அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக கடந்த 2025 ஜனவரியில் பதவியேற்ற டிரம்ப் வரி விதிப்பில் அமெரிக்காவை மற்ற நாடுகள் வஞ்சிப்பதாகக் கூறி உலக நாடுகள் மீது அதிரடி வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டார். இந்தியா மீது பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் 25 சதவீதம், உக்ரைன் மீது போர் நடத்தி வரும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக குற்றஞ்சாட்டி 25 சதவீதம் என மொத்தம் 50 சதவீத வரியை விதித்தார்.
கடும் வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட, அமெரிக்க சிறு வணிக நிறுவனங்கள் மற்றும் 12 மாகாண அரசுகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனிடையே, இந்தியா - அமெரிக்கா இடையிலான இருதரப்பு இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் நீண்ட இழுபறிக்குப் பிறகு கடந்த பிப்.7-ஆம் தேதி இறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்தியப் பொருள்கள் மீதான பரஸ்பர வரி விதிப்பு 18 சதவீதமாக குறைக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இந்தச் சூழலில்தான், டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இடம்பெற்ற 6 நீதிபதிகள், 'வரி விதிக்கும் அதிகாரம் அமெரிக்க நாடாளுமன்றத்துக்குத்தான் உள்ளது. எனவே, உலக நாடுகள் மீது அமெரிக்க அதிபர் தன்னிச்சையாக கூடுதலாக வரி விதித்தது செல்லாது' என்று கடந்த வெள்ளிக்கிழமை (பிப். 20) தீர்ப்பளித்தது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தத் தீர்ப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் டிரம்ப், 'வரியை ரத்து செய்த ஆறு நீதிபதிகளும் நாட்டின் அவமானம். அவர்கள் முட்டாள்கள். தேசப்பற்று இல்லாதவர்கள். அரசமைப்புச் சட்டத்துக்கு துரோகம் இழைத்து விட்டனர். வெளிநாட்டு சக்திகளின் செல்வாக்குக்கு அடிபணிந்துவிட்டனர். இந்திய நிறுவனங்களுடன் கைகோத்துள்ளனர். அமெரிக்காவை ஏமாற்றிக் கொண்டிருக்கும் வெளிநாடுகளுக்கு இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சி அளித்துள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பால் எதுவும் மாறாது. இந்தத் தீர்ப்பு என் கைகளைக் கட்ட முடியாது' என்று விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்த வழக்கு தொடர்பாக இந்தியர்கள் மீதும் அதிபர் டிரம்ப் கோபம் கொண்டுள்ளார். காரணம், இந்த வழக்கைத் தொடுத்தவர்கள், முன்னின்று நடத்தியவர்களில் பெரும்பாலானோர் இந்திய வம்சாவளியினர் என்பது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல், வர்த்தகச் சட்டம் 1974-இன் பிரிவு 122-இன் கீழ் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, பல்வேறு நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது கூடுதலாக 10 சதவீத வரி தற்காலிகமாக 150 நாள்களுக்கு விதிக்கப்படும் என்றும், இது வரும் பிப்ரவரி 24 (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வரும் என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார். பின்னர், இந்த 10 சதவீத வரி விதிப்பு 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அவர் பதவியேற்ற பின்னர், அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியதாகக் கூறி இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர். வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான ஹெச்1பி விசா கட்டணம் ரூ. 1.32 லட்சத்தில் இருந்து ரூ. 88 லட்சமாக உயர்த்தப்பட்டது.
பருவநிலை மாற்றத்தால் உலக நாடுகள் கடும் பாதிப்பைச் சந்தித்துவரும் சூழலில், பருவநிலை மாற்றத்துக்கான பாரீஸ் மாநாட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக டிரம்ப் ஏற்கெனவே அறிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பில் இருந்தும் அமெரிக்கா வெளியேறிவிட்டது. இதன் காரணமாக ஏழை நாடுகள் கடும் பாதிப்பை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது ஒருபுறமிருக்க, போதைப் பொருள்கள் புழக்கத்துக்கு வெனிசுலாதான் காரணம் என்று கூறி சர்வதேச சட்டங்களைத் துளியும் மதிக்காமல் அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மடூரோவை அந்நாட்டுக்குள்ளேயே சென்று அதிரடியாகக் கைது செய்து அழைத்து வந்து அமெரிக்க சிறையில் அடைத்துள்ளனர். வெனிசுலாவின் அபரிமிதமான எண்ணெய் வளங்களைக் கைப்பற்றவே போதைப் பொருள் குற்றச்சாட்டை டிரம்ப் சுமத்தினார் என்பது வெளியில் சொல்லப்படாத உண்மை.
இப்போது, ஈரானைக் குறிவைத்து டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது நல்லது என்று டிரம்ப் வெளிப்படையாகவே பேசியதுடன், இரண்டு போர்க் கப்பல்களையும் மத்திய கிழக்குப் பகுதிக்கு அனுப்பி உள்ளார்.
அணுசக்தி ஒப்பந்தத்துக்கு 15 நாள்கள் கெடு நிர்ணயித்துள்ள டிரம்ப், ஈரான் உடன்படாவிட்டால் அந்நாட்டின் உச்சபட்ச மதத் தலைவர் அலி கமேனி, அவரது வாரிசாக கருதப்படும் மகன் மொஜ்தாபா கமேனி ஆகியோரை ராணுவ நடவடிக்கை மூலம் கொல்லவும் திட்டம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
வரி விதிப்பு, பருவ நிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து விலகல், வெளிநாட்டினருக்கு எதிராக அமெரிக்காவில் நடவடிக்கைகள், இயற்கை வளங்கள் மிக்க நாடுகள் மீது ஆக்கிரமிப்பு, அடிபணியாத நாடுகள் மீது ராணுவ நடவடிக்கைகள் போன்ற அதிபர் டிரம்ப்பின் செயல்பாடுகள் உலகுக்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கின்றன. அவர் விரும்புவதுபோல நோபல் விருது கிடைக்கிறதோ இல்லையோ, முகமது பின் துக்ளக், அடால்ஃப் ஹிட்லர், இடி அமீன் வரிசையில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் வரலாற்றில் இடம்பெறுவார் என்பது மட்டும் நிச்சயம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒப்பந்தமா? தாக்குதலா? 24 மணிநேரத்தில் தெரியவரும்! ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!!

ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் பின்வாங்காது! டிரம்ப் எச்சரிக்கை
ஈரானுக்கு உதவும் நாடுகள் மீது 50% வரி: டிரம்ப்

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது 10% பரஸ்பர வரி: அமெரிக்க உச்சநீதிமன்ற தீா்ப்பால் டிரம்ப் நடவடிக்கை
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


