
மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுப் பிரிவானது, கடந்த செப். 8-ஆம் தேதி வெளியிட்டுள்ள அலுவலகக் குறிப்பாணையில், முக்கியமான, திட்டமுறை சார்ந்த மற்றும் அணு தாதுக்கள் சுரங்கங்களைத் தோண்ட இனிமேல் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்த வேண்டியதில்லை என்று அறிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சகமும், அணுசக்தித் துறையும் கடந்த மாதம் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் இந்த விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1997-இல் திருத்தப்பட்ட 1994-ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பின்படி, நாட்டின் எந்த ஒரு பகுதியில் புதிய வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டாலும் அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து மதிப்பீட்டு அறிக்கையைத் தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மதிப்பீட்டு அறிக்கைக்கான தரவுகளில் ஒன்றாக சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்களின் கருத்துக்கேட்பு முக்கியம் எனக் கூறப்பட்டிருந்தது.
அதுமட்டுமின்றி, 2006-ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பாணையில் கருத்துக்கேட்பு மேலும் வலுப்படுத்தப்பட்டது. இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தத்தின்படி மூன்று வகையான கனிம சுரங்கத் திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உலகின் இன்றைய சூழ்நிலையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு தேவையான ஒன்றாக இருந்தாலும், அந்த விலக்கை கவனத்துடன் கையாள வேண்டியது அவசியம்.
வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழலை சமன்படுத்தும் நோக்கில் இதுவரை நிலக்கரிச் சுரங்கங்கள், பெரிய தொழிற்சாலைகள், அணைகள் போன்ற திட்டங்களைத் தொடங்கும் முன்பு அவை சுற்றுச்சூழலிலும், உள்ளூர் மக்களிடையேயும் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து மத்திய அரசும், சிறிய அளவிலான திட்டங்களாக இருந்தால் அவற்றின் தாக்கம் குறித்து மாநில அரசும் மதிப்பீடு செய்து வந்தன. இப்போது எந்தத் திட்டமாக இருந்தாலும் அதை மத்திய அரசே மதிப்பீடு செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால், இனிமேல் மாநில அரசுகள் அந்தத் திட்டங்களைத் தடுக்க முடியாது.
ராணுவ பாதுகாப்புக் கருவிகளில் பயன்படுத்தப்படும் லித்தி யம், கோபால்ட், கிராபைட், நிக்கல், டங்ஸ்டன் உள்ளிட்ட கனிமங்களும், அணுசக்தி திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் தோரியம், யுரேனியம் உள்ளிட்ட 30 கனிமங்களும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்கு முக்கியமானவை என்பதால் இந்த விதிவிலக்கில் நியாயம் இல்லாமல் இல்லை.
மத்திய அமைச்சகத்தின் இந்தக் குறிப்பாணை சட்ட ரீதியாகச் செல்லுமா என்ற கேள்வி எழுகிறது. காரணம், கடந்த காலங்களில் இதுபோன்று வெளியிடப்பட்ட குறிப்பாணைகளை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது. அதுமட்டுமல்லாது, அலுவலகக் குறிப்பாணைகள் போன்ற நிர்வாக அறிவுறுத்தல்கள் மூலம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு கட்டமைப்பில் திருத்தங்களைக் கொண்டுவர முடியாது என உச்சநீதிமன்றமும் தெரிவித்துள்ளது.
இந்தக் கனிமங்களைத் தோண்டி எடுப்பதிலும், அவற்றை சுத்தப்படுத்தி சந்தைப்படுத்துவதிலும் சீனா முன்னிலையில் உள்ளது. அங்கு இந்தக் கனிமங்களின் இருப்பு அதிகமாக இருந்தாலும் அவற்றைச் சுத்தப்படுத்துதல் மற்றும் விநியோகத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதற்காக ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள சுரங்கங்களிலும் முதலீடு செய்து வருகிறது. முக்கியமான, திட்டமுறை மற்றும் அணு தாதுக்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதன் மூலம் உலகையே தனது சொல்படி ஆட்டிவைக்கமுடியும் என சீனா நம்புகிறது. அமெரிக்காவும் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
அடிக்கடி மாறிவரும் உலகச் சூழலில் முக்கியமான கனிமத் தேவைக்கு இறக்குமதியை நம்பி இல்லாமல் சுயசார்பு மட்டுமே நீடித்து நிலைக்கும் வளர்ச்சிக்கான அடித்தளம் என்பதால் இந்தியா அத்தகைய முயற்சிகளில் இறங்கி இருப்பதன் முதல் நடவடிக்கை தான் இந்த விதிவிலக்கு. உள்நாட்டில் உள்ள முக்கியமான கனிமங்களின் இருப்பைக் கண்டறிந்து அவற்றை நம் தேவைக்குப் பயன்படுத்திக் கொண்டால்தான் மற்றவர்களைச் சார்ந்து இருப்பதிலிருந்து விடுபட முடியும்.
நாட்டில் எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதற்குப் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். வளர்ச்சித் திட்டங்கள் எனக் கூறப்பட்டாலும் உள்ளூர் மக்களின் வாழ்வாதார இழப்பு, இடப்பெயர்ச்சி, சுற்றுச்சூழல் பாதிப்பு, விதிமுறை மீறல் என பல்வேறு கசப்பான அனுபவங்கள் காரணமாகத்தான் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடுதழுவிய அளவில் இதுதான் நிலை.
பொதுமக்களின் கருத்துக் கேட்பு அவசியமில்லை என்ற அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமருக்குத் தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். விதிவிலக்கு அவசியம் என்றபோதிலும் விதிமுறைகளை மீறாமலும், உள்ளூர் மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாமலும் திட்டங்களை செயல்படுத்தினால்தான் பிரச்னைகள் தவிர்க்கப்படும். உள்ளூர் மக்களின் ஆதரவில்லாமல் செயல்படுத்தப்படும் திட்டங்கள் வெற்றிபெறுவதில்லை என்பதுதான் கடந்த கால அனுபவம். கண்ணை விற்று சித்திரம் வாங்கக்கூடாது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.