புற்றுநோய் மரபணு வரைபடம்!

புற்றுநோய் எதிர்ப்பில், சென்னை ஐஐடி முன்னெடுத்திருக்கும் முயற்சி மிகப்பெரிய மாற்றத்துக்கு வழிகோலும் என்று எதிர்பார்க்கலாம்!
cancer
புற்றுநோய் ENS
Updated on
2 min read

சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) பாரத் புற்றுநோய் மரபணு வரைபடம் (பாரத் கேன்சர் ஜெனோம் அட்லஸ்), பாரத் கேன்சர் ஜெனோம் கிரிட் என்று இரண்டு மிக அவசியமான தரவுத் தளங்களை உருவாக்கி இருக்கிறது. கடந்த ஐந்தாண்டு உழைப்பின் பின்னணியில் பாரத் புற்றுநோய் மரபணு வரைபடம் தயாரிக்கப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. புற்றுநோயின் பரவல் குறித்துத் தெரிந்து கொள்வதற்கு மட்டுமல்லாமல், அதன் பல்வேறு பிரிவுகள் குறித்தும் இதன் மூலம் மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் தெரிந்து கொள்ள முடியும்.

இந்தத் திட்டத்தின் கீழ் நாடு தழுவிய அளவில் மார்பகப் புற்று நோயாளிகளின் திசு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவற்றில் இருந்து மரபணு திரிபுகளின் சுருக்கமும் சேகரிக்கப்பட்டது.

இப்படித் தயாரிக்கப்பட்டிருக்கும் பாரத் புற்றுநோய் மரபணு வரைபடம் இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டுமல்லாது உலகளாவிய அளவில் புற்றுநோய் ஆராய்ச்சியாளர்களுக்கும், மருத்துவர்களுக்கும், அதற்கான மருந்து தயாரிப்பாளர்களுக்கும் பயன்படும்.

இந்தியாவைப் பொருத்தவரை புற்றுநோய் மருத்துவத்திலும், ஆராய்ச்சியிலும் மிகப் பெரிய இடைவெளி நிலவியது. இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் இருந்தாலும், சர்வதேச அளவில் நடத்தப்படும் புற்றுநோய் குறித்த ஆய்வுகளில் அவர்கள் குறித்த தரவுகள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. அதனால், மேலைநாட்டு நோயாளிகளின் மாதிரிகளின் அடிப்படையில்தான் மரபணுத் தொகையியல் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

இந்திய நோயாளிகளைப் பாதிக்கும் புற்றுநோய் வகைகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட, புற்றுநோய் மரபணு வரைபடம் அல்லது தகவல் தொகுப்பு தேவை. அதன் மூலம்தான் இந்தியாவில் உள்ள புற்றுநோயாளிகளை அடையாளம் காணவும், கண்காணிக்கவும், அதற்கேற்ப மருந்துகளை ஆய்வு செய்து உருவாக்கவும் இயலும். அந்த இடைவெளியை இப்போது சென்னை ஐஐடி உருவாக்கி இருக்கும் பாரத் கேன்சர் ஜெனோம் அட்லஸýம், கேன்சர் ஜெனோம் கிரிடும் நிரப்பும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தேசிய புற்றுநோய் அட்டவணைத் திட்டத்தின் புள்ளிவிவரப்படி ஒன்பதில் ஓர் இந்தியர் புற்றுநோயால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. ஏறத்தாழ 25 லட்சம் பேர் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும், 2022 முதல் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆண்டொன்றுக்கு 12.8% அதிகரித்து வருவதாகவும் தெரிகிறது.

