இந்தூர் விடுக்கும் எச்சரிச்கை!

தூய்மை நகரத்தின் பட்டியலில் முதலிடம் வகிக்கும் இந்தூரில் தூய்மையான குடிநீர் இல்லை என்பதிலிருந்து எந்த அளவுக்கு இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுகின்றன என்பது வெளிப்பட்டிருக்கிறது.
மாதிரிப் படம்
மாதிரிப் படம்
Updated on
2 min read

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகள் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. கடந்த எட்டு ஆண்டுகளாகத் தூய்மை நகரத்தின் பட்டியலில் முதலிடம் வகிக்கும் இந்தூரில் தூய்மையான குடிநீர் இல்லை என்பதிலிருந்து எந்த அளவுக்கு இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுகின்றன என்பது வெளிப்பட்டிருக்கிறது.

தூய்மையான சாலைகள், குப்பைக் கூளங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வது, காற்று மாசு கட்டுக்குள் இருப்பது போன்றவை மட்டுமே தூய்மை நகரத்துக்கான அளவுகோலாக இருக்க முடியாது என்பதைத்தான் இந்தூர் நகரத்தில் நடந்திருக்கும் துயரம் உணர்த்துகிறது. வெளிப்புறத் தோற்றத்தைவிட மக்களுக்குத் தூய்மையான குடிநீர் வழங்குவதும்கூட மாநகராட்சி நிர்வாகத்தின் தலையாயக் கடமை என்பதை நமது ஆட்சி நிர்வாகம் உணராமல் போனதன் விளைவுதான் இந்தூர் உயிரிழப்புகளும், பாதிப்புகளும்.

இந்தூரில் உள்ள பகீரத்புரா பகுதியில் காவல் துறை கண்காணிப்பு மையத்தில் அமைக்கப்பட்டிருந்த கழிப்பறைக் கழிவுகள் குடிநீர்க் குழாயில் கலந்ததுதான் உயிரிழப்புகளுக்குக் காரணம் என்று தெரிகிறது. கழிப்பறைத் தொட்டி, குடிநீர்க் குழாய்க்கு மேலே அமைக்கப்பட்டிருந்ததால், குழாயில் ஏற்பட்டிருந்த வெடிப்பின்மூலம் கழிப்பறை நீர் கலந்து மிகப் பெரிய அசம்பாவிதத்துக்குக் காரணமாகி விட்டது.

இது ஏதோ திடீரென்று ஏற்பட்ட பிரச்னையாக இருந்தால்கூட மன்னித்து விடலாம். அந்தப் பகுதி மக்கள் பல மாதங்களாகக் குடிநீரில் நாற்றம் இருப்பதாகப் புகார் தெரிவித்திருக்கிறார்கள். 2025 ஜூலை மாதம் முதல், குடிநீர்க் குழாய்களில் அசுத்தமான தண்ணீர் வருவதைச் சுட்டிக்காட்டிய பிறகும்கூட, மாநகராட்சி நிர்வாகம் அசிரத்தையாக இருந்ததை என்னவென்பது?

2019 கணக்குத் தணிக்கை அதிகாரி அறிக்கை (சிஏஜி) இந்தூரிலும், போபாலிலும் எடுக்கப்பட்ட குடிநீர் மாதிரிகளில் தீநுண்மிகள் இருப்பதைச் சுட்டிக்காட்டி இருந்ததும், அது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உத்தரவாதம் அளித்ததும், எந்த அளவுக்கு ஆட்சியாளர்கள் குடிநீர் விநியோகம் குறித்துக் கவலைப்படுகிறார்கள் என்பதை உணர்த்துகிறது.

