

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கும் 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் கவர்ச்சியான அறிவிப்புகளோ, எதிர்பார்ப்புகளோ இல்லை என்றாலும், சர்வதேசப் பொருளாதாரச் சூழலையும், அரசு எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களையும் கருத்தில் எடுத்துக்கொண்டு, மிகவும் கவனமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச அளவில் பொருளாதாரம் மந்தகதியில் இருக்கிறது; வர்த்தகம் சுறுசுறுப்பில்லாமல் நகர்கிறது; இப்படிப்பட்ட சூழலில் இந்தியாவின் இப்போதைய தேவை ஸ்திரத்தன்மையே தவிர கவர்ச்சிகரமான அறிவிப்புகளோ, மாற்றத்துக்கான கொள்கை முடிவுகளோ அல்ல.
எட்டு முழு பட்ஜெட் , ஒரு இடைக்கால பட்ஜெட் எனத் தொடர்ந்து 9-ஆவது முறையாக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கும் 2026-27-க்கான பட்ஜெட் "கனவு பட்ஜெட்டும்' அல்ல, "கவர்ச்சி பட்ஜெட்டும்' அல்ல. மிகவும் சாதுர்யமாகப் பேரியல் பொருளாதாரத்தை (மேக்ரோ எக்கானாமி) கருத்தில் கொண்டு, தாக்கல் செய்யப்பட்டிருக்கும் 2026-27-க்கான நிதிநிலை அறிக்கை பாராட்டப்பட வேண்டும்.
திருத்திய மதிப்பீட்டைவிட 7.7% அதிகரித்து மொத்த செலவினங்கள் ரூ. 53.5 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது என்றால், கடன் சேர்க்கப்படாத வருவாய், 7.2% அதிகரித்து ரூ. 36.5 லட்சம் கோடியாகக் காட்டப்பட்டிருக்கிறது. நிதிப் பற்றாக்குறை ஜிடிபியின் 4.5% அளவைக் கடக்காமல் பார்த்துக்கொள்வது என்கிற நிதியமைச்சரின் முனைப்புக்கு ஏற்ப, 4.3% அளவில் கட்டுப்பட்டிருக்கிறது.
மூலதனச் செலவினம் நடப்பு நிதியாண்டில் ரூ. 11.2 லட்சம் கோடி என்றால், அடுத்த நிதியாண்டில் ரூ. 12.2 லட்சம் கோடியாக அதிகரிக்க வழிகோலப்பட்டிருக்கிறது. இந்த அதிகரிப்பால் நிதிப் பற்றாக்குறை தடம் புரண்டுவிடாமல் பார்த்துக்கொண்டிருப்பதில்தான் சாதுர்யம் தெரிகிறது. அடுத்த நிதியாண்டில் கடனுக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் (ஜிடிபி) இடையேயான விகிதத்தை 56.1%- லிருந்து 55.6% -ஆகக் குறைப்பதும், நிதிப் பற்றாக்குறையை 4.35% -இல் நிறுத்தியதும் நிதி நிர்வாகத்தின் வெளிப்பாடு.
2026-27 நிதியாண்டுக்கான ஜிடிபி, நடப்பு நிதியாண்டில் ரூ. 3,57,13,886 கோடியைவிட 10% அதிகரித்து ரூ. 3,93,00,393 கோடியாக இருக்கும் என்று தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட் அறிக்கை தெரிவிக்கிறது. நடப்பு நிதியாண்டைப் போலவே அடுத்த நிதியாண்டிலும் மூலதனச் செலவு ஜிடிபியில் 3.1% -ஆகத் தொடரும் எனத் தெரிகிறது.
எந்த அளவுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் நிதி நிர்வாகம் இருந்திருக்கிறது என்பதன் வெளிப்பாடு நிதிப்பற்றாக்குறையைக் கட்டுக்குள் கொண்டு வந்திருப்பது. 2020-21-இல் கொவைட்-19 காரணமாக 9.25 % இருந்த நிதிப்பற்றாக்குறை 4.3% என்று குறைந்திருப்பதை நாம் மறந்துவிடலாகாது. இத்தனைக்கும், மத்திய அரசின் மூலதனச் செலவினங்கள் 2020-21-க்கும் 2025-26-க்கும் இடையில் ரூ. 4.26 லட்சம் கோடியில் இருந்து, ரூ. 12.21 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பதைக் காணவேண்டும். வளர்ச்சிக்கான மூலதனச் செலவினங்களாக அவை இருந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்த அம்சம்.
அதிரடி வரிக் குறைப்புகள், நுகர்வை ஊக்கப்படுத்தும் வகையிலான அறிவிப்புகள் இல்லாமல் இருப்பது குறையொன்றுமல்ல. இன்றைய பொருளாதாரச் சூழலை நன்றாகப் புரிந்துகொண்டு, தலைப்புச் செய்திக்காக, வரிக் குறைப்பில் ஈடுபடாமல், வரி செலுத்துவதை ஊக்கப்படுத்துவது, வரி செலுத்துவோர் எண்ணிக்கையை விரிவுபடுத்துவது, வரி செலுத்துவதைச் சுலபமாக்குவது போன்ற நடவடிக்கைக்கு முன்னுரிமை கொடுக்க முற்பட்டிருப்பது வரவேற்புக்குரியது.
இந்தியாவிலிருந்து உலகளாவிய தரவு மைய சேவைகளை வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 20 ஆண்டுகளுக்கு வரி விலக்கு அளிக்க முற்பட்டிருக்கும் அறிவிப்பு மிகவும் பாராட்டுதலுக்குரியது. நீண்டகாலக் கொள்கை முடிவுகள் அறிவிக்கப்படும்போதுதான், அந்நிய முதலீட்டாளர்களும் பெரு நிறுவனங்களும் தயக்கமோ, அச்சமோ இல்லாமல் இந்தியாவில் செயல்பட முற்படுவார்கள் என்பதை உணர்ந்து எடுக்கப்பட்ட துணிவான முடிவு.
17 புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்க வரி விலக்கு; 7 அரிய வகை நோய்களுக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகள், உணவுகள் போன்றவைகளுக்கு வரிவிலக்கு; மின் வாகனங்களில் பயன்படுத்தப்படும் மின்கலன்களுக்கான லித்தியம் அயன் செல்களின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருள்களுக்கு அடிப்படை சுங்க வரியிலிருந்து விலக்கு போன்றவை பாராட்டுக்குரிய அறிவிப்புகள்.
இந்தியாவை உலகத்தின் மருந்துத் தயாரிப்பு மையமாக மாற்றும் நோக்குடன் கூடிய பயோஃபார்மா சக்தி திட்டத்துக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதும், தமிழகம், கேரளம், ஒடிஸாவில் அரியவகை கனிம வளங்கள்ஆய்வு செய்ய மையங்கள் அமைப்பதும், 7 அதிவேக ரயில் வழித்தடங்கள், 20 புதிய தேசிய நீர்வழித் தடங்கள் போன்றவையும் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய திட்டங்கள்.
தொடர்ச்சியான வளர்ச்சி என்பதுதான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் 2026-27 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தெரிவிக்கும் செய்தி. பட்ஜெட் என்பது உடனடிக் கைதட்டல் பெறுவதற்கானதல்ல; வருங்காலத்தைக் கட்டமைப்பதற்கான திட்ட அறிக்கை. இன்றைய தேவையைக் கருத்தில்கொண்டு, வருங்காலத்தை வடிவமைக்கும் இலக்குடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் பட்ஜெட் இது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.