கூட்டுறவே நாட்டுயர்வு!

தனியார் நிறுவனங்களின் போட்டியை சமாளித்து பாரத் டாக்சி பயணித்தால் கூட்டுறவுக்குக் கிடைத்த வெற்றியாக இருக்கும்.
பாரத் டாக்சி
பாரத் டாக்சி
Updated on
2 min read

வாடகை கார்கள், ஆட்டோக்கள் இயக்கத்தில் பெரு நிறுவனங்கள் தடம் பதித்ததைத் தொடர்ந்து, இது மிகப்பெரிய தொழில் வாய்ப்பாக மாறியுள்ளது. தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இது பல்வேறு படிநிலைகளைக் கடந்துள்ளது. கைப்பேசி செயலி வாயிலாக முன்பதிவு, ஜிபிஎஸ், கூகுள் வரை படங்கள் போன்றவை பயணிகள் வாடகை வாகனங்களை இயக்குவோருக்கும், பயனர்களுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைத்து, பயன்பாட்டை அதிகரித்துள்ளது.

பெரு நகரங்கள் மட்டுமன்றி, வளர்ந்து வரும் சிறு நகரங்களிலும் இந்த வகை வாடகை வாகனங்களின் இயக்கம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் தொழிலில் பெரு நிறுவனங்கள் ஒருங்கிணைக்கும் பணியை மட்டுமே செய்து வருகின்றன. தனி நபர்கள் வாகனங்களில் முதலீடு செய்து அந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள்.

ஆரம்பத்தில், வாகன உரிமையாளர்களுக்கு அதிக அளவில் கட்டணத்தில் பங்கு வழங்கி பலரையும் தங்களை செயலி வலையில் ஈர்த்துக்கொண்ட பெரு நிறுவனங்கள் படிப்படியாக தங்களது பங்கை அதிகரித்துக் கொண்டன. தற்போது வாகன உரிமையாளர்களும், ஓட்டுநர்களும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கிடைக்கும் வருவாயில் குறிப்பிட்ட பகுதியை அந்த நிறுவனங்கள் கபளீகரம் செய்து விடுவதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.

நாடு முழுவதும் இதுபோன்ற சூழல் நிலவும் நிலையில், இந்தத் துறைக்கு புத்துணர்வு அளிக்கும் விதத்தில், 'பாரத் டாக்சி' செயலி தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்த செயலி மூலம் தில்லியிலும், குஜராத் மாநிலத்திலும் டாக்சி, ஆட்டோ. பைக் டாக்சி சேவை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து 3 ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் இந்த சேவையை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த 'பாரத் டாக்சி' செயலியை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 5-ஆம் தேதி தில்லியில் தொடங்கி வைத்தார். எட்டு கூட்டுறவு அமைப்புகளை ஒன்றிணைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த 'பாரத் டாக்சி' வாடகை வாகன கூட்டுறவு அமைப்பில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்து சுமார் 3 லட்சம் ஓட்டுநர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவம், விபத்துக் காப்பீடு போன்றவையும், ஓய்வூதிய சேமிப்பு பலன்களும் அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக, தில்லி சுற்றுலா மற்றும் போக்குவரத்து மேம்பாட்டு கழகத்துக்கும், பாரத் டாக்சியின் கூட்டுறவுப் பிரிவான சஹகார் டாக்சி கோ-ஆபரேட்டிவ் லிமிடெட் நிறுவனத்துக்கும் இடையே தில்லி முதல்வர் ரேகா குப்தா முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் கையொப்பமானது. அதன்படி, புது தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு மணிநேரக் கணக்கிலும், நாள் கணக்கிலும் 'பாரத் டாக்சி' சேவை தொடங்கப்படும். இது நகர்ப்புற போக்குவரத்தில் புதிய முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோன்று, இந்திய விமான நிலைய ஆணையமும் பாரத் டாக்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம் விமான நிலையங்களில் பயணிகளுக்கான ஒழுங்குபடுத்தப்பட்ட வாடகை கார்கள் சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் முக்கிய துறைகளின் ஆதரவு கிடைத்திருப்பது பாரத் டாக்சி கூட்டுறவு அமைப்புக்கு உந்துதலாக அமைந்துள்ளது.

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தால் ஊக்குவிக்கப்பட்டு, முன்னணி கூட்டுறவு நிறுவனங்கள் இணைந்து தொடங்கிய இந்த 'பாரத் டாக்சி' செயலி வழக்கமான தனியார் நிறுவன வாடகை கார் சேவையைப் போல் அல்லாமல், கூடுதல் கட்டண வசூல் இல்லாத வெளிப்படையான வாடகை கட்டண நிர்ணயத்துக்கு உத்தரவாதம் அளிக்கிறது. மேலும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன் வாடகை கார், ஆட்டோ ஓட்டுநர்களின் நலன், உரிமைகளுக்கும் முன்னுரிமை அளிக்கிறது.

பயணிகள் வாடகை வாகன ஓட்டுநர்கள் இந்த 'பாரத் டாக்சி' செயலியைப் பதிவிறக்கம் செய்து ரூ.500-ஐ தங்களது பங்காக செலுத்தி பதிவு செய்து கொண்டு, தங்களது சேவையைத் தொடரலாம். அவர்களுக்கு சவாரி மூலம் கிடைக்கும் கட்டணத்தில் கமிஷன் தொகை எதையும் கூட்டுறவு அமைப்புகளுக்குச் செலுத்த வேண்டாம். இதுவே தனியார் நிறுவனங்கள் 30% முதல் 40 % வரை ஓட்டுநர்களிடம் வசூலிக்கின்றன. பாரத் டாக்சியில் இணையும் வாடகை வாகன ஓட்டுநர்கள் காருக்கு நாளொன்றுக்கு ரூ.30-ம், ஆட்டோக்களுக்கு ரூ.18-ம் சந்தா கட்டணமாக செலுத்தினால் போதும்.

இதுபோன்று கூட்டுறவு அமைப்புகள் இணைந்து வாடகை கார் சேவையைத் தொடங்கியிருப்பது உலகிலேயே முதல் முறை என்பது பெருமைக்குரிய விஷயமாகும். இந்தியாவின் பயணிகள் வாடகை வாகனச் சந்தையின் மதிப்பு கடந்தாண்டு 21 பில்லியன் டாலர் என்றிருந்த நிலையில், அது 2032-ஆம் ஆண்டு 44 பில்லியன் டாலராக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பால் பொருள்கள் விற்பனையில் கூட்டுறவு நிறுவனமான அமுல் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. அதேபோன்று, தனியார் நிறுவனங்களின் போட்டியை சமாளித்து பாரத் டாக்சியும் பயணித்தால் கூட்டுறவுக்குக் கிடைத்த வெற்றியாக இருக்கும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com