அச்சுறுத்திவரும் சாலை விபத்துகள், அதிலும் குறிப்பாக 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் கவனக்குறைவு மற்றும் அதிவேகம் காரணமாக ஏற்படும் விபத்துகள் கவலைப்பட வைக்கின்றன. இதுபோதாதென்று, இன்ஸ்டாகிராம், யூடியூபில் பதிவிடுவதற்காக சிலர் அதிவேகமாக வாகனங்களைச் செலுத்தி அதைப் படம் பிடிக்கும்போது ஏற்படும் விபத்துகள் இன்னொரு புறம் அதிகரித்து வருகின்றன.
சாலைகள் பாதுகாப்பானவையாக இருந்தால் மட்டும்தான் பொதுமக்கள் அச்சமின்றி தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்த முடியும். பொறுப்பற்ற விதத்தில் வாகனங்கள் செலுத்தப்படும்போது, அதனால் ஏற்படும் விளைவுகள் பல குடும்பங்களை நிர்க்கதி ஆக்குகின்றன. அது குறித்த கவலையே இல்லாமல் தங்களது அற்ப சந்தோஷத்துக்காகவும், நண்பர்கள் மத்தியில் பெருமைப்பட்டுக் கொள்வதற்காகவும் பொறுப்பற்ற விதத்தில் வாகனங்களை ஓட்டுவதும், விபத்தை ஏற்படுத்துவதும் எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாதவை.
தில்லியில் சாலையில் சென்று கொண்டிருந்த சஹில் தனேஷ்ரா என்பவர் அதி விரைவாக வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். அந்தக் காரை ஓட்டி வந்தவர் பதினாறு வயதுகூட நிரம்பாத சிறுவன். தனது அதிவேக சாகசத்தைப் படம் பிடித்து சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்து கொண்டிருந்தான் அந்தச் சிறுவன் என்பதுதான் கொடுமை.
இதுபோன்ற சாகசங்கள் தினந்தோறும் நூற்றுக்கணக்கில் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இதுபோன்ற மோட்டார்சைக்கிள், மகிழுந்து சாகசங்கள் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்படுவதும், அதைப் பாராட்டும் "லைக்'குகள் குவிவதும் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. இதனால், சாலையில் பயணிப்பவர்கள் மட்டுமல்ல, சாகசத்தில் ஈடுபடுபவர்களும் உயிரிழந்திருக்கிறார்கள். உரிமம் பெறும் வயதாகாத இளைஞர்களும், மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்களும் எல்லாப் பெருநகரங்களிலும் அதிகரித்து வருகிறார்கள்.
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மூலம் உருவாக்கப்படும் பொய்யான தகவல் பதிவுகளை சமூக ஊடகங்கள் அகற்ற அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதேபோல, அதிவிரைவாக மோட்டார் வாகனம் ஓட்டுதல் மற்றும் மோட்டார்சைக்கிள் சாகசங்களைப் பதிவேற்றம் செய்வதையும் சமூக ஊடகத் தளத்தில் தடை செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டியது அவசியம். செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மூலம் அவற்றை அகற்றுவது ஒன்றும் கடினமல்ல.
இதுபோன்ற சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்கள் (சிறார்கள்) பெரும்பாலும் உயரதிகாரிகள், அரசியல்வாதிகள், தன வணிகர்களின் வாரிசுகளாக இருப்பவர்கள். தங்களது வாகனங்களின் மதிப்பையும், தனிப்பட்ட மரியாதையையும், செல்வாக்கையும் வெளிப்படுத்த விழையும் அவர்களுக்குப் போதுமான பாதுகாப்பு விலையுயர்ந்த வாகனங்களில் இருப்பது வசதியாகிவிட்டது.
தெருவில் பயணிப்பவர்கள்தான் பாதுகாப்பற்றவர்களாக இருக்கிறார்கள். அண்மையில் கான்பூரில் பிரபல வர்த்தகக் குடும்பத்தைச் சேர்ந்த 26 வயது வாரிசு தனது மிக விலையுயர்ந்த மகிழுந்தில் அதிவிரைவாகச் சென்று ஏற்படுத்திய விபத்தில் பலர் காயமடைந்தனர், சிலர் உயிரிழந்தனர். அவரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்ய காவல் துறைக்கு நான்கு நாள்கள் பிடித்தன என்றால், ஒருசில மணி நேரத்தில் நீதிமன்றத்தால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
நீதிமன்றம் அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுத்துப் பிணையில் விடுவித்தது. மக்கள் மத்தியில் ஏற்பட்ட கொந்தளிப்பின் விளைவாக, உள்ளூர் காவல் துறை அதிகாரி மீது துறைசார் நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டது. அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பிணை வழங்கிய நீதிபதி குறித்து யாரும் எதுவும் பேசவில்லை.
வாகன ஓட்டிகள் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றால், அதைக் காரணம் காட்டி விடுவிக்கின்றனர். வாகனத்தை ஓட்ட சிறுவர்கள் முற்பட்டால், விபத்து நேரும்போது அதிகமான தண்டனைக்கும் அவர்கள் பொறுப்பாக்கப்படுவதுதானே நியாயம்?
பெரும் பணக்காரர்கள் வாகனங்களைச் செலுத்தி அவை விபத்துக்குள்ளாகும்போது, பெரும்பாலும் அப்பாவி வாகன ஓட்டிகள் அந்த விபத்துக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்கள். விசாரணையில் அவர்களை முதலாளிகள் பிணையில் எடுத்து, நீதிமன்ற விடுதலைக்கும் வழிகோலுகிறார்கள். காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்குகின்றன. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை. வசதி படைத்தவர்கள் பொறுப்பற்ற விதத்தில் வாகனம் ஓட்டவும், விபத்து நேர்வதற்கும் இதுதான்காரணமாகிறது.
அண்மைக்காலமாக இந்திய சாலைகளுக்கும், நெடுஞ்சாலைகளுக்கும் பொருத்தமில்லாத, தேவையில்லாத 300 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட மகிழுந்துகள் பணக்காரர்களின் அடையாளமாகி இருக்கின்றன. இந்தியாவின் நெடுஞ்சாலைகளிலேயே 120 கி.மீ.க்கும் அதிகமான வேகத்தில் செல்ல முடியாது எனும்போது எதற்காக 300 கி.மீ. வேக வாகனங்களைத் தயாரிக்க அனுமதி வழங்கப்படுகிறது என்று தெரியவில்லை.
சாலை விதிகள் பின்பற்றப்படுவதில்லை; வேகக் கட்டுப்பாடு மீறப்படுகிறது; உரிமம் வழங்குவதில் முறையான கண்காணிப்பு இல்லை; விபத்து ஏற்படுத்துபவர்கள் தண்டிக்கப்படுவதில்லை; விபத்துக்கு உள்ளாகும் அப்பாவிகளின் உயிர் குறித்து யாரும்கவலைப்படுவதில்லை- இந்தியாவின் சாலைகளில் மனித உயிர் மலிவான பொருளாகி விட்டது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின் தடை வெறும் தடையல்ல.. மக்களின் அன்றாட ஓட்டத்துக்கு போடும் பிரேக்!

அறிவியல் ஆயிரம்: அன்றாட உணவுகளில் புற்றுநோய் அபாய வேதிப்பொருள்கள்!

‘விவசாயிகளுக்கு அடையாள எண் இருந்தால் மட்டுமே மானிய திட்டங்கள் பெற முடியும்’

பொதுமக்கள் குறைகளை வாட்ஸ்ஆப் மூலம் தெரிவிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


