தொடரும் மரண தண்டனை சர்ச்சை...

ஒரு குற்றத்துக்கு தண்டனையாக உயிரைப் பறிப்பது என்பது ஒரு தீர்வாகாது
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
2 min read

உலகம் முழுவதுமே மரண தண்டனைக்கு எதிரான கருத்துகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. மரண தண்டனைக்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவும் குறைந்து வருகிறது. ஒரு குற்றத்துக்கு தண்டனையாக உயிரைப் பறிப்பது என்பது ஒரு தீர்வாகாது என்கிற மனநிலைதான் இதற்குக் காரணம் என்பதை உலகளாவிய தரவுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் "காலப்' என்கிற அமைப்பு வெளியிட்ட தரவுகளின்படி மரண தண்டனைக்கு ஆதரவாக 52% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 2024-இல் இது 53%-ஆக இருந்தது. 1994-இல் இது 80%-ஆக இருந்த நிலையில் 30 ஆண்டுகளில் 27% ஆதரவு குறைந்திருக்கிறது. இப்போது 44% அமெரிக்கர்கள் மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 1995-களில் மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் 13% பேர்தான்.

ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்ட தரவுகளின்படி மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட தகவல் என்று பார்த்தால், 2023-இல் அதிகபட்சமாக ஈரானில் 853 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதற்கு அடுத்ததாக சவூதி அரேபியாவில் 172 பேருக்கும், அமெரிக்காவில் 24 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

2023-இல் சீனாவில் மிக அதிகபட்சமாக 1,000-க்கும் மேற்பட்டோருக்கும், எகிப்தில் 590 பேருக்கும், வங்கதேசத்தில் 248-க்கும் மேற்பட்டோருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான், ஈரான், வடகொரியா, சிரியா உள்ளிட்ட நாடுகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டது குறித்த சரியான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.

இந்தியாவில் 2016 முதல் 2025 வரையிலான மரண தண்டனை விவரங்களை "தி ஸ்கொயர் சர்க்கிள் கிளினிக்' என்ற அமைப்பு தொகுத்து பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியிட்டது. மரண தண்டனை பற்றிய ஆழமான பகுப்பாய்வை இந்தத் தரவுகள் முன்வைக்கின்றன. இதன்படி, கடந்த 10 ஆண்டுகளில் 1,279 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. 2025-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி 574 பேர் (550 ஆண்கள், 24 பெண்கள்) மரண தண்டனையை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

2025-ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றங்கள் 94 வழக்குகளில் 128 பேருக்கு மரண தண்டனை விதித்தன. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 20 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கர்நாடகம், மேற்கு வங்கத்தில் தலா 6 பேருக்கும், தமிழகத்தில் ஐந்து பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

2016 முதல் 2025 வரை 822 வழக்குகளில் 1,279 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதில், 842 பேருக்கான மரண தண்டனை வழக்குகள் உயர்நீதிமன்றங்களால் முடித்துவைக்கப்பட்டன. அதில், 70 பேருக்கான மரண தண்டனைகள் உறுதி செய்யப்பட்டன. 258 பேர் (30.64%) விடுவிக்கப்பட்டனர். உயர்நீதிமன்றங்களால் மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட 70 பேர் மீதான வழக்குகளில் 37 வழக்குகளில் உச்சநீதிமன்றம் தீர்வு கண்டது.

ஒருவருக்கும் மரண தண்டனையை உறுதி செய்யவில்லை.2016-2025 காலகட்டங்களில் 515 பேருக்கான மரண தண்டனையை உயர்நீதிமன்றங்களும், 71 பேருக்கான மரண தண்டனையை உச்சநீதிமன்றமும் குறைத்துள்ளன. 10 ஆண்டு காலத்தில் உச்சநீதிமன்றம் தான் உறுதி செய்த 35 பேருக்கான மரண தண்டனையை மறுபரிசீலனை செய்துள்ளது. அதன்படி, 15 வழக்குகளில் தொடர்புடைய 24 பேருக்கு மரண தண்டனையை ரத்து செய்துள்ளது. 6 வழக்குகளில் தொடர்புடைய 11 பேருக்கான மரண தண்டனையை உறுதி செய்தது.

இதில் தொடர்ச்சியாக கடந்த மூன்று ஆண்டுகளாக உச்சநீதிமன்றம் ஒருவருக்குக்கூட மரண தண்டனையை உறுதி செய்யவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அத்துடன் இல்லாமல் 2025-ஆம் ஆண்டில் மட்டும் மரண தண்டனை விதிக்கப்பட்ட 10 பேருக்கு தண்டனையை ரத்து செய்து விடுவித்துள்ளது. 2016-ஆம் ஆண்டிலிருந்து பார்த்தால் ஒரே ஆண்டில் அதிகபட்சமாக விடுவிக்கப்பட்டது 2025-ஆம் ஆண்டில்தான்.

கடந்த 10 ஆண்டுகளில் உயர்நீதிமன்றங்களால் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டதைவிட ரத்து செய்த விகிதம் நான்கு மடங்கு அதிகம். உச்சநீதிமன்றம் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டதைவிட இரு மடங்கு அதிகமாக மரண தண்டனையை ரத்து செய்துள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை 2025-இல் ஒரே ஒரு வழக்கில் மட்டும் மரண தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. 8 பேருக்கான மரண தண்டனையைக் குறைத்தது.

உலகம் முழுவதும் சுமார் 145 நாடுகள் மரண தண்டனையை சட்டப்படியாக ரத்து செய்துள்ளன அல்லது நடைமுறைப்படுத்துவதில்லை. 2005-ஆம் ஆண்டிலிருந்து பார்க்கும்போது 2025-இல் மரண தண்டனை விகிதம் அதன் உச்சபட்சத்தை அடைந்திருக்கிறது. இதற்கு மத்திய கிழக்கு, ஈரான், இராக், சவூதி, யேமன், சீனா போன்ற குறிப்பிட்ட நாடுகளில் அதிகப்படியாக மரண தண்டனைகள் விதிக்கப்படுவதே காரணம்.

மரண தண்டனை என்பது அனைத்து மனித உரிமைகளிலும் அடிப்படை உரிமையான வாழ்க்கை உரிமையை மீறுகிறது.

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் உள்ள மனித கண்ணியத்தை குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது என்பது சர்வதேச அமைப்புகளின் பார்வை. மேலும், குற்றங்களின் எண்ணிக்கையை மரண தண்டனை குறைத்திருப்பதாக உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை என ஐ.நா. பொதுச் சபை பதிவு செய்திருக்கிறது.

குற்றவாளிகள் தண்டனைக் காலம் முடிந்து திருந்தி வாழ வாய்ப்பு அளிக்க வேண்டும்; குற்றத்துக்கு தீர்வு மரண தண்டனை அல்ல. என்றாலும்கூட அதிகபட்ச தண்டனை என்பது அச்சுறுத்துவதாகத் தொடர்வதில் தவறில்லை என்கிற வாதத்தை முற்றிலுமாக நிராகரிக்க முடியவில்லை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com