

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மாநாட்டின் பரபரப்பிலும், ஊடக வெளிச்சத்திலும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானின் இந்தியாவுக்கான அரசுமுறைப் பயணம் போதுமான கவனம் பெறவில்லை. ஐரோப்பியக் கூட்டமைப்பு, பிரிட்டனுடன் இந்தியா மேற்கொண்டிருக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் நீட்சியாகத்தான் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானின் விஜயத்தையும், மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஒப்பந்தங்களையும் பார்க்க வேண்டும். இரு நாடுகளுக்கு இடையேயான உறவு, "உத்திசார் கூட்டணி' (ஸ்ட்ராட்டிஜிக் பார்ட்னர்ஷிப்) என்பதில் இருந்து உலகளாவிய சிறப்பு உத்திசார் கூட்டணியாக (ஸ்பெஷல் குளோபல் ஸ்ட்ராட்டிஜிக் பார்ட்னர்ஷிப்) உயர்ந்திருக்கிறது என்பதுதான் பிரான்ஸ் அதிபரின் இந்திய விஜயத்தின் சிறப்பு.
இந்தியா முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுடன் உத்திசார் கூட்டணி அமைத்திருக்கிறது என்றாலும், எந்த அளவுக்கு சர்வதேச சலசலப்புகளுக்கு இடையேயும், சற்றும் தளராமல் தாக்குப் பிடித்துத் தொடர்கிறது என்று பார்க்கும்போது இந்தியா-பிரான்ஸ் கூட்டணி முதலிடம் பெறுகிறது. முக்கியத்துவம் வாய்ந்தவை என்று கருதப்படும் பாதுகாப்பு, விண்வெளி ஆய்வு, பருவநிலை மாற்றம், துல்லிய தொழில்நுட்பம், இருநாட்டு மக்களிடையேயான உறவு உள்ளிட்ட அனைத்திலுமே இரண்டு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து நட்புறவும், ஒருங்கிணைந்த நோக்கும் காணப்படுவதால்தான் ஏனைய நாடுகளைவிட பிரான்ஸ் இந்தியாவுக்கும், இந்தியா பிரான்ஸுக்கும் முன்னுரிமை அளித்தன.
இந்தியாவின் நம்பகமான நட்பு நாடாக ரஷியா இருந்த இடத்தை கடந்த கால் நூற்றாண்டுக் காலமாக பிரான்ஸ் பிடித்திருக்கிறது. 1998-இல் இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தியதைத் தொடர்ந்து உலக நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தபோது, அதை மீறி இந்தியாவுடனான தனது நட்புறவைப் பிரான்ஸ் தொடர்ந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. காஷ்மீர் பிரச்னையை ஐக்கிய நாடுகள் சபையில் எழுப்ப சீனா முயன்றபோது, தனது "வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுத்த நாடும் பிரான்ஸ்தான்.
மாஸ்கோவுடனான புது தில்லியின் நட்புறவு தொடர்ந்தாலும்கூட, இரண்டு பிரச்னைகளில் இரு நாட்டு உறவில் பிரச்னைகள் எழுந்திருக்கின்றன. உக்ரைன் படையெடுப்பைத் தொடர்ந்து உள்நாட்டிலும், சர்வதேச அரசியலிலும் ரஷியா எதிர்கொள்ளும் பிரச்னைகளால் இந்தியா பாதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, அமெரிக்காவை எதிர்கொள்ள சீனாவுடனான நெருக்கத்தை ரஷியா அதிகரித்திருப்பதும், ரஷியாவை முழுமையாக நம்ப முடியாத சூழலை ஏற்படுத்தி இருக்கிறது.
சோவியத் யூனியன் பிளவுபட்டு, பனிப்போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து மேலை நாடுகளுடன், குறிப்பாக அமெரிக்காவுடனான இந்திய உறவு வலுப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சியும், மாஸ்கோவுடனான பெய்ஜிங்கின் நெருக்கமும் அமெரிக்காவுடனான நட்புறவை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு இந்தியாவைத் தள்ளியது. ஆனால், இந்திய அரசியலில் அமெரிக்காவின் தலையீடு அதிகரிப்பதால் அமெரிக்காவை முற்றிலுமாகச் சார்ந்திருக்க முடியாத நிலையில் இந்தியா இருக்கிறது.
இந்தப் பின்னணியில் பார்க்கும்போதுதான் இந்தியா-பிரான்ஸ் நட்புறவின் தேவையும், நெருக்கமும், நம்பகத்தன்மையும் விளங்கும். ஒருபுறம் வரலாற்று ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் இரண்டு நாடுகளுக்கும் இடையே காணப்படும் நெருக்கம் மட்டுமல்லாமல், இரு நாடுகளிலும் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களோ, சர்வதேச அரசியலில் ஏற்பட்ட அணி மாற்றங்களோ உறவில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் தனிப்பட்ட முறையில் நட்புறவும், ஒத்த கருத்தும் இருப்பதைக் காணலாம். மேக்ரான் 2017-இல்அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்த முதல் சந்திப்பிலேயே இருவரும் நெருங்கிய நண்பர்களாகி விட்டனர். இதுவரையில் இரு தரப்பு சந்திப்புகள், சர்வதேச மாநாட்டு சந்திப்புகள் என்று இருபதுக்கும் அதிகமான முறைகள் இருவரும் சந்தித் திருக்கிறார்கள்.
இந்தியா-பிரான்ஸ் இரு நாட்டு உறவின் அடித்தளமாகத் திகழ்வது பாதுகாப்புதான். உலகின் மிக அதிகமாக ராணுவத் தளவாடங்களை வாங்கும் நாடு இந்தியா என்றால், இந்தியாவின் இரண்டாவது பெரிய ராணுவக் கொள்முதல் பிரான்ஸ் நாட்டில் இருந்துதான். படிப்படியாக ரஷியாவிடம் இருந்து தளவாடங்கள் கொள்முதலை இந்தியா குறைத்துவரும் நிலையில், அந்த இடத்தை பிரான்ஸ் நிரப்பியிருக்கிறது.
இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையே ராணுவத் தளவாட வர்த்தகத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், வழக்கமான உற்பத்தியாளர், கொள்முதல் செய்பவர் என்றில்லாமல், இணைந்து தயாரித்தல் என்கிற இடத்தை நோக்கி நகர்வதுதான்.
ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குகிறது என்றால்,இந்தியாவின் தேவைக்கேற்ப பெரும்பாலான உதிரி பாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் என்பது ஒப்பந்தத்தின் தனிச்சிறப்பு.
இந்தியாவில் 700-க்கும் அதிகமான பிரான்ஸ் நிறுவனங்கள் செயல்படுகின்றன என்றால்,150 இந்திய நிறுவனங்கள் பிரான்ஸில் தொழிற்சாலைகளை நிறுவி இருக்கின்றன. இந்தியா-பிரான்ஸ் இடையே பாதுகாப்பு, உயர் தொழில்நுட்பம், முக்கியக் கனிமங்கள் உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் 21 ஒப்பந்தங்கள் கையொப்பமாகி இருக்கின்றன.
அதிபர் இமானுவல் மேக்ரானின் நான்காவது இந்திய அரசுமுறைப் பயணம் உலகளாவிய சிறப்பு உத்திசார் கூட்டணி என்கிற புதிய அத்தியாயத்துக்கு வழிகோலியிருக்கிறது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.