அச்சுறுத்தல் அல்ல, தலைவலி!
ஏஎன்ஐ

அச்சுறுத்தல் அல்ல, தலைவலி!

சவூதி-பாகிஸ்தான் ஒப்பந்தம் குறித்துக் கவலைப்பட வேண்டியது அமெரிக்காதான்.
Published on

அமெரிக்காவின் நெருக்கமான நட்பு நாடுளுக்கேகூட அதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி இருக்கிறது என்பதன் அடையாளம்தான் பாகிஸ்தானுடன் சவூதி அரேபியா அண்மையில் மேற்கொண்டிருக்கும் பாதுகாப்பு ஒப்பந்தம். பாகிஸ்தானுக்கும் சவூதி அரேபியாவுக்குமிடையே ஏற்கெனவே ராணுவ ரீதியாக நட்புறவு நிலவி வந்தாலும்கூட இந்த ஒப்பந்தம் கையொப்பமாகி இருக்கும் நேரமும், சூழலும், பின்னணியும் அதன் முக்கியத்துவத்தை அதிகரிக்கின்றன.

செப்டம்பா் 9-ஆம் தேதி கத்தாா் தலைநகா் தோஹாவில் பேச்சுவாா்த்தைகளுக்காக காத்திருந்த ஹமாஸ் பயங்கரவாத குழுத் தலைவா்கள் தங்கி இருந்த கட்டடத்தைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வெளித் தாக்குதல் அனைத்து அரபு நாடுகளையும் திடுக்கிடவைத்தது. உடனடியாக தோஹாவில் அரபு-இஸ்லாமிக் மாநாட்டைக் கூட்டினாா் கத்தாா் ஷேக். இஸ்லாமிய நாடு என்பதால் பாகிஸ்தானும் பங்குபெற்றது.

அந்த மாநாட்டில் கலந்துகொண்ட சவூதி அரேபியாவின் இளவரசரும் பிரதமருமான முஹம்மது பின் சல்மான் பாகிஸ்தான், ஈரான், இராக், துருக்கி உள்ளிட்ட வலிமையான ராணுவம் உள்ள நாடுகளின் தலைவா்களைச் சந்தித்து கலந்தாலோசித்தாா். அதன் நீட்சியாகத்தான் செப்டம்பா் 17-ஆம் தேதி சவூதி தலைநகா் ரியாத்தில் பாகிஸ்தானுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் கையொப்பமானது.

இந்த ஒப்பந்தத்தை இந்தியாவுக்கான அச்சுறுத்தல் என்று பாா்க்க வேண்டிய அவசியம் இல்லை. சவூதி-பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தத்தை அரபு நாடுகள் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் காப்பீடு என்றுதான் பாா்க்க வேண்டும். அரபு நாடுகள் நீண்ட காலமாகவே தங்களது பாதுகாப்புக்கு அமெரிக்காவைத்தான் நம்பி இருக்கின்றன. சவூதி, கத்தாா், உள்ளிட்ட நாடுகளில் தனது ராணுவ வீரா்கள் மட்டுமல்லாமல், விமானப் படைத் தளங்களையும் அமைத்திருக்கிறது அமெரிக்கா. கத்தாரில் அமெரிக்காவின் மிகப் பெரிய ராணுவ விமானத் தளம் அமைந்திருந்தும் அதைப் பொருட்படுத்தாமல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருப்பது வளைகுடா நாடுகளை நிலைகுலையச் செய்ததில் வியப்பில்லை.

அமெரிக்காவின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், சவூதி அரேபியா பாகிஸ்தானுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது. எகிப்து-யேமன் மோதல் காலத்தில் இருந்து சவூதி அரேபியாவில் பாகிஸ்தான் படைகள் இருக்கின்றன. 1979-இல் மெக்காவைக் கைப்பற்றும் முயற்சியின்போது, சவூதி ராணுவத்துக்கு பாகிஸ்தானின் படைகள் உதவிக்கு அனுப்பப்பட்டன. 1982 முதல் ஏற்கெனவே இரு தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் சவூதி-பாகிஸ்தான் இடையே இருந்து வருகிறது. பாகிஸ்தானின் அணு ஆயுதத் திட்டத்துக்கு நிதியுதவி அளித்து உதவியதேகூட சவூதி அரேபியாதான்.

