமாக நேபாளத்தில் மன்னராட்சிக்கு ஆதரவாக அவ்வப்போது பெருமளவிலான போராட்டங்கள் நடைபெற்று வந்ததையும் சுட்டிக்காட்டத் தோன்றுகிறது.

பிரதமர் கே.பி.சர்மா ஓலி ராஜிநாமாவைத் தொடர்ந்து, இடைக்கால பிரதமராக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி நியமிக்கப்பட்டு பதவியேற்றிருக்கிறார். பதவியேற்றதும் அவரது தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் ராமசந்திர பௌடேல் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

2026, மார்ச் 5-ஆம் தேதி நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மக்களின் போராட்டத்தை மட்டும் காரணமாக வைத்து நாடாளுமன்றத்தைக் கலைப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என அரசியல் கட்சிகள் தரப்பில் கடும் கண்டனங்களும் எழுந்திருக்கின்றன.

சுமார் 30 ஆண்டுகளாக நேபாளம் நிலையான ஆட்சியும், வளர்ச்சியும் இன்றி தத்தளிக்கிறது. அடுத்த ஆண்டு மார்ச் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் இப்போது உள்ள அரசியல் கட்சிகள்தான் போட்டியிடும்.

ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த 'ஜென் இஸட்' அமைப்பினர் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைக் கைப்பற்றுவது சந்தேகம்தான். மன்னராட்சியும் இல்லாமல், மக்களாட்சியும் முறையாக அமையாமல் ஊழலாட்சியாளரிடம் சிக்கித் தவிக்கும் நேபாளத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருப்பது மிகப் பெரிய சோகம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com