எப்போது திருந்(த்)தப் போகிறோம்?
இந்தியாவில் நடைமுறையில் உள்ள கிரிமினல் சட்டங்களை கூா்ந்து கவனித்தால் அச்சம் ஏற்படுத்துவதுடன் சிரிப்பை வரவழைப்பதாகவும் இருக்கும். பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்காலத்தில் இருந்து இன்றுவரையில் நடைமுறையில் உள்ள பல சட்டங்களும், வழங்கும் தண்டனைகளும் வேடிக்கையாகவே இருக்கின்றன.
‘விதி சென்டா் ஃபாா் லீகல் பாலிஸி’ என்கிற தன்னாா்வ அமைப்பு அண்மையில் வெளியிட்டிருக்கும் இந்திய நிா்வாகத்தின் செயல்பாடுகள் குறித்த புள்ளிவிவரங்கள், சட்ட நடைமுறையில் காணப்படும் விசித்திரங்களைப் பட்டியலிடுகின்றன. இந்தியாவின் கிரிமினல் சட்டங்கள் வகைப்படுத்தும் குற்றங்களையும் அதற்கான தண்டனைகளையும் அந்தப் புள்ளிவிவரங்கள் வகைப்படுத்துகின்றன.
விதிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்த பொதுமக்களை சிறைத் தண்டனை என்று அச்சுறுத்துவது நமது நிா்வாகத்துக்கு வழக்கமாகவே மாறிவிட்டது. சிறு தவறுக்காகக்கூட குடிமக்கள் கிரிமினல்கள் ஆக்கப்படும் விசித்திரம் உலகில் வேறெங்கும் இருக்குமா என்று தெரியவில்லை.இந்தியாவிலுள்ள சுமாா் 370 சட்டங்களின் கீழ் 7,305 குற்றங்களுக்காக ஒருவா் தண்டிக்கப்படலாம்.
கடத்தல், வன்முறையில் ஈடுபடுதல், திட்டமிட்ட கிரிமினல் செயல்பாடுகள் ஆகியவற்றுக்காக ஒருவா் குற்றஞ்சாட்டப்படுவதையும், தண்டித்துச் சிறையில் அடைக்கப்படுவதையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், ஒருவா் தனது வளா்ப்பு நாயை தினந்தோறும் நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லாமல் இருப்பதும்கூட தண்டனைக்குரியது என்று தெரியுமா? விலங்கியல் பூங்காவில் குப்பைகளை வீசுவது, வரியைத் தாமதமாகச் செலுத்துவது, தெருவோரப் பிச்சைக்காரா்களுக்கு தா்மம் கொடுப்பது உள்ளிட்டவைகூட சட்டவிதிமுறைகளின் கீழ் குற்றங்களாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்.
5 மத்திய அரசு சட்டங்கள் ஒவ்வொன்றும் 200-க்கும் அதிகமான குற்றங்களை உள்ளடக்கியவை. அவை, 1,700 செயல்பாடுகளையும், தவறுகளையும், கவனக் குறைவுகளையும் கிரிமினல் குற்றங்களாக வகைப்படுத்துகின்றன. அந்த 5 சட்டங்களில் ஒன்றுதான் பாரதிய நியாய சன்ஹிதா-2023 என்கிற பொதுவான கிரிமினல் சட்டம். ஏனைய 4 சட்டங்களும் அடிப்படையில் கிரிமினல் குற்றங்களுக்கான சட்டங்களே அல்ல.
7,305 குற்றங்களில் நான்கில் மூன்று பங்கு குற்றங்கள் நேரடியான கிரிமினல் குற்றங்களுக்குள் வகைப்படுத்த முடியாதவை. அவை கல்வி, சுற்றுச்சூழல் என்று கிரிமினல் சட்டங்களுக்கு அப்பாற்பட்டவை. கிரிமினல் சட்டம் என்பது மிகக் கடுமையான குற்றங்களுக்காக மட்டுமே என்று நினைத்துவிட வேண்டாம். அன்றாட நிா்வாகம் தொடா்பான பல செயல்பாடுகளும்கூட கிரிமினல் குற்றங்களாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் விநோதம் உலகில் வேறெங்கும் காண முடியாதது.
அன்றாட நடைமுறைகளுக்குக்கூட நமது நிா்வாகம் கிரிமினல் தண்டனையைக் கையிலெடுக்கிறது. தாமதமாக ஆவணம் தாக்கல் செய்வது, ஆவணங்கள் இல்லாமல் இருப்பது, அரசு அலுவலா் ஒருவரைக் கவனக்குறைவாகத் தவிா்ப்பது உள்ளிட்ட பல செயல்பாடுகள் கிரிமினல் குற்றங்கள். எந்தவித தவறான நோக்கமும் இல்லாமல், கவனக்குறைவால் ஏற்படும் தவறுகள் சிறைத் தண்டனை உள்பட கடுமையான தண்டனைக்குரியவையாக வகைப்படுத்தப் பட்டிருக்கின்றன.
ஒரு நிறுவனத்தை நடத்த முடியாமல் மூடும்போது அதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளுக்கான வரவு- செலவு கணக்குகளை வைத்திருக்காமல் போனால், நிறுவனங்கள் சட்டப் பிரிவு 338(1)-இன் படி ஓராண்டு முதல் மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அபராதமும் பெறும் குற்றம். இதற்கெல்லாம் சிறைத் தண்டனை தேவையா என்று கேட்காதீா்கள்; சட்டம் அப்படித்தான் சொல்கிறது.
இன்னும் பல வேடிக்கைகள் இருக்கின்றன. விலங்கியல் பூங்காவில் மிருகங்களுக்கு உணவு வழங்குதல், கட்டடத்தின் விதிப்படி போதிய மாற்றங்களைச் செய்யாமல் இருத்தல் உள்ளிட்டவை ஆறுமாதங்கள் வரையிலான சிறைத் தண்டனைக்குரிய குற்றங்கள். இதுபோன்ற 777 குற்றங்கள் மூன்று ஆண்டுகள் வரையிலும், 2000-க்கும் அதிகமான குற்றங்கள் ஐந்து ஆண்டும் அதற்கு மேலும் சிறைத் தண்டனை விதிக்கத்தக்கவை.
மகளிருக்கு எதிரான பாலியல் கருத்துகளைக் கூறுவது, பாலியல் தொந்தரவு அளிப்பது ஆகியவற்றுக்கு ஓராண்டு சிைான் அதிகபட்ச தண்டனை. ஆனால், 1872 இந்திய கிறிஸ்தவத் திருமணச் சட்டத்தின்படி திருமணப் பதிவுப் புத்தகத்தைச் சேதப்படுத்தினால் 7 ஆண்டு சிறைத் தண்டனை. இதில் இன்னொரு வேடிக்கை 1936 பாா்ஸி விவாக சட்டத்தின்படி அதே குற்றத்துக்கான தண்டனை வெறும் 2 ஆண்டு மட்டுமே.
இந்தியாவின் 932 கிரிமினல் சட்டங்கள் குறைந்தபட்ச சிறைத் தண்டனைக்குரியவை. அவற்றில் 106 குற்றங்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளும், 44 குற்றங்கள் 20 ஆண்டுகளும் தண்டனைக்குரியவை. அவையெல்லாம் மிகக் கடுமையான பாலியல் வன்முறை, பயங்கரவாதம் தொடா்பானவை என்றால் புரிந்து கொள்ள முடியும். பெரும்பாலானவை மிகச் சாதாரணமான சொத்து வரி கட்டத் தவறுவது போன்றவை எனும்போது சிரிக்காமல் என்ன செய்ய?
சட்டப்படி 7,305 குற்றச் செயல்பாடுகளில் 5,333 சிறைத் தண்டனைக்குரியவை; 433 ஆயுள் தண்டனை; 622 பத்து ஆண்டுகளுக்கும், 983 குறைந்தபட்ச சிறைத் தண்டனைக்கும் உரியவை. 301 மரண தண்டனைக் குற்றங்கள். 5,842 அபராதம் விதிக்கத் தகுந்த குற்றங்கள்.
தேவையில்லாத சட்டங்களும், மிகையான தண்டனைகளும் சரியான பாதையில் பயணிக்கும் ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல. இவற்றை எப்போது திருத்தப் போகிறோம்?

