

போதைப் பொருள் கடத்தலுக்குத் துணைபோனதாகக் குற்றஞ்சாட்டி வெனிசுலா மீது திடீர் தாக்குதல் நடத்தி, அந்த நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மடூரோவையும், அவரின் மனைவியையும் அமெரிக்கா சிறை பிடித்திருப்பது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
வெனிசுலா மீது தாக்குதல் நடத்தப்படும் என கடந்த பல மாதங்களாகவே அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து வந்ததால், அது எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால், அதிபரை சிறை பிடித்துச் சென்றது சற்றும் எதிர்பாராதது.
வெனிசுலா தூங்கிக் கொண்டிருந்த அதிகாலை இரண்டு மணி அளவில், தலைநகர் கராகஸை குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. ராணுவத் தளங்கள் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்களைக் குறிவைத்து ஏழு இடங்களில் சக்தி வாய்ந்த குண்டுகள் வீசப்பட்டன. சுமார் அரை மணி நேரமே நீடித்த இந்தத் தாக்குதலின் முடிவில் அதிபர் மடூரோவும், அவரின் மனைவியும் சிறை பிடிக்கப்பட்ட தகவல் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்ட பின்னர்தான் உலகுக்குத் தெரியவந்தது.
போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் மடூரோவுக்கு தொடர்பு இருப்பதாக டிரம்ப் நிர்வாகம் நீண்ட நாள்களாகவே குற்றஞ்சாட்டி வந்தது. பென்டனைல், கொகைன் போன்ற போதைப் பொருள்கள் வெனிசுலாவிலிருந்து அமெரிக்காவுக்குள் கடத்தப்படுவதாக புகார் கூறி வந்தது. கடந்த 2020-ஆம் ஆண்டுமுதல், அதிபர் மடூரோ மீது அமெரிக்காவில் போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. அவர் மீது 5 கோடி டாலர் சன்மானமும் அமெரிக்கா சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்த மடூரோ, வெனிசுலாவின் பரந்த எண்ணெய் வளத்தைக் கைப்பற்றுவதற்காகத் தன்னை ஆட்சியிலிருந்து அகற்ற அமெரிக்கா முயல்வதாகக் குற்றஞ்சாட்டி வந்தார். அதை உறுதிப்படுத்தும் வகையில், மடூரோ சிறை பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் பெரிய எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுலாவில் நுழையவிருக்கின்றன. மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் எண்ணெய் உள்கட்டமைப்பை அந்த நிறுவனங்கள் சரிசெய்து, வெனிசுலாவுக்கு வருவாய் ஈட்டித் தரும் என அதிபர் டிரம்ப் அறிவித்திருப்பது, அமெரிக்காவின் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
தென் அமெரிக்க நாடான வெனிசுலா, உலகிலேயே அதிக எண்ணெய் வளம் கொண்டது. அமெரிக்கா 4% எண்ணெய் இருப்பைக் கொண்டது என்றால், உலகின் மொத்த எண்ணெய் இருப்பில் சுமார் 18% வெனிசுலாவில் உள்ளது. வெனிசுலாவில் 303 பில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது என்றால், அமெரிக்காவின் இருப்பு 55 பில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் மட்டுமே. ஏற்றுமதி என எடுத்துக்கொண்டால், அமெரிக்கா ஆண்டுக்கு 125 பில்லியன் டாலர் மதிப்புக்கு கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்கிறது; வெனிசுலா வெறும் 4 பில்லியன் டாலர்தான் ஏற்றுமதி செய்கிறது.
வெனிசுலாவில் கச்சா எண்ணெய் இருப்பு இருந்தும் ஏற்றுமதி குறைவாக இருப்பதற்கு அந்த நாட்டின் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் ஒரு காரணம். எண்ணெய் உள்கட்டமைப்பு மிக மோசமாக இருப்பதும், மடூரோ ஆட்சிக்கு வந்த பின்னர் அங்குள்ள எண்ணெய் ஆலைகள் மீது வெளிநாட்டு முதலீடுகள் குறைந்ததும் ஏனைய காரணங்கள். அமெரிக்க நிறுவனங்கள் வெனிசுலாவில் முதலீடு செய்தாலும், அரசியல் நிலையற்ற தன்மை காரணமாக எண்ணெய் உற்பத்தி அதிகரிக்க சுமார் ஐந்து ஆண்டுகளாவது ஆகலாம்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், தனியார்மய தாராளமயக் கொள்கைகளையும் எதிர்த்துப் போராடிய முன்னாள் அதிபர் ஹியூகோ சாவேஸ் ஆட்சிக் காலத்திலேயே அந்த நாட்டின் மீது குறிவைத்தது அமெரிக்கா. வெனிசுலாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்குப் பெரும் பங்கைக் கொடுக்க வேண்டும் என்று 2007-இல் அதிபர் சாவேஸ் சட்டத் திருத்தம் கொண்டு வந்தார். இதை ஏற்க மறுத்து அமெரிக்க நிறுவனங்கள் பல அந்நாட்டிலிருந்து வெளியேறின.
அப்போது முதலே கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து வெனிசுலாவின் பொருளாதாரம் வளர்ச்சியடையாமல் முடக்கியது அமெரிக்கா. எண்ணெய் வளம் இருந்தும் உலகின் ஏழ்மையான நாடுகளுள் ஒன்றாக இன்றளவும் வெனிசுலா இருப்பதற்கு அந்த நாட்டின் ஆட்சியாளர்களோ, மக்களோ காரணம் அல்ல; முழுக்க முழுக்க அமெரிக்காதான் காரணம். அதன் உச்சகட்டமாக அமெரிக்காவின் ஏகாதிபத்திய தாக்குதலுக்கு இப்போது இரையாகி இருக்கிறது வெனிசுலா.
வெனிசுலாவைக் கைப்பற்றியுள்ள அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ரஷியா, சீனா, பிரான்ஸ், கியூபா, ஸ்பெயின், இத்தாலி, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டித்தும், கவலை தெரிவித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளன. ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஒரு நாட்டின் அதிபரை சிறை பிடித்து, போதைப் பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரிக்க முடியுமா? இதை அமெரிக்கச் சட்டமும், சர்வதேசச் சட்டமும் அனுமதிக்கிறதா உள்ளிட்ட கேள்விகள் எழுகின்றன.
இவை எதையும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பொருட்படுத்தப் போவதில்லை. வெனிசுலாவைப்போல போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கத் தவறிவருவதாக குற்றஞ்சாட்டப்படும் கொலம்பியா, மெக்ஸிகோ, கியூபா ஆகிய நாடுகள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தப் போகிறதா? அமெரிக்காவைப் பின்பற்றி உக்ரைன் தாக்குதலை ரஷியா நியாயப்படுத்தவும், தைவானை சீனா கைப்பற்றவும் வழிவகுத்துக் கொடுத்திருக்கிறார் அதிபர் டிரம்ப்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.