16 பேர் உயிரிழந்திருக்கிறார்கள், 200-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். இதற்கு முன்பு பாதிக்கப்பட்டவர்கள் எத்தனைப் பேர் என்று தெரியாது. அந்த நகரத்தின் குடிநீர் விநியோகத்தை சீர்படுத்த ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் நிதி இந்தூர் சம்பவத்தை மேலும் விமர்சனத்துக்கு உள்ளாக்குகிறது. 2004-இல் நகரத்தின் குடிநீர் விநியோகத்தைசீரமைக்கவும், மேம்படுத்தவும் ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.1700 கோடி வழங்கி இருக்கிறது. இதில் புதிய சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதும் அடங்கும்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பகீரத்புரா பகுதி குடிநீர்க் குழாய்களை மாற்றிப் புதிய குழாய்கள் அமைக்க ரூ.2.4 கோடிக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருக்கிறது. அதன் பின்னணியில், அந்தப் பகுதி மக்களின் புகார்கள் இருந்தன என்பதும் தெரிய வந்திருக்கிறது. அப்படியும்கூட எந்தவித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்றால், மாநகராட்சி நிர்வாகத்தை என்னவென்று சொல்ல?

அசுத்தமான குடிநீர்தான் பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கும் காரணம் என்பது தொடர்ந்து உறுதிப்பட்டு வருகிறது. இந்தூர் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள எல்லா மாநகரங்களிலும் சிறு நகரங்களிலும் முறையாக சுத்திகரிக்கப்பட்டு அவ்வப்போது சோதனை நடத்தப்பட்டு, குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படுவதில்லை. சிசு மரணம், நோய்த் தொற்றுகள் மட்டுமல்லாமல், அசுத்தமான குடிநீரால் ஏற்படும் கூடுதல் பொருளாதாரப் பாதிப்புகளைச் சொல்லி மாளாது.

2005 முதல் 2022 வரையிலான ஆண்டுகளில் கடுமையான வயிற்றுப்போக்கு (டையரியா), டைஃபாய்ட், மூளைக்காய்ச்சல், காலரா உள்ளிட்ட தண்ணீர் மூலமான நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 20.98 கோடி என்றால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 50,000-க்கும் அதிகம். நீதி ஆயோக்கின் அறிக்கைப்படி பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படாததால் ஆண்டுதோறும் இந்தியாவில் 2,00,000 பேர் உயிரிழக்கிறார்கள். அப்படி இருந்தும் காற்று மாசு, சாலை விபத்து மரணங்கள், போதைப் பழக்கம் உள்ளிட்டவைபோல, குடிநீர் குறித்த விழிப்புணர்வும், அரசியல் அழுத்தமும் இல்லாமல் இருப்பதன் காரணம் புரியவில்லை.

குடிநீர் தொடர்பான நோய்த்தொற்றுகளால் அதிகம் பாதிக்கப்படுவது அடித்தட்டு மக்கள்தான். விலை கொடுத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வாங்கும் வசதி இல்லாமல்தான், நகராட்சிகளால் வழங்கப்படும் பாதுகாக்கப்பட்ட குழாய் குடிநீரை அருந்துகிறார்கள். அதனால் ஏற்படும் பாதிப்பு அவர்களது நிதி நிலையைப் பாதிக்கிறது. வேலை செய்ய முடியாமல் போவது, மருத்துவச் செலவு, உழைக்கும் திறன் இழப்பு உள்ளிட்டவற்றைக் கணக்கிட்டால், 3.77 கோடி தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பு காரணமாக ஆண்டுதோறும் 7.3 கோடி உழைக்கும் நாள்கள் (வொர்க்கிங் டேஸ்) பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கிறது மத்திய குடிநீர் விநியோக அமைச்சகம்.

இந்தூர் மாநகராட்சியின் குடிநீர்க் குழாய்கள் 120 ஆண்டுகள் பழைமையானவை. இந்தியாவில் பெரும்பாலான நகரங்களின் நிலை இதுதான். புதிதாகக் குடிநீர்க் குழாய்களின் விரிவாக்கம் நடைபெறுகிறதே தவிர, ஏற்கெனவே உள்ள குழாய்கள் மாற்றப்படுவதும், பழுது பார்க்கப்படுவதும், பராமரிக்கப்படுவதும் இல்லை. இந்தியாவின் எந்தவொரு நகரமும் இதற்கு விதிவிலக்கல்ல.

இந்தூர் இந்தியாவின் கண்களைத் திறக்க வேண்டும்- அடுத்த சம்பவம் நடைபெறுவதற்குள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com