
அண்மைக்காலமாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் புழக்கம், கடத்தல் அதிகரித்திருப்பதாக பல்வேறு தரப்பிலிருந்தும் தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகிறது. அதை மெய்ப்பிக்கும் வகையில் நாடு முழுவதும் ஆங்காங்கே தொடர்ந்து போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்படுவது குறித்து அன்றாடம் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
போதைப் பொருள்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், போதைப் பொருள்கள் விற்பனையைக் கண்காணித்து பறிமுதல் செய்யவும் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய, மாநில அரசுகள் தெரிவித்து வருகின்றன. இந்தச் சூழலில், சென்னை சூளைமேடு பகுதியில் உயர் ரக மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்றதாக, பொறியாளர்கள் 4 பேர் அண்மையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். வேலை கிடைக்காததால் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இதேபோல், சென்னை பகுதியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி விடுதியில் சில மாதங்களுக்கு முன்பு போலீஸார் நடத்திய திடீர் சோதனையில் பெருமளவில் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களில் சிலர், போதைப் பொருள்களைப் பதுக்கிவைத்து மாணவர்களுக்கும் வெளிநபர்களுக்கும் விற்றதாக விசாரணையில் தெரியவந்தது.
சட்ட விரோதம் எனத் தெரிந்திருந்தும் பொறியாளர்களும், மாணவர்களும் இந்தச் செயலில் ஈடுபட்டதை இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. வேலை கிடைக்காததால் போதைப் பொருள்களை விற்பனை செய்தோம் என்று பொறியாளர்கள் கூறுவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே அவர்களுடைய நோக்கமாக இருந்திருக்க முடியும்.
பொறியியல் கல்வியைப் பொருத்தவரை, இந்தியாவில் ஆண்டுதோறும் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பொறியியல் படிப்பு முடித்து வெளிவருவதாக அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. அவர்களில் திறன் அடிப்படையில் 10 % பேர் மட்டுமே உரிய வேலைவாய்ப்பு பெறுவதாகவும் அந்தத் தரவுகள் குறிப்பிடுகின்றன. பலர் தொடர்ந்து வேலை தேடுபவர்களாகவே இருந்து வருகின்றனர். ஏதாவது ஒரு வழியில் பணம் சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகும் அத்தகையவர்களுக்குத் தூண்டில் போடுகிறது போதைப் பொருள் கடத்தல் கும்பல்.
வேலை தேடுபவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு பணத்தாசை காட்டும் போதைப் பொருள் கடத்தல் கும்பல், அவர்களை மூளைச் சலவை செய்து, தங்கள் வலையில் சிக்க வைக்கிறது. அவ்வாறு சிக்குபவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை வாங்கி விற்கத் தொடங்குகிறார்கள்.
பெருகிவரும் மக்கள்தொகை, தொழில்நுட்ப மாற்றங்கள், திறமையின்மை, வேலை தேடும் செயல்முறையில் உள்ள சில தடங்கல்கள் போன்றவை வேலையின்மைக்கு முக்கியக் காரணங்களாக கூறப்படுகின்றன. இப்பிரச்னைக்குத் தீர்வு காண, புதிய தொழில்முனைவோரை ஊக்குவித்தல், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்குதல், கல்வி முறையில் தொழில்நுட்பப் பயிற்சிகளை மேம்படுத்துதல், விவசாயம் அல்லாத துறைகளில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது போன்றவை அவசியம் என வல்லுநர்கள் வலியுறுத்துகிறார்கள்.
பல்வேறு துறைகளிலும் வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் வகையில் திட்டங்களை வகுத்து மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. அதன் அடிப்படையில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் திறன்சார்ந்த பாடத்திட்டத்தை கொண்டுவரும் வகையில், அதை தேசிய கல்விக் கொள்கையில் சேர்க்க அரசு பரிசீலித்து வருவதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியை வேகப்படுத்தி, வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை அடையும் முனைப்புடன் மத்திய அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை, கடந்த 2024-25ஆம் ஆண்டில் மட்டும் மாநிலத்தில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்கள் வாயிலாக சுமார் 7 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருப்பதாக புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. அத்துடன், மாநிலத்தில் தொழில் வளத்தைப் பெருக்கும் வகையில், பல்வேறு நிறுவனங்கள் தொழில் தொடங்க தொடர்ந்து அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடிய சூழலை அரசு உருவாக்கி வருகிறது.
படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை என்று உயர் கல்வி கற்றவர்கள் காலம் கடத்திக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. வேலைக்கான போட்டித் தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றி பெறும் வகையில், கூடுதல் தகுதி, திறமைகளை வளர்த்துக்கொள்ள முன்வர வேண்டும். சுயதொழில் செய்வது குறித்தும்சிந்திக்க வேண்டும்.
போதைப் பொருள்களின் பயன்பாடு என்பது கல்லூரி அளவில் மட்டுமல்லாமல், பள்ளி மாணவர்கள் இடையேயும் அதிவேகமாக பரவி வருவது கவலையை ஏற்படுத்துகிறது. தமிழகத்திலும் கேரளத்திலும் போதைப் பொருள்கள் பயன்பாடு அண்மைக்காலமாக அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சமூக அளவிலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம்தான் இந்தப்பிரச்னையை எதிர்கொள்ள முடியும்.
கேரள அரசின் கல்வித் துறையும் சுகாதாரத் துறையும் போதைப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது என்பதை அங்கீகரித்து விழிப்புணர்வு பிரசாரம் நடத்தி வருகின்றன. மலையாளஊடகங்களும் ஒன்றிணைந்து அதற்கு ஆதரவு தெரிவிக்கின்றன. தமிழ்நாடும் உன்னிப்புடன் களமிறங்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.