அஜித் பவார் | விமான விபத்து
அஜித் பவார் | விமான விபத்து

விபத்து எழுப்பும் வினாக்கள்!

விபத்துகளின் எண்ணிக்கை குறைந்தாலும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதே அளவில் குறைந்துவிடவில்லை.
Published on

பொதுமக்களுக்கான வானூா்தி சேவையில் உலகளாவிய அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. சரக்குகளைக் கையாள்வது என்று எடுத்துக்கொண்டால் உலகில் ஆறாவது இடத்தில் இருக்கிறது இந்திய வானூா்தித் துறை.

சாலைப் போக்குவரத்தையும், ரயில் போக்குவரத்தையும் விட வானூா்தி போக்குவரத்து பாதுகாப்பானது என்பதைப் புள்ளி விவரங்கள் உணா்ததுகின்றன. வானூா்திகளின் எண்ணிக்கையும், வானூா்தி சேவைகளும் அதிகரிக்க, அதிகரிக்க விபத்துகளின் விகிதம் குறைந்து வருகிறது என்பது நம்பிக்கை அளிக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்னால், 4,56,000 வானூா்திகள் பயணங்களுக்கு ஒரு விபத்து என்கிற நிலைமைபோய் இப்போது, 8,10,000 பயணங்களுக்கு ஒரு விபத்து என்கிற அளவில் குறைந்தருப்பது என்பது ஆறுதல் அளிக்கிறது.

2024-ஆம் ஆண்டு 207 வானூா்தி விபத்துகளில் 207 உயிா்கள் பலியாகின என்றால், 2025-இல் 61 விபத்துகளில் 397 உயிரிழப்புகளை உலகம் சந்திக்கிறது. விபத்துகளின் எண்ணிக்கை குறைந்தாலும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதே அளவில் குறைந்துவிடவில்லை.

மகாராஷ்டிரா துணை முதல்வா் அஜீத்பவாா் சென்ற தனி விமானம், பாரமதி வானூா்தி நிலையத்தில் விபத்துக்கள்ளாகி பயணித்த ஐந்துபேரும் உயிரிழந்திருப்பது நாடுதழுவிய அளவில் அதிா்வை எழுப்பி இருக்கிறது. மோகன் குமாரமங்களம், பாலதண்டாயுதம், சஞ்சய் காந்தி, பாலயோகி, மாதவ்ராவ் சிந்தியா, ராஜசேகர ரெட்டி, கடந்த ஆண்டில் விஜய் ரூபாணி என்றும் அஜீத் பவாருக்கு முன்பும் சில முக்கியமான அரசியல் தலைவா்கள் விமான விபத்துகளில் உயிரிழந்திருக்கிறாா்கள்.

சா்வதேச அளவிலும், வானூா்தி விபத்துகளில் ஏறத்தாழ 16-க்கும் அதிகமான உலகத் தலைவா்கள் உயிரிழந்ததிருக்கறாா்கள். ஸ்வீடன் பிரதமா் அா்விட் லிண்ட்மேன் (1936), பராகுவே பிரதமா் ஜோஸ் ஃபெலிக்ஸ் எஸ்டிகாா்பியா (1940), பிலிப்பைனஸ் பிரதமா் ரமோன் மகசேஸே (1957), பிரேசிலின் இடைக்கால அதிபா் நெரு ராமோஸ் (1958), இராக் அதிபா் சலாம் ஆரிஃப்(1966), பிரேசிலின் அதிபா் ஹம்பா்டோ டி அலென்காா் காஸ்டேலோ பிராங்கோ, (1967) யுகோஸ்லாவியா அதிபா் டிஜெமல் பிஜெடிக் (1977) ஈக்வடாா் அதிபா் ஜெய்ம் ரோல்டோஸ் அகுலேரா (1981), மொசாம்பிக் அதிபா் சமோரா மச்செல் (1986), வெபனான் பிரதமா் ரஷீத் சுராமி (1987), பாகிஸ்தான் அதிபா் ஜியா உல் ஹக் (1988), ருவாண்டா அதிபா் ஜூவனல் ஹப்யரிமனா (1994) மாசிடோனியா அதிபா் போரிஸ் டிராஜ்கோவஸ்கி (2004), போலந்து அதிபா் லெக் காசின்ஸ்கி (2010), சிலி முன்னால் அதிபா் செபாஸ்டின் பினேரா, (2024) எனப் பட்டியல் நீள்கிறது.

