கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மருத்துவக் கல்வி: தேவை தொலைநோக்கு

மனதுக்கு ஆத்ம திருப்தி அளிக்கக்கூடிய சேவைத் துறையாகவும் மக்களின் நன்மதிப்பை பெற்றதாகவும் மருத்துவத் துறை இருந்த காலம் உண்டு. இன்னும் சொல்லப் போனால் ஒருவர் எம்.பி.பி.எஸ். முடித்து மக்களுக்குச் சேவை செய

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:12 pm

ஜே.ரங்கராஜன்

மனதுக்கு ஆத்ம திருப்தி அளிக்கக்கூடிய சேவைத் துறையாகவும் மக்களின் நன்மதிப்பை பெற்றதாகவும் மருத்துவத் துறை இருந்த காலம் உண்டு. இன்னும் சொல்லப் போனால் ஒருவர் எம்.பி.பி.எஸ். முடித்து மக்களுக்குச் சேவை செய்து மண்ணுக்குள் மடியும் வரை "டாக்டர்' என்ற நிரந்தர அடையாளத்தை மக்கள் வழங்கி கௌரவித்து வந்தனர்.

ஆனால், நோய் வந்துவிட்டால் பொது மருத்துவர் முதல் பல சிறப்பு மருத்துவர்கள் வரை பெரும்பாலான நோயாளிகள் செல்வதிலிருந்தே, இன்றைய மருத்துவக் கல்வியின் தரம், மருத்துவ சேவையின் தரத்தை உரசிப் பார்த்துக் கொள்ளலாம். "டாக்டர்' என்ற நன்மதிப்பும் குறைந்து விட்டது.

உலக அளவில் பொருளாதார சரிவு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக  எம்.பி.பி.எஸ்.  படிப்பில் சேரத் துடிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

ஆனால், தமிழகத்தில் மொத்தம் உள்ள 15 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மாநில ஒதுக்கீட்டு எம்.பி. பி.எஸ். இடங்களோ 1,483தான். ஆனால், எம்.பி. பி.எஸ். படிப்பில் சேர விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கையோ 10 மடங்குக்கு மேல். அதாவது, கடந்த ஆண்டு 16,000 மாணவர்கள் விண்ணப்பித்து, ஏராளமானோர் இறுதியில் விரும்பியது கிடைக்காமல் கிடைத்த படிப்பில் சேர்ந்தனர்.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் அரசு அளவில் போதிய அளவுக்கு மருத்துவக் கல்லூரிகள் இவ்வளவு காலம் ஏற்படாமல் போனதற்கு இந்திய மருத்துவக் கவுன்சில்தான் முக்கியக் காரணம். ஏனெனில் மனித உயிரைக் காக்கும் மருத்துவக் கல்வியின் தரத்தைக் காக்க வேண்டிய பொறுப்பு தன்னிச்சை அதிகாரம் பெற்ற இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு உள்ளது.  ஏனெனில் இந்திய மருத்துவக் கவுன்சில் செயல்படுவதற்கென்றே தனியாக சட்டப் பிரிவு உள்ளது. அந்தச் சட்டப் பிரிவின் அடிப்படையிலும் இந்திய மருத்துவக் கவுன்சில் செயல்படவில்லை என்பதுதான் துரதிருஷ்டம்.

மாறாக, ஊழலின் ஊற்றுக் கண்ணாக இந்திய மருத்துவக் கவுன்சில் கடந்த பல ஆண்டுகளாகச் செயல்பட்டு, நாடு முழுவதும் பணம் கொழிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளை-பல்கலைக்கழகங்களை தொடர்ந்து ஊக்குவித்து வந்துள்ளது. இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக இருந்த கேதன் தேசாயை அண்மையில் சிபிஐ போலீஸôர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதே இதற்குச் சான்றாகும்.

இனியாவது மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்தி, நல்ல மருத்துவர்கள் உருவாவதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய அரசின் உறுதுணையுடன் இந்திய மருத்துவக் கவுன்சில் தொலைநோக்குடன் எடுக்க வேண்டும்.

குறிப்பாக எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் உடற்கூறு இயல் ("அனாடமி'), உடலியங்கியல் ("ஃபிஸியாலஜி'), உயிரி வேதியியல் ("பயோகெமிஸ்ட்ரி') போன்ற  அடிப்படை மருத்துவப் படிப்புகளை கற்பிக்கும் முதுநிலை மருத்துவப் படிப்பு முடித்த  ஆசிரியர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் போதிய எண்ணிக்கையில் இல்லை. இந்தப் பிரிவுகளுக்கான முதுநிலைப் படிப்புகளில்  எம்.பி.பி.எஸ். முடிப்போர் சேருவதற்கான இடங்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமாக இருப்பதே இதற்குக் காரணம்.

எனவே அனாடமி உள்ளிட்ட முதுநிலைப் படிப்பு இடங்களை அதிகரிப்பதற்கு உடனடி

நடவடிக்கைகளை இந்திய மருத்துவக் கவுன்சில் எடுக்க வேண்டும். இதன் மூலம் வருங்காலத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க முடியும்.

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.10,000 மட்டுமே. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் லட்சக்கணக்கான ரூபாய் கட்டணத்துடன் ஒப்பிடும்போது, அரசு மருத்துவக் கல்லூரிகளில் குறைந்த கட்டணத்தில் தரமான மருத்துவக் கல்வி கற்பிக்கப்பட்டால், எதிர்காலத்தில் பொது மக்களுக்கு தரமான மருத்துவ சேவை கிடைக்க வாய்ப்பு உண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.