ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களான பிறகு, லடாக் பிரதேசத்தில் கடந்த ஆறேழு ஆண்டுகளாகப் போராட்டங்களும், எதிர்ப்புக் குரல்களும் எழுந்து வருகின்றன. தற்போது உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்கு அமைதி திரும்பலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உள்ளூர் அமைப்புகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளதால் பதற்றம் நிலவுகிறது.
லே, கார்கில் ஆகிய நகராட்சிகளுக்கு இம்மாதம் 21-ஆம் தேதியும், 8 மலைப்பிரதேச மேம்பாட்டுக் கவுன்சில்களுக்கு டிசம்பர் 4-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறைகள் தொடங்கியுள்ளன. முக்கியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ், ஆம்-ஆத்மி, தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவை தேர்தலில் பங்கேற்கத் தயாராகி வருகின்றன.
ஆனால், உள்ளூரில் சமூக-அரசியல் செல்வாக்கு கொண்ட 'லே அபெக்ஸ் பாடி', கார்கில் ஜனநாயகக் கூட்டணி ஆகியவை கடந்த 12-ஆம் தேதி முதல் என்.டி.எஸ். நினைவுப் பூங்காவில் காலவரம்பற்ற தர்னாவில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் நடத்தை விதிமுறையின்கீழ் தடை உத்தரவு அமலில் உள்ளதால் போராட்டத்தின் நாயகரான சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் களத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2019-இல், லடாக் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டபோது மத்திய அரசு அளித்த வாக்குறுதிகள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் போராட்டத்துக்குக் காரணம். மத்திய அரசால் நேரடியாக நிர்வகிக்கப்படும் லடாக்கை சுயாட்சி அதிகாரம் கொண்ட தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும்; 90 சதவீதம் பழங்குடியினர் பட்டியலில் உள்ள லடாக் மக்களின் நிலம், கலாசாரம், மொழி மற்றும் உரிமைகளைப் பாதுகாக்க அரசமைப்பு பிரிவு 244-இன் கீழ் ஆறாவது அட்டவணையில் (வட கிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயம், மிசோரம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களின் 10 பகுதிகளைப்போல) லடாக்கை சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
இப்போது, உறைபனி காலம் தொடங்கியுள்ளது. மக்கள் உயரமான மலைப் பகுதிகளிலிருந்து தாழ்வான பகுதிகளுக்கும், நகரங்களுக்கும் இடம்பெயர்ந்து வருகின்றனர். எனவே, அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தக் கூடாது; தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதால் நிலைமை சிக்கலாகி உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும், உள்ளூர் தலைவர்களுக்கும் இடையே அவ்வப்போது நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் ஜாண் ஏறினால் முழம் சறுக்குகிறது. கடைசியாக அக்டோபர் 15 முதல் 18 வரையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அக்டோபர் 22-க்கு ஒத்திவைக்கப்பட்ட பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.
இப்போது, தேர்தல் முடிவடைந்த பிறகு டிசம்பர் 5-இல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில அந்தஸ்தும், அரசமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்ப்பதும்தான் சிக்கல் நீடிக்கக் காரணம்.
தன்னாட்சி அதிகாரம் வழங்கும் ஆறாவது அட்டவணையில் சேர்க்க அரசமைப்பு திருத்தம் தேவை. மேலும், எல்லைப் பாதுகாப்பு ஒத்துழைப்புப் பிரச்னை ஏற்படலாம். நிதி தேவைக்கு மத்திய அரசை சார்ந்திருக்க வேண்டும். அது அரசியல் ரீதியிலான மோதல்களை உருவாக்கும் என்பதால் மத்திய அரசு தயங்குகிறது. எனவே, லடாக்கின் தேவைக்கேற்ற சிறப்புப் பிரிவு ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில் டிசம்பரில் பேச்சுவார்த்தை நடைபெற்றால் பிரச்னைக்குத் தீர்வு ஏற்பட வாய்ப்புண்டு.
மாநில அந்தஸ்து கோரி கடந்த ஆண்டு செப்டம்பரில் நிகழ்ந்த வன்முறையின்போது போலீஸாருடன் ஏற்பட்ட மோதலில் 4 பேர் உயிரிழந்தனர். ஆறு ஆண்டுகளாக அமைதி வழியில் போராடி வந்த வேலைவாய்ப்பற்ற 'ஜென்-ஸீ' இளைஞர்கள் சலிப்படைந்து வன்முறையில் ஈடுபட்டதாலேயே அந்தப் போராட்டம் எழுந்தது என்று ஊடகங்கள் கூறுகின்றன. அப்போது போராட்டத்துக்கு காரணமானவராக குற்றஞ்சாட்டப்பட்ட சோனம் வாங்சுக்தான் இப்போதும் போராட்டத்தில் தீவிரம் காட்டி வருவதால் அச்சம் நிலவுகிறது.
லடாக்கின் கல்வி அறிவு சதவீதம் 97. இது தேசிய சராசரியைவிட அதிகம். ஆனால், வேலை இல்லாமல் இருப்போர் 26.5 சதவீதம். இது தேசிய சராசரியைவிட இரண்டு மடங்கு அதிகம் என்பது இளைஞர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. எனவே, வேலைவாய்ப்பை அதிகரிக்க பிரதேச அளவில் தனி ஆள்தேர்வு அமைப்பை ஏற்படுத்தினால் இளைஞர்கள் அமைதி அடையலாம்.
இந்தியா-சீனா எல்லைப் பதற்றங்களின் மையமாக இருக்கும் இமயமலையின் உயரமான, குளிர்ச்சியான பாலைவனம் போன்ற லடாக், நாட்டின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. ராணுவ ரோந்து வாகனங்கள் செல்லக் கூடிய முக்கிய சாலைகள், விமானத் தளங்கள், வீரர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் மற்றும் கருவிகளை எடுத்துச் செல்லக்கூடிய வழித்தடங்கள் இப்பகுதியில் அமைந்துள்ளன.
நாட்டின் பாதுகாப்புக் கருதி இரு தரப்பும் அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு இடம்கொடுக்காமல் ஆக்கபூர்வமாகச் செயல்பட்டால் மட்டுமே அமைதி ஏற்படும். லடாக்கில் அமைதி நிலவுவது பாதுகாப்பு ரீதியாக மிகவும் அவசியம். பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியான கார்கில், திட்டமிட்டு பயங்கரவாதிகள் ஊடுருவும் பகுதி மட்டுமல்ல, சீனா ஆக்கிரமிக்கக் காத்திருக்கும் பகுதியும்கூட. மத்திய அரசின் தயக்கத்துக்குக் காரணம் இருக்கிறது.
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.
செயலை முடிக்கும் வகையும், வரக்கூடிய இடையூறும், முடிந்தபோது கிடைக்கும் பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செய்ய வேண்டும்.
திருக்குறள் (எண் 676) அதிகாரம்: வினைசெயல்வகை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