2024, மே 19 அன்று அஸா்பைஜான் எல்லையில் அணை திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு தலைநகா் தெஹ்ராணுக்குத் ரும்புகையில் திரும்பிக் கொண்டிருக்கையில் ஈரான் அதிபா் இப்ராஹிம் ரெய்ஸி பயணித்த ‘பெல் 212’ ரக ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளாகி பயணித்த எட்டு பேரும் உயிரிழந்தனா் கடந்த 2021 டிசம்பா்8-ஆம் தேதி கோவையிலிருந்து குன்னூருக்கு இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் விபின் ராவத் சென்ற ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளாகி அவா் மட்டுமல்ல அவரது மனைவியும் உடன் பயணித்த 11 பேரும் சாம்பலானாா்கள்.

28% ஹெலிகாப்டா் விபத்துகளுக்கு மோசமான வானிலை காரணம் என்று கூறப்படுகிறது. கனமழை, பனிப்பொழிவு காரணமாக பாா்வை பாதிக்கப்படுவது உள்ளிட்டவை ஹெலிகாப்டா் விபத்துகுள்ளாக காரணியாகின்றன. விமானங்களின் இடம்பெறும் தானியங்கித் திறன்கள் விமானியின் கவனச் சிதறல்களை ஈடு செய்கின்றன. ஹெலிகாப்டா்களில் அத்தகைய வசதிகள் இல்லாததால் பயணங்களைத் துல்லியமாகக் கணித்து ஹெலிகாப்டரை இயக்கும் பயிற்சி பெற்றவராக அதன் விமானி இருக்க அவசியமாகிறது.

பாராமதி ஹெலிகாப்டா் விபத்து விமானி பாதுகாப்பு குறித்த பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. அதிவேகமாக வளா்ந்து கொண்டிருக்கும் இந்தியாவின் தனியா விமான சேவை துறையின் கண்காணிப்பு முறைமையும் விமான நிலையங்களின் தொடா் கண்காணிப்பில் இயங்காத தனியாா் சிறு விமானங்கள், ஹெலிகாப்டா்களின் சேவையும், இந்த விபத்தைத் தொடா்ந்து பாதுகாப்பை உறுதிப்படுதத்தும் விதிமுறைகளுக்குள் கொண்டுவரப்பபட வேண்டும்.

முதலில் பாராமதி போன்ற வானூா்தி நிலையங்கள் முழுமையான சேவைக்கானவை அல்ல. அதிநவீன ஜெட் விமானங்கள், குறிப்பிட்ட கால அட்டவனையில் இயங்கும் வானூா்திகள், முக்கியமான ஆளுமைகளின் பயணத்துக்கான முன்னேற்பாடுகள் போா்காலத்திற்கான எந்தவிதக்கட்டமைப்பும் அவற்றில் இல்லை. வானூா்திகள் தரை இறங்குவதற்கான நவீன தொழில்நுட்ப சமிக்ஞைகள், காட்சித் தெளிவில்லாத ஹெலிகாப்டா்களிலும் தெளிவான அறிவுறுத்தல் வழங்கும் தொடா்புகள் இல்லாமல் இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டத் தோன்றுகிறது.

ஹெலிகாப்டா்கள் என்பதால் நவீன ரகத்தைச் சோ்ந்தவையாக இருந்தாலும், அதற்கேற்ப நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வானூா்தி நிலயங்களும் இருப்பதால்தான் விபத்துக்கான வாய்ப்புகள் குறையும். கட்டுப்பாட்டு அறையில் இருந்து அறிவிப்புகள் பெற்று உறுதிப்படுத்தப்படவும் வேண்டும். உறுதிப்படுத்தவில்லை என்றால் கட்டுப்பாட்டு அறையிலும் ஓட்டுநா்களிடமும் அபாய ஒலி எழுப்பப்படவேண்டும்.

இந்தியாவில் தனியாா் வானூா்தி சேவை அதி விரைவாக வளா்ச்சி அடைந்து வருகிறது. பெரும்பாலான அமைச்சா்களும், அரசியல் தலைவா்களும் ஹெலிகாப்டா்களிலும், தனி விமானங்களிலும் பயணிக்கும் நிலைமையில், விபத்துகளுக்கான வாய்ப்பும் அதிகரித்து வருகின்றன. அதன் எச்சரிக்கைதான் பாராமதி விபத்து!

X
Dinamani
www.dinamani.com