எந்த அளவுக்கு பாகிஸ்தானால் சவூதி அரேபியாவுக்கும், ஏனைய வளைகுடா நாடுகளுக்கும் ராணுவ ரீதியாக உதவ முடியும் என்கிற கேள்விக்கு உடனடியாகப் பதிலளித்து விடலாம். உள்நாட்டுக் குழப்பத்திலும், பொருளாதார நெருக்கடியாலும் இருக்கும் பாகிஸ்தான் ‘அணுகுண்டு அச்சுறுத்தல்’ விடுக்க முடியமே தவிர செயலில் இறங்க முடியாது.

அதே நேரத்தில், இந்த ஒப்பந்தத்தைக் காரணமாக வைத்து சவூதி அரேபியாவின் நிதியுதவியுடன் அமெரிக்காவில் இருந்து ராணுவத் தளவாடங்களை பாகிஸ்தான் வாங்க முடியும். சவூதிக்கும் சீனாவுக்கும் பாலமாக இருந்து, வளைகுடா நாடுகளில் சீனா தடம் பதிக்க வழிகோல முடியும்.

இந்தியாவுக்கு இந்த ஒப்பந்தத்தால் பாதிப்பு எதுவுமே இருக்காது என்று சொல்லிவிட முடியாது. சவூதியின் நிதியுதவியால் பெற்ற ஆயுதங்களுடன் எல்லையில் பாகிஸ்தான் தொந்தரவு தர முடியும்; தான் வலிமையாக இருப்பது போன்ற தோற்றத்தை அது உருவாக்க முடியும் . பிற வளைகுடா நாடுகளுடன் இதுபோன்ற ஒப்பந்தத்தை ஏற்படுத்தித் தன்னை வலிமையான சக்தியாக பாகிஸ்தான் விளம்பரப்படுத்திக் கொள்ளமுடியும்.

இந்த ஒப்பந்தத்தால் இந்தியா-சவூதி உறவில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டு விடாது. சவூதியின் இரண்டாவது பெரிய வா்த்தகக் கூட்டாளி இந்தியா என்றால், சவூதிதான் இந்தியாவின் ஐந்தாவது பெரிய வா்த்தகக் கூட்டாளி. 2023-24 -இல் சவூதி-இந்தியா இடையேயான வா்த்தகம் 42.98 பில்லியன் டாலா். இந்திய ஏற்றுமதி 11.56 பில்லியன் டாலா் என்றால், சவூதியிலிருந்தான இறக்குமதி 31.42 பில்லியன் டாலா். இந்தியாவில் மிக அதிகமாக முதலீடு செய்திருக்கும் சவூதி அரேபியாவில் 27 லட்சத்துக்கும் அதிகமான இந்தியா்கள் பணிபுரிகிறாா்கள்.

ஜம்மு-காஷ்மீரில் சட்டப் பிரிவான 370 அகற்றப்பட்டபோது, சவூதி அரேபியா அதை வன்மையாகக் கண்டிக்கவில்லை. ஏப்ரல் 22 பஹல்காம் தாக்குதலின்போது பிரதமா் மோடி சவூதியில்தான் இருந்தாா். அந்த பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்த முதல் நாடே சவூதிதான். முன்னறிவிப்பு இல்லாமல் ஆபரேஷன் சிந்தூரின்போது சவூதி இளவரசா் இந்தியாவுக்கு ஓா் அமைச்சரை அனுப்பிவைத்தது வெளியில் சொல்லப்படாத ரகசியம். எல்லாவற்றுக்கும் மேலாக, பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவது குறித்து இந்திய அரசுக்கு சவூதி முன்கூட்டியே தெரிவித்திருந்தது.

சவூதி-பாகிஸ்தான் ஒப்பந்தம் குறித்துக் கவலைப்பட வேண்டியது அமெரிக்காதான். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பொருளாதார வலிமையும், தொழில்நுட்ப மேன்மையும், ராணுவ சக்தியுமாக உலகில் வலம் வந்த அமெரிக்கா, அதிபா் டிரம்ப்பின் வருகைக்குப் பிறகு தனது நம்பகத்தன்மையை இழந்து வருகிறது. அமெரிக்காவின் வீழ்ச்சியில் சீனாவும் வளா்ச்சி அடையக்கூடும்; அதுதான் இந்தியாவுக்கான மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும்; சவூதி-பாக் ஒப்பந்தம் அல்ல!

Summary

It is America that should be concerned about the Saudi-Pakistan deal

X
Dinamani
www.dinamani.com