இரும்புத் திரையாகும் மூங்கில் திரை!

சோவியத் யூனியன் இருந்தபோது, அது இரும்புத் திரையாகவும் சீனா மூங்கில் திரையாகவும் வர்ணிக்கப்பட்டன. இப்போது, ரஷியா மூங்கில் திரையாகவும் சீனா இரும்புத் திரையாகவும் மாறி இருக்கின்றன- தகவல் தொலைத்தொடர்பு புரட்சிக்குப் பிறகும்கூட!
ரஷிய அதிபர் புதினை வரவேற்கும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்.
ரஷிய அதிபர் புதினை வரவேற்கும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்.
Updated on
2 min read

சீனாவில் அதிபர் ஷி ஜின்பிங்குக்கு அடுத்து பெரும் அதிகாரம் படைத்தவர்கள் என்று கருதப்பட்டவர்கள் ஒவ்வொருவராக ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்படுவதும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்படுவதும் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.

அதிகார துஷ்பிரயோகம், வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கில் சீனாவின் முன்னாள் நீதித் துறை அமைச்சர் டாங் யிஜுனுக்கு அண்மையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 2020 முதல் 2023 வரை சீனாவின் நீதித் துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளுங்கட்சியின் தலைமையின் கீழ் ராணுவம் செயல்பட எதிர்ப்பு தெரிவித்ததாகக் கருதப்படும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும் மத்திய ராணுவ ஆணையத்தின் (சிஎம்சி) துணைத் தலைவராக இருந்தவருமான ராணுவ ஜெனரல் ஸôங் யோஷியா, சிஎம்சி உறுப்பினர் லியு ஜென்லி ஆகியோர் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

"ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு எல்லை என்பதே கிடையாது. கட்சியும், மத்திய ராணுவ ஆணையமும் அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கைக்குப் பெரும் துரோகம் இழைத்துள்ளனர். சிஎம்சி தலைவரின் (ஷி ஜின்பிங்) பொறுப்புடைமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருவரும் செயல்பட்டுள்ளனர்' என்று சீன ராணுவ இதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் ஸாங் யோஷியாவின் எழுச்சியும் வீழ்ச்சியும் அசாதாரணமானது. அதிபர் ஜின்பிங் போலவே இவரும் சீன விடுதலைக்குப் போராடிய புரட்சியாளர்களின் வம்சாவளியைச் சேர்ந்தவர். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவில் 2007-இல் இணைந்த இவர், மத்திய ராணுவ ஆணையத்தின் உறுப்பினராக 2012-இல் நியமிக்கப்பட்டார். தலைமைக் குழுவில் (பொலிட்பீரோ) 2017-ஆம் ஆண்டு இடம்பெற்று, சிஎம்சி}யின் இரண்டாவது நிலை துணைத் தலைவரானார்.

கடந்த 2022 அக்டோபரில் நடந்த மாநாட்டில் (காங்கிரஸ்) ஜின்பிங் தனது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொண்டார்.

1980-களுக்குப் பிறகு அதிபர் பதவியில் யாரும் இரண்டு முறைக்கு மேல் இருந்ததில்லை என்கிற நிலையை மாற்றி காலவரம்பின்றி அதிபராகத் தொடரவும், கட்சியின் பொதுச் செயலராகவும் சிஎம்சி தலைவராகவும் நீடிக்கும் வகையிலும் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டுவந்தார். கட்சி, ஆட்சி, ராணுவம் என அனைத்தையுமே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.

சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கின் காங், பாதுகாப்புத் துறை அமைச்சர் லி ஷாங்ஃபூ, அணுசக்தி ஏவுகணைகளுக்குப் பொறுப்பாளரான கமாண்டர் லி யுசாவோ, துணைப் பொறுப்பாளர் ஷூ ஸோங்போ ஆகியோர் கடந்த 2023-ஆம் ஆண்டு அடுத்தடுத்து மாயமாகினர்; பின்னர் அவர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

கரோனா, வங்கிகளின் பின்னடைவுகள் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து அதிபர் பெயர் அல்லது அரசை நேரடியாகக் குறிப்பிடாமல் மென்மையாக விமர்சனம் செய்த தொழில்நுட்ப நிறுவனமான அலிபாபா குழும நிறுவனரான ஜாக் மா, ஃபோசன் நிறுவனத் தலைவரான குவோ குவாங்சாங், டுமாரோ ஹோல்டிங்ஸ் நிறுவனத் தலைவர் ஷியாவோஜியான்ஹுவா, மனை வணிகப் பெரும்புள்ளி ரென் ஸிகியாங், இணைய விளையாட்டுத் தளமான டோயு நிறுவனத்தின் நிறுவனர் சென் ஷாவோஜி போன்றவர்கள் ஒன்று மாயமானார்கள் அல்லது தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் சிறைத் தண்டனைக்கு உள்ளாகி சிறையில் வாடுகின்றனர்.

அதிகாரத்தின் உச்ச நிலையில் உள்ள பலரும் நீக்கப்பட்டபோதும், ஜெனரல் யோஷியா அதிகாரம் மிக்கவராகவும் அதிபர் ஜின்பிங்கின் நம்பிக்கைக்கு உரியவராகவும் விளங்கி வந்தார். இப்போது இவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது சர்வதேச அரசியல் பார்வையாளர்களின் புருவத்தை உயர்த்தி உள்ளது.

இப்போதைய மத்திய ராணுவ ஆணையம் கடந்த 2022-ஆம் ஆண்டு பொறுப்பேற்றது. அதில் அதிபர் ஜின்பிங் (தலைவர்), யோஷியா (துணைத் தலைவர்), ஹீ வீடாங் (துணைத் தலைவர்), லி ஷாங்ஃபூ (பாதுகாப்புத் துறை அமைச்சர்), லியு ஜென்லி (ராணுவத் துறை தலைவர்), மியாவோ ஹுவா (அரசியல் பணித் துறை இயக்குநர்), ஸாங் ஷெங்மின் (ராணுவ ஒழுங்கு நடவடிக்கை ஆணையச் செயலர்) இடம்பெற்றிருந்தனர்.

இவர்களில் அதிபர் ஜின்பிங், ஷெங்மின் ஆகியோர் மட்டுமே இப்போதும் அவர்களது பதவிகளில் தொடர்கின்றனர்.

ஊழலைக் களைகிறேன் என்கிற பெயரில் களையெடுக்கும் பணியில் அதிபர் ஜின்பிங் தீவிரமாக இறங்கி உள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதற்கு முதுமையை எட்டும் அதிபர் ஷி ஜின்பிங்கின் தன்னம்பிக்கையின்மை காரணமா? இல்லை, அவர் எடுக்க இருக்கும் சில ராணுவ நடவடிக்கைக்கான முன்னெடுப்பா? என்பது தெரியாமல் குழம்பிப் போய் இருக்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள். சோவியத் யூனியன் இருந்தபோது, அது இரும்புத் திரையாகவும் சீனா மூங்கில் திரையாகவும் வர்ணிக்கப்பட்டன. இப்போது, ரஷியா மூங்கில் திரையாகவும் சீனா இரும்புத் திரையாகவும் மாறி இருக்கின்றன- தகவல் தொலைத்தொடர்பு புரட்சிக்குப் பிறகும்கூட!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com