சர்வதேசப் புற்றுநோய் ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கும் "குளோபோகேன் 2022' என்கிற ஆய்வின்படி, 20 முதல் 40 வயதுப் பிரிவினரிடையே 1.25 கோடி பேர் ஆண்டுதோறும் புதிதாகப் புற்றுநோய்ப் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். 35 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழக்கிறார்கள். இந்தியாவில் 19 முதல் 39 வயது வரையிலான பிரிவினர் மத்தியில் மார்பகம், தைராய்ட், வாய், நாக்கு, குடல் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

மார்பகப் புற்றுநோயைப் பொருத்தவரையில் சீனாவும், இந்தியாவும்தான் முன்னிலையில் இருக்கின்றன. 2050}க்குள் சுமார் 14 லட்சம் புதிய மார்பகப் புற்றுநோயாளிகள் உருவாவதுடன், 5 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆசியாவில் மட்டுமே உயிரிழக்கக் கூடும் என்கிறது ஓர் ஆய்வு. தேசிய புற்றுநோய் அட்டவணைத் தரவுகளின்படி, ஆண்களைவிடப் பெண்கள்தான் அதிகமாகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்தியாவில் பாதிப்புக்கு உள்ளாகும் நோயாளிகளின் நோய் பாதிப்புகள் மாற்றமடைந்து வருகின்றன. தொற்று நோய் அல்லாத நோய்களால்தான் 57% க்கும் அதிகமானோர் உயிரிழப்பதாகத் தெரிகிறது. அதேபோல, மேம்பட்ட பரிசோதனைகளுக்கு உள்படுபவர்களின் எண்ணிக்கையில் மிகப் பெரிய ஏற்றத்தாழ்வு நிலவுகிறது.

மரபணுப் பரிசோதனைகள் மிகவும் விலை உயர்ந்தவை; பணக்காரர்களால் மட்டுமே அதைப் பெற முடியும் என்கிற நிலைமையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அண்மைக் காலமாக, அதுபோன்ற சோதனைகளுக்கான கட்டணம் 30% முதல் 40% வரையில் குறைந்திருக்கிறது.

ஆனால், மரபணுப் பரிசோதனைகளின் கட்டணம் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்திருந்தாலும் அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் நிலைமை ஏற்படவில்லை. பயிற்சிபெற்ற மரபியல் நல ஆலோசகர்கள் (ஜெனடிக் கவுன்சிலர்ஸ்), மூலக்கூறு நோய்க்குறி நிபுணர்கள் (மாலிகுலர் பாத்தாலஜிஸ்ட்டுகள்), உயிரித் தரவுப் பகுப்பாளர்கள் (பயோ இன்ஃபர்மேஷியன்ஸ்) ஆகியோர் அதிக அளவில் இல்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். சோதனை முடிவுகளின் அடிப்படையில் நோயின் போக்கை ஆய்வு செய்து, தகுந்த சிகிச்சைக்குப் பரிந்துரைக்கத் தேர்ந்த ஆலோசகர்கள் தேவைப்படுகிறார்கள்.

மரபணுச் சோதனைக்கு குறைந்த அளவில்தான் காப்பீடு வழங்கப்படுகிறது. அதனால் குறைந்த வருவாய்ப் பிரிவைச் சேர்ந்த நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைப்பது தடைபடுகிறது. மேம்பட்ட மருத்துவ சிகிச்சை பெரிய நகரங்களில் குறைந்த அளவில் உள்ள மருத்துவமனைகளில்தான் வழங்கப்படுகிறது. இவையெல்லாம்கூட, புற்றுநோயாளிகள் பரவலாக சிகிச்சை பெறுவதற்குத் தடைகளாக இருக்கின்றன.

ஆரம்பக் கட்டத்திலேயே புற்றுநோயைக் கண்டறியும் வசதி, தாலுகா மருத்துவமனைகளிலேயே கிடைப்பதற்கு வழிகோலப்பட வேண்டும். அதன் மூலம் மருத்துவச் செலவும் குறையும், நோயை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வாய்ப்பும் அமையும். புற்றுநோய் எதிர்ப்பில், சென்னை ஐஐடி முன்னெடுத்திருக்கும் முயற்சி மிகப்பெரிய மாற்றத்துக்கு வழிகோலும் என்று எதிர்பார்க்கலாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com