
சமாதானத்தின் அடையாளமாகக் கருதப்படும் புறாக்கள் பிரச்னைக்குரியவையாக மாறியிருக்கின்றன. உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மும்பை பெருநகர மாநகராட்சி, புறாக்களுக்கு தானியங்கள் வழங்கும் "கபூத்தர்கானா' என்று அழைக்கப்படும் 51 இடங்களை மூடியிருக்கிறது.
ஆங்காங்கே புறாக்களுக்கு கூடு அமைத்து அவற்றின் தாகத்தைத் தீர்க்க தண்ணீர்த் தொட்டிகளை வைக்கும் வழக்கம் இந்தியா முழுவதும் பரவலாகவே இருந்து வந்திருக்கிறது. அதிக வெப்பமுள்ள வட மாநிலங்களில், குறிப்பாக வீடுகளின் மாடங்களில், மனிதாபிமான அடிப்படையில் புறாக்களுக்கு பாதுகாப்பான உறைவிடங்களை வழங்குவதை மக்கள் தங்கள் கடமையாகவே கருதினர். தென்னிந்தியாவிலும் சரி, கோயில்களிலும், மாளிகைகளிலும் மாடப்புறாக்கள் நூற்றுக்கணக்கில் வசித்து வருவது தொன்றுதொட்டு நிலவில் உள்ள வழக்கம்.
"கபூத்தர்கானா' என்பது புறாக்களுக்கு மக்கள் உணவளிப்பதற்காக ஆங்காங்கே ஒதுக்கப்படும் பகுதி. மும்பை, தில்லி, ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல நகரங்களில் கபூத்தர்கானாக்கள் காணப்படுகின்றன. இவை மட்டுமல்லாமல் மசூதிகள், கோயில்கள், தேவாலயங்களிலும் புறாக்கள் பாதுகாப்பான உறைவிடங்களை அமைத்துக் கொள்கின்றன. இவையெல்லாம் இப்போது சுகாதாரப் பிரச்னைக்குரியதாக மாறியிருக்கிறது.
புறாக்களுக்குத் தானியங்கள் வழங்குவது என்பதை வெறும் சடங்காக மக்கள் கருதவில்லை. புறாவை அகிம்சையின் அடையாளமாகக் கருதினர். புறாக்களுக்கு உணவு, குடிநீர் வழங்குவதை ஆழ்ந்த நம்பிக்கையின்பாற்பட்ட செயல்பாடாக ஹிந்துக்கள் மட்டுமல்ல, பௌத்தர்கள், ஜெயினர்களும், கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும்கூட கருதினர்.
புறாவுக்காகத் தன்னுடைய சதையை அறுத்துக் கொடுக்க முற்பட்ட சிபிச் சக்கரவர்த்தியின் செயல்பாடு நீதிக்கு எடுத்துக்காட்டாகப் போற்றப்பட்டது. போர்க்காலங்களில் மன்னர்கள் புறாக்களின் மூலம் கடிதங்களை அனுப்பி புறாவை சமாதானத் தூதுக்கு பயன்படுத்தினர். சமூகத்தின் இன்றியமையாத அங்கமாகவே புறாக்கள் கருதப்பட்டன.
நகரத்தில் பரவலாக மக்கள் கூடும் பகுதிகளில் புறாக்களுக்கு உணவு வழங்குதல் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் பல்வேறு நோய்த் தொற்றுக்களுக்கும் காரணமாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மும்பை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து புறாக்களுக்கு தானியங்கள் வழங்குவோர் மீது மாநகராட்சி அமைப்பு வழக்குப் பதிவு செய்தது.
கபூத்தர்கானாக்கள் காவல் துறையினரால் கண்காணிக்கப்பட்டதும், தடையை மீறி புறாக்களுக்குத் தானியங்கள் வழங்கியவர்களுக்கு அபராதம் விதித்ததும் மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பை எழுப்பியது. அதைத் தொடர்ந்து சில கட்டுப்பாடுகளுடன் தானியம் வழங்க இடைக்காலமாக அரசு அனுமதித்திருக்கிறது.
இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகளாவிய அளவில் புறாக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகரித்திருப்பது புறாக்கள் வசதியாகத் தங்குவதற்கு வழிகோலியிருக்கின்றன. புறாக்களுக்குத் தானியங்கள் வழங்குவது புண்ணியச் செயல் என்கிற மக்களின் நம்பிக்கையும், புறாக்களை தங்களது உணவாக்கும் பருந்து, கழுகு போன்றவை குறைந்துவிட்டதும் அவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்கள்.
கடந்த பத்தாண்டுகளில் தில்லியில் மட்டும் புறாக்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி இருப்பதாகத் தெரிகிறது. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் புறாக்களின் இறகுகளும், எச்சங்களும் அதிகளவில் காணப்படுவதாக பிருஹன் மும்பை மாநகராட்சி தெரிவிக்கிறது. பெங்களூருவின் கப்பன் பூங்காவிலும், ஹைதராபாதின் சார்மினாரை சுற்றியுள்ள பகுதிகளிலும் புறாக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கிறது.
புறாக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு பல்வேறு பிரச்னைகளுக்கு வழிகோலுவதாகத் தெரிய வந்திருக்கிறது. நுரையீரல் பிரச்னை உள்ளவர்களும், எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களும் புறாக்கள் மூலம் பரவும் நோய்க் கிருமிகளால் (பேத்தோஜென்ஸ்) பாதிக்கப்படுகின்றனர். புறாக்களின் எச்சங்களில் காணப்படும் பூஞ்சைகள் கிரிப்டோகோகோஸிஸ், ஹிஸ்டோ பிளாஸ்மாஸிஸ் எனப்படும் நுரையீரல் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. புறாக்களின் எச்சங்கள், இறகுகள் அவை வாழும் இடங்கள் ஆகியவற்றிலிருந்து எழும் உலர்ந்த தூசுகளை சுவாசிப்பதன் மூலம் நோய்த் தொற்றுக்கள் நுரையீரலைத் தாக்கி பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
உலக சுகாதார நிறுவனம் கிரிப்டோகோகோஸிஸ் எனப்படும் புறாக்கள் மூலம் ஏற்படும் நுரையீரல் தொற்று குறித்து எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்திய நுரையீரல் கழகமும் அடுக்குமாடிக் குடியிருப்பு பால்கனிகளிலும், ஏ.சி. யூனிட்டுகளிலும் கூடுகள் அமைத்து வாழும் புறாக்கள் மூலம் நுரையீரல் பாதிப்புகள் ஏற்படுவதாக தெரிவித்திருக்கிறது.
உலகளாவிய அளவில் பல நகரங்களில் புறாக்களைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. சில நகராட்சி அமைப்புகள் பருந்துகளைப் பராமரிப்பதன் மூலம் புறாக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்கின்றன.
சிங்கப்பூரில் புறாக்களுக்கு உணவு வழங்குவது கடுமையான அபராதங்கள் மூலம் தடுக்கப்படுவதுடன், கட்டட வடிவமைப்பு புறாக்கள் கூடு கட்டுவதை தவிர்க்கும் வகையில் அமைக்கப்படுகின்றன. வெனிஸ் நகரத்தில் 2008 முதல் புறாக்களுக்கு தானியம் வழங்குதல் தடை செய்யப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே நகரங்களில் காற்று மாசின் அளவு அதிகரித்துள்ளது. பரவும், பரவாத நுரையீரல் தொற்றுக்கள் அதிகரித்திருக்கின்றன. புறாக்களின் எண்ணிக்கை அதிகரிப்பது நகர்ப்புற சுகாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவதை மக்கள் உணர வேண்டும். மனிதாபிமானம் தேவைதான். மனித இனத்தைப் பாதிக்காத வரை...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.