
நாகபுரியில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு ஐந்தாறு இளைஞர்களை இணைத்து, பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட ஒரு சிறிய குழு, இன்று இந்தியா முழுவதும் வேர்விட்டுப் பரவி ஒட்டுமொத்த உலகமே வியந்து பார்க்கும் மிகப் பெரிய இயக்கமாக மாறி இருக்கிறது. சமுதாய, கலாசார இயக்கமான ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங் என்கிற ஆர்.எஸ்.எஸ். விஜயதசமி அன்று (அக்.2) தனது நூற்றாண்டைக் கொண்டாடுகிறது.
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங் என்கிற ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தொடங்கியவர் கேசவ பலிராம் ஹெட்கேவார் என்கிற மருத்துவர். அவர் பாலகங்காதர திலகரால் கவரப்பட்ட தேசியவாதி. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக இயங்கிய தலைமறைவு இயக்கமான அனுசீலன் சமிதி என்கிற புரட்சியாளர்களின் குழுவுடன் தொடர்புடையவர்.
நாகபுரியில் தெருவில் போகும் ஹிந்துப் பெண்களைச் சில இஸ்லாமிய இளைஞர்கள் கேலி செய்வதும், சீண்டுவதும், துன்புறுத்துவதுமாக இருந்ததுதான் ஆர்.எஸ்.எஸ். என்கிற அமைப்பு உருவாவதற்கே காரணமாக அமைந்தது. அந்தப் பெண்களின் பாதுகாப்புக்காக ஹெட்கேவார் சில இளைஞர்களைத் திரட்டினார். 1925 செப்டம்பர் 27 விஜயதசமி தினத்தன்று உருவானது அந்த இயக்கம்.
முஸ்லிம்களுக்கான தனி நாடு கோரிக்கை முகமது அலி ஜின்னாவால் எழுப்பப்பட்டதும், அதற்கு பிரிட்டிஷ் காலனிய அரசு ஆதரவு அளித்ததும், இந்தியாவின் ஒற்றுமையையும், பெரும்பான்மை ஹிந்துக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்குப் பதிலாக மகாத்மா காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் கட்சி, ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தியதும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வலுப்பெறுவதற்குக் காரணிகளாக அமைந்தன.
ஹிந்துக்கள் ஒற்றுமையில்லாமல் இருப்பதுதான், சிறுபான்மை பிரிட்டிஷார் நம்மை ஆட்சி செய்வதற்கும், முஸ்லிம்களாக மதம் மாறியவர்கள் தனி நாடு கோருவதற்கும் காரணம் என்று கருதினார் ஹெட்கேவார். படித்த, நடுத்தர வர்க்க இளைஞர்களை, ஆசிரியர்களை, அரசு ஊழியர்களைக் கவர்ந்தது அவரது கருத்து. ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இந்தியா முழுவதும் பரவத் தொடங்கியது.
இப்போது ஆர்.எஸ்.எஸ். உலகிலேயே மிகப் பெரிய இயக்கமாக மாறி இருக்கிறது. உறுப்பினர்கள் தினசரி கூடும் கிளைகளாக 73,117 ஷாகாக்கள் இந்தியாவில் இயங்குகின்றன. நாடு தழுவிய அளவில் 45,600 இடங்களில் அவை அமைந்திருக்கின்றன. ஆர்.எஸ்.எஸ். மட்டுமல்லாமல் "சங் பரிவார்' எனப்படும் அதனுடன் கொள்கை ரீதியாக இணைந்த பல அமைப்புகளும் கட்டுப்பாட்டுடன் இயங்குகின்றன.
பாரதிய ஜனதா கட்சி என்கிற அரசியல் அமைப்பு மட்டுமல்லாமல் விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், வனவாசி கல்யாண் ஆஸ்ரம் உள்ளிட்ட பல கிளை அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. "அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்' என்கிற மாணவர் அமைப்பு 45 லட்சம் உறுப்பினர்களுடன் மிகப் பெரிய மாணவர் சக்தியாகத் திகழ்கிறது. அதன் தொழிற்சங்கமான "பாரதிய மஸ்தூர் சங்' ஒரு கோடி உறுப்பினர்களுடன் இந்தியாவின் முதன்மைத் தொழிற்சங்கமாக மாறி இருக்கிறது.
"பாரதிய கிஸôன் சங்' எனப்படும் விவசாயிகள் பிரிவில் 10 லட்சம் விவசாயிகள் உறுப்பினர்கள். அதன் "வித்யா பாரதி' என்கிற பிரிவு 73,000 ஆசிரியர்கள், 32 லட்சம் மாணவர்களுடன் 14,000 பள்ளிக்கூடங்களை நடத்துகிறது. அதன் "அகில பாரதிய அதிவக்தா பரிஷத்' என்கிற வழக்குரைஞர்களின் அமைப்புதான் இந்தியாவின் மிகப் பெரிய வழக்குரைஞர்கள் அமைப்பு. முன்னாள் ராணுவ வீரர்கள், அதிகாரிகள் இணைந்த "அகில பாரதிய பூர்வ சைனிக் சேவா பரிஷத்' 2001-இல் தொடங்கப்பட்டு இன்று நாடு தழுவிய அளவில் முன்னாள் ராணுவத்தினரின் நலனுக்காக செயல்படுகிறது.
ஹிந்து- முஸ்லிம் கலவரங்கள் அந்த அமைப்பின் வளர்ச்சிக்கு உதவியது என்னவோ உண்மை. ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், அதனுடன் இணைந்த அமைப்புகளும் இயற்கைப் பேரிடர் காலங்களிலும், மதக் கலவரங்களால் ஹிந்துக்கள் பாதிக்கப்படும் போதும் தன்னலம் பாராமல் நடத்திய சேவைகள்தான் அதன் அபரிமித வளர்ச்சிக்குக் காரணங்கள். இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின்போது மேற்கு பஞ்சாப், கிழக்கு வங்கத்திலிருந்து வந்த அகதிகளுக்கு இந்திய ராணுவத்துடன் இணைந்து நிவாரணம் வழங்கி உதவுவதில் ஆர்.எஸ்.எஸ். முனைந்து செயல்பட்டது. இந்திய- சீனா போரின்போதும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த பூகம்பங்கள், வெள்ளப்பெருக்கு, சுனாமி உள்ளிட்ட எல்லா பேரிடர்களின்போதும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் தன்னலமற்ற தொண்டைப் பாராட்டாதவர்கள் கிடையாது.
இந்திய விடுதலைக்கு முன்பே டாக்டர் ஹெட்கேவார் மறைந்துவிட்டார். காசி ஹிந்துப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய "குருஜி' என்று மரியாதையுடன் அழைக்கப்படும் மாதவ சதாசிவ கோல்வல்கர் காலத்தில்தான்ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நாடு தழுவிய அளவில் பரவியது. குருஜியைத் தொடர்ந்து தலைவரான பாளாசாகேப் தேவரஸ் 12 வயதில் அந்த இயக்கத்தில் இணைந்தவர். அதைத் தொடர்ந்து ராஜேந்திர சிங், கே.எஸ்.சுதர்சன், இப்போதைய மோகன் பாகவத் என்று ஒவ்வொரு தலைவரும் அந்த அமைப்பின் வலிமைக்கும் செயல்பாட்டுக்கும் பங்களித்திருக்கிறார்கள்.
தீண்டாமைக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்.ஸின் நிலைப்பாட்டை பாபாசாகேப் அம்பேத்கர் பாராட்டி இருக்கிறார்; "ஆர்.எஸ்.எஸ். ஃபாஸிஸ்ட் என்றால் நானும் ஃபாஸிஸ்ட்தான்' என்றார் ஜெயபிரகாஷ் நாராயண்- திமுக தலைவர் கருணாநிதியே ஆர்.எஸ்.எஸ். ஒரு கலாசார அமைப்பு என்று ஏற்றுக்கொண்டவர். அந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனது நூற்றாண்டைக் கொண்டாடுகிறது.
தற்போதைய தலைவர் மோகன் பாகவத்தின் பதவிக்காலம்தான் அந்த அமைப்பின் பொற்காலம் எனலாம். அவரது தலைமையில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் நீண்ட நாள் கனவுகள் ஒன்றன்பின் ஒன்றாக பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக அரசால் நிறைவேறுகின்றன.
நூறு ஆண்டுகள் கடந்தும் வலிமையுடன் இயங்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை விமர்சிக்கலாம், வெறுக்கலாம்- ஆனால், இந்திய அரசியலில் தவிர்க்கவோ, ஒதுக்கவோ முடியாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.