மேற்கு வங்கமும் தேர்தல் தொடர்பான வன்முறையும் பிரிக்க முடியாதவை. 1972-இல் முதல்வர் சித்தார்த்த சங்கர் ரே தலைமையில் அமைந்த காங்கிரஸ் ஆட்சியின்போது தொடங்கிய நக்ஸல் வன்முறை இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்டாலும்கூட அப்போது தொடங்கிய வன்முறை கலாசாரம் இன்று வரையில் தொடர்கிறது.
1977-இல் ஜோதி பாசு தலைமையில் அமைந்த முதலாவது இடதுசாரி அரசில் வன்முறை அரசியல் பரவலான அங்கீகாரம் பெற்றது. அன்று முதல் இன்று வரை உள்ளாட்சித் தேர்தல், பேரவைத் தேர்தல், மக்களவைத் தேர்தல் என ஒவ்வொரு தேர்தலின்போதும் மோதல்களில் பலர் உயிரிழப்பதும் சொத்துகள் சூறையாடப்படுவதும் அங்கு வாடிக்கையாகிவிட்டன.
மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக ஏப். 23 மற்றும் 29-ஆம் தேதிகளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் தொடர்பான வன்முறைகளை எதிர்கொள்ள 2,400 கம்பெனிகள் (குழுக்கள்) அடங்கிய மத்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதன் காரணமாக, முந்தைய தேர்தல்களை ஒப்பிடுகையில் வாக்குப் பதிவு நாளில் வன்முறைச் சம்பவங்கள் குறைந்தன.
தேர்தல் முறைகேடுகள், வன்முறைச் சம்பவங்கள் காரணமாக ஃபால்டா தொகுதியில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு அங்கு மொத்தமுள்ள 285 வாக்குச்சாவடிகளிலும் மே 21-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. தேர்தலுக்குப் பிறகு அடுத்த உத்தரவு வரும் வரை 700 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் இருக்க உத்தரவிடப்பட்ட நிலையிலும், வன்முறை தொடர்ந்தது.
தலைநகர் கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் விஸ்வஜித் பட்நாயக் (45), வீட்டில் வைத்து மே 5-ஆம் தேதி தாக்கப்பட்டதில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். கொல்கத்தாவில் நியூ டவுன் என்ற பகுதியில், கட்சி அலுவலகம் யாருக்கு என்பது தொடர்பான மோதலில் பாஜக ஊழியர் மது மண்டல் (46) உயிரிழந்தார். இவரைத் தாக்கியவரின் வீடு சேதப்படுத்தப்பட்டது. உதய்நாராயண்பூர் என்ற இடத்தில் பாஜக ஊழியர் ஜாதவ் (45), நானூர் என்ற இடத்தில் திரிணமூல் பிரமுகர் அபிர் ஷேக் (45) ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும் பல இடங்களிலும் கட்சி அலுவலகங்கள் தாக்கப்பட்டன. கொடிகள் கிழிக்கப்பட்டன.
வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. எல்லாவற்றுக்கும் உச்சமாக, முதல்வராகப் பதவியேற்றுள்ள பாஜக பிரமுகர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சந்திரநாத் (42) வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் கடந்த மே 6-ஆம் தேதி இரவு காரில் சென்றபோது மற்றொரு காரில் பின்தொடர்ந்து வந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் இந்திய விமானப் படையில் அதிகாரியாகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற பின்னர், சுவேந்து அதிகாரியின் உதவியாளராக இருந்து வந்தார். இந்தக் கொலைக்கு திரிணமூல் காங்கிரஸேரே காரணம் என பாஜகவினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
மேற்கு வங்கத்தில் இதுபோன்ற அரசியல் படுகொலைகள் 1970-களிலேயே தொடங்கிவிட்டன. பூர்வ வர்தமான் மாவட்டத்தில் காங்கிரஸ் ஊழியரான நப குமார் 1970 மார்ச் 17-இல் தாக்கப்பட்டார். அவரது குடும்பத்தினர் எதிரிலேயே அவரது கண்கள் தோண்டி எடுக்கப்பட்டன. அவரும் இரண்டு சகோதரர்களும் கொல்லப்பட்டனர்.
கொல்கத்தாவில் 1971 பிப்ரவரியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் ஹேமந்த் பாசு படுகொலை செய்யப்பட்டார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தொடங்கிய அரசியல் வன்முறை, இடதுசாரிகளின் ஆட்சிக் காலத்தில் பரவலானது; திரிணமூல் ஆட்சியில் நிலைகொண்டுவிட்டது.
கடந்த 2011-ஆம் ஆண்டு திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தபோது, உள்ளூர் இடதுசாரி பிரமுகர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள திரிணமூல் காங்கிரஸுக்கு தாவினார்கள். அதனால் ஆட்சி மாறினாலும் வன்முறை காட்சி மாறவில்லை. ஆளும் கட்சியினர்மூலம் விநியோகிக்கப்படும் அரசு மானியங்களில் குறிப்பிட்ட சதவீதத்தைக் கழித்துக் கொண்டு ("கட் மணி') கொடுப்பது என்பது மரபாகவே ஆகிவிட்டது.
கடந்த பத்து ஆண்டுகளாக, அங்கு பாஜக வளர்கிறது என்பது தெரிந்தவுடன், திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் பாஜகவில் இணைந்துள்ளனர். இப்போது முதல்வராகி உள்ள சுவேந்து அதிகாரியே முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக விளங்கியவர்தான். பெரும்பாலானவர்கள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதால், அங்கு வழக்கம்போலவே தேர்தலுக்குப் பின்னர் வன்முறை தாண்டவமாடியது.
தொடர் வன்முறை, புரையோடிய ஊழல் ஆகியவற்றில் விரக்தி அடைந்ததால்தான் மக்கள் பெருவாரியாக பாஜகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள். பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் லாலு பிரசாத் யாதவ் ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டபோது முதல்வரான நிதீஷ் குமார் அதை மீட்டெடுத்ததுபோல, இப்போது மேற்கு வங்கத்தை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு பாஜகவுக்கு இருக்கிறது.
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, இன்று வங்காளம் முன்னெடுத்ததை நாளை இந்தியா பின்பற்றும்' என்று சொல்லும் அளவுக்கு தேசத்துக்கு வழிகாட்டியாக இருந்த மாநிலம், வன்முறை கலாசாரத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்டால்தான் அடுத்தகட்டமாக வளர்ச்சி குறித்துச் சிந்திக்க முடியும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுக்கிறது காங்கிரஸ், திரிணமூல் : அமித் ஷா

மேற்கு வங்கத்தில் இரு கட்சியினரிடையே கலவரம்: வாக்குப்பதிவு பாதிப்பு!

சோதனைக் களத்துக்கு தயாராகும் மேற்கு வங்கம்!

சூரத் - மேற்கு வங்கம் இடையே இலவச ரயில் பயணம்? பாஜக மீது திரிணமூல் புகார்